கிழக்கில்
மாகாண சபைத் தேர்தல் பிரசாரம் மிகவும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
வாக்குகளை அபகரிப்பதற்காக அரசியல்கட்சிகளின் தலைவர்களும், அவர்களால்
நியமிக்கப்பட்ட வேட்பாளர்களும் மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றலாமோ அதனையும்
விஞ்சி ஏமாற்றிவருவதனைக் காண முடிகிறது. ஆனால் எந்தவொரு தேர்தல் பிரசாரக் கூட்டத்திலும் மக்கள் அலையைக் காணமுடியாதுள்ளது.அதனால் வேட்பாளர்கள் சிலர் சிறு சிறு பொக்கட் கூட்டங்களை வைத்து வருகின்றனர். இது தேர்தலில் மக்களுக்கு அக்கறையின்மையை அல்லது அரசியல் கட்சிகளில் நம்பிக்கையின்மையைக் காட்டுவதாகவே உள்ளது.
கிழக்கில்
போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழமை போன்று அரசாங்கத்தை
விமர்சிப்பதிலேயே தனது முழுக்கவனத்தையும் செலுத்தி வருகின்றது.ஆரம்பத்தில் இதற்குக் கூட்டு வலுச் சேர்க்க முஸ்லிம் காங்கிரஸையும் தமிழ்க் கூட்டமைப்பு துணைக்கு அழைக்கப்பெரும் பாடுபட்டது. அதற்காக அவர்களது கால்களில் விழாக் குறையாகப் பேச்சுவார்த்தை களை நடத்தியது.
பின்னர் முஸ்லிம் மக்களில் ஒருவருக்கும் இல்லாத சமூக அக்கறை கொண்ட காவல் கட்சியாகத் தாமே இருப்பது போலவும் தமிழ்க் கூட்டமைப்பு பாசாங்கு செய்து நடித்து மு.கா வை எப்படியாவது வளைத்துப் போட எத்தனையே நாடகமாடியும் அது பலிக்காது முடியாது போனது. அதனால் இன்று தனித்து நின்று அரசை விமர்சிக்கும் தமது வழமையான செயலில் தமிழ்க் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது.
இதேவேளை ஜனாதிபதித் தேர்தலில் எதிர்த்து நின்று ஆட்சியமைத்த பின்னர் வழமைபோன்று அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சர் பதவிகளைப் பெற்று அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக இருந்துவரும் முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்தில் அரசுடன் இணைந்து போட்டியிடுவதாகவே இருந்தது.
பின்னர் வேட்பாளர் ஆசன இட ஒதுக்கீட்டில் அரசுடன் முரண்பாடு காணப்பட்டதாகக் கூறி அவர்கள் தனித்துக் கேட்க முடிவெடுத்தார்கள். வேட்புமனுவையும் தாக்கல் செய்தார்கள். அன்றிலிருந்து தமிழ்க் கூட்டமைப்பிற்கு இணையாக இவர்களும் அரசாங்கத்தை விமர்சிக்க ஆரம்பித்து அதனைச் செவ்வனே செய்து வருகிறார்கள். அத்துடன் வழமைபோன்று தாமே கிங் மேக்கர் எனும் வெற்றுக் கோஷத்தை முன்வைத்து ஆட்சியைத் தீர்மானிப்பவர்கள் தாங்களே எனவும் கூறி மக்களைத் திசை திருப்பும் அவர்களது வழமையான பணி நடைபெறுகிறது.
ஆனால் மு.கா விற்கு அரசுடன் ஆசனத் தெரிவில் முரண்பாடா? அப்படியெதுவுமே இல்லை. சுத்தப் பொய். இவ்விடயம் மு.காவின் கபட நாடகம். மு.காவிலுள்ள அதிமுக்கியமான மூவரின் கதை கட்டல் என்று அமைச்சர் அதாவுல்லா உறுதியாகத் தெரிவித்திருந்தார்.
இவர்கள் அரசுடன் பேசுவது போன்று பேசி பிரிந்து செல்வது போன்று வெளியேறி மக்கள் முதுகில் ஏறி சொகுசு சவாரி செய்யப் புறப்பட்ட உள்வீட்டுக் கதையையும் அமைச்சர் அதாவுல்லா தெரிவித்திருந்தார்.
பின்னர் அதனை மு.கா தலைவர் நேரடியாக அல்லாது மறைமுகமாக மேலோட்டமாக மறுத்திருந்தார். தேர்தல் காலம் என்பதால் கதைகள் பலவும் பலவிதமாக வெளிவரும். மக்கள்தான் தமது அரசியல் தலைமைகளின் உண்மைத் தன்மையை கடந்த கால அனுபவங்களை வைத்துத் தீர்மானிக்க வேண்டும்.
கிழக்கில் அரசாங்கக் கட்சியானது தனது பாரிய அபிவிருத்தி மற்றும் இனப்பாகுபாடற்ற மக்கள் சேவையை முன்வைத்து இத்தேர்தலில் போட்டியிடுகின்றது.
இதில் வேட்பாளர்களாக மூவின மக்கள் பிரதிநிதிகளும் உள்ளனர். அமைச்சர்களான அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்கள், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சந்திரகாந்தன் உட்பட மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்கள், இவற்றுக்கும் மேலாக சுதந்திரக் கட்சியின் உப தலைவர்களில் ஒருவரான பிரதியமைச்சர் முரளிதரனினால் சிபார்சு செய்யப்பட்ட அவரது சகோதரி ஆசிரியை ஒருவர் உட்பட புத்திஜீவிகள் எனப் பலதரப்பட்டவர்களும் அரசாங்கக் கட்சியில் போட்டியிடுகின்றனர்.
கிழக்கிலங்கையைப் பொறுத்தவரையில் அங்கு மூவின மக்களும் வாழ்ந்து வருகின்றனர். அங்கு இனவாதம் பேசுதல் என்பது அவ்வாறு பேசுவோரின் அறியாமையையே அது பறைசாற்றும்.
ஆனால் இத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது நேரடியாகவே தமிழ்த் தேசியம் பற்றியே பேசி வருகிறது. முஸ்லிம் காங்கிரஸை வளைத்துப் போடுவதற்காக அவர்கள் ஆரம்பத்தில் தமிழ் பேசும் சமூகம் என்ற நாடகத்தை ஆடினர்.
அது தோற்றுப் போனதும் நேரடியாக தமிழ்த் தேசியம். தமிழ் முதலமைச்சர் என்று இறங்கி விட்டனர். இப்போதும் முஸ்லிம் மக்களது ஓரிரு வாக்குகளாவது கிடைக்கலாம் என்பதற்காக அவ்வப்போது அதுவும் தலைவர் சம்பந்தன் அவர்கள் மட்டுமே தமிழ் பேசும் மக்கள் என விழித்து வருகின்றார். ஆகவே மொத்தத்தில் தமிழ்க் கூட்டமைப்பு தமிழ்வாதம் பேசி இத்தேர்தலில் போட்டியிடுகின்றது.
இதேபோன்று
மு.கா எனும் முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் வாதம் பேசுகிறது என்று கூறினால்
அதில் தவறில்லை. மு.கா இன, மத ரீதியாக செயற்படும் ஒரு கட்சியல்ல என்று அதன்
தலைவர் ஹக் கீம் அவர்கள் ஓரிரு மேடைகளில் கூறிவரி னும் அதுவும் சம்பந்தன்
அவர்களின் நடிப்புப் போன்றதொரு விடயமே என்பது மக்களுக்கு நன்கு தெரியும்.அப்படியிருந்திருந்தால் மு.கா தனது வேட்பா ளர் பட்டியலில் ஒரு தமிழரையாவது நியமித் ததா எனும் கேள்வி நிச்சயம் மக்கள் மனதில் எழவே செய்யும்? தமிழ்க் கூட்டமைப்பு வெறுமனே கண்துடைப்பிற்காகவேனும் இரண்டு முஸ்லிம் வேட்பாளர்களை நியமித்துள்ளது. ஆனால் அரசாங்கக் கட்சியிலோ தமிழர், முஸ்லிம்கள், சிங்க ளவர் ஆகிய மூவினத்தவருக்கும் இன விகிதாசாரத்திற்கேற்ப சம அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளமையைக் காணமுடி கின்றது. கிழக்கில் மூவின மக்களும் ஒற்று மையாக வாழ்வதன் மூலமே அம்மாகாணத் தைக் கட்டியெழுப்பலாம் என்பதை அரச ¡ங்கம் நன்கு உணர்ந்துள்ளமையே இதற்குக் காரணம். இதுவே உண்மை, இதுவே யதார்த்தம். இதனைக் கிழக்கு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் அதாவுல்லா, ரிசாத் பதியுதீன் ஆகியோர் தமது கட்சியினதும், அதற்கும் மேலாகத் தாம் சார்ந்த முஸ்லிம் சமூகத்தினதும் தனித்துவத்திற்கு எவ்விதமான பங்கமும் வந்துவிடாத வகையில் திட்டமிட்டுச் செயற்பட்டு வருகின்றனர். அதேபோன்று பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், மட்டக்களப்பு ஸ்ரீ ல.சு.க அமைப்பாளர்களான அருண் தம்பிமுத்து, அலிசாஹிர் மெளலானா போன்றோரும் தமது பங்களிச் பைச் செவ்வனே செய்து வருகின்றனர்.
அரசாங்கத்திலிருந்து கொண்டே அரசாங்கத்தை விமர்சிப்பதனால் மக்கள் தம்மை ஹீரோவாக எண்ணுவார்கள் என்றும் அதனை நம்பித் தமக்கு வாக்களிப்பார்கள் என்றும் சில கட்சிகளுக்கு ஒரு நப்பாசை உள்ளது. அது பழைய முன்னொரு காலத்து மக்களது நிலைப்பாடு. இப்போது மக்களுக்குத் தமது தலைவர்களது ஒவ்வொரு அசைவும், நரித்தனமும் நன்கு தெரியும்.
இனவாதத்தையும், பிரதேச வாதத்தையும் வைத்து இனியும் தம்மை வளர்க்கலாம் என்று நினைத்தால் அதனைவிட முட்டாள் தனம் எதுவுமாக இருக்க முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தை விமர்சிக்கின்றது. என்றால் அது ஒன்றும் புதிய விடயமல்ல. அது அவர்களது தாரக மந்திரம். புலிகளின் காலத்திலிருந்தே கடைப்பிடித்துவரும் ஒன்றுக்குமே உதவாத கொள்கை.
தமிழ் மக்களை அந்தளவிற்கு தமிழ்க் கூட்டமைப்பு முட்டாளாக்கி வைத்துள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். வடக்கில் இதனால்தான் அவர்களால் சில பிரதேச சபைகளைக் கைப்பற்ற முடிந்தது. ஆனால் கைப்பற்றி என்ன பலன்? இன்று ஒரு வீதியைக் கூடப் போட முடியாத நிலையிலேயே அச்சபைகளின் நிர்வாகம் உள்ளது.
மத்திய அரசாங்கத்துடன் பகைமையை வைத்துக் கொண்டு உள்ளூராட்சி நிர்வாகத்தை எவ்வாறு கையாள முடியும்? இன்று அங்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் மத்திய அரசின் அமைச்சர்களின் நிதிகளைக் கொண்டே பாரிய அபிவிருத்திகளை முன்னெடுக்க முடிகின்றது. இவர்கள் ஆர்ப்பாட்டமும், போராட்டமும் என்று பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், மு.கா வின் நிலையோ சற்று மாறுபட்டது. அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அதி முக்கியமான அமைச்சர் பதவி. அதேபோன்று அதிமுக்கிய பிரதியமைச்சர் பதவி. சகல அரச வளங்களையும் பயன்படுத்தக்கூடிய அரச அதிகாரம் கைகளில் உள்ளது. ஆனால் தாம் சார்ந்திருக்கும் தமக்கு வளங்களைத் தந்து கொண்டிருக்கும் அந்த அரசையே விமர்சிக்க தகவல்களைத் தேடுகிறது. முஸ்லிம்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை எனக் கூக்குரலிடுகிறது. இதைத்தான் மக்களால் புரிந்து கொள்ள முடியாமலிருக்கிறது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதில் எவ்விதமான தவறும் கிடையாது. பிரதேச ரீதியான கட்சிகள் தமது மக்கள் பலத்தை முழுமையாகப் பெறுவதற்காக தனித்துப் போட்டியிடுவதில் தவறிருப்பதாக தெரியவில்லையென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஒரு சந்தர்ப்பத்தில் தெரிவித்திருந்தார்.
ஆனால் அரசாங்கத்தில் அங்கம் வகித்துக் கொண்டும், பங்காளிக் கட்சியாக இருந்து கொண்டும், அதே மாகாணத்தில் அரசாங்கக் கட்சியும் போட்டி போடுகையில் அரசாங்கத்தை மட்டமாக விமர்சிப்பதை எந்தளவிற்கு ஏற்றுக் கொள்ள முடியும் என்பதே கேள்வி? அரசாங்கம் இதனைப் பொருட்படுத்தாது, பெரிதாக அலட்டிக் கொள்ளாவிடினும் அது அரச கட்சி ஆதரவாளர்கள், வேட்பாளர்களுக்கு பெரும் தர்மசங்கடத்தையே ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
வென்ற பின்னர் நிச்சயம் அரசுடன் தாம் இணைந்து கொள்வோம் என்றால் ஏன் அந்த வெற்றியை அரசுடன் இணைந்து பெற்றுக் கொள்ள மு.கா முன்வரவில்லை எனும் கேள்வியும் மக்கள் மனங்களில் எழுகின்றது. அதே மாகாணத்தில் அரசாங்கக் கட்சி போட்டியிடவில்லை என்றால் இவர்களது வென்றபின் வருகிறோம் என்பதை ஓரளவு ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.
அரசாங்கம் மீது மக்கள் அதிருப்தி கொண்டுள்ளார்கள் என்று மு.கா தலைவர் தேர்தல் மேடைகளில் வெளிப்படையாகவே கூறிவருகிறார். ஆனால் அதே அரசாங்கத்தில்தான் தான் ஒரு முக்கியமான அமைச்சர் பதவியை வகித்து வருவதை அவர் மறந்துவிட்டார். அத்துடன் இதே அரசாங்கத்துடன்தான் வென்றபின்னர் இணையப்போவதாகக் கூறிவருவதையும் அவர் அவ்வப்போது மறந்தும், மறைத்தும் வருகிறார்.
இதில் எது உண்மை? எது பொய் என்பது புரியாது மக்கள்தான் குழம்பிப் போயுள்ளனர். இவ்வாறு அரசாங்கத்தை மிகவும் அபத்தமாகப் பேசிவரும் மு.கா தலைவர் குறைந்தது தேர்தல் முடியும் வரையாவது அமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்து விட்டு அரசிற்கு எதிராகப் பிரசாரம் செய்து வெற்றியைத் தனதாக்கிக் கொள்வாராயின் மக்கள் இவரை ஓரளவு நம்ப வாய்ப்புள்ளது. ஆனால் இது கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்பதாகவே உள்ளது.
தமிழ்க் கூட்டமைப் பைப் பொறுத்தவரையில் அவர்கள் சமூகத்தை விடவும் தமது குடும்ப உறுப்பினர்களுக்காக அரசாங்கங்களிடம் சோகை போன வரலாறு நிறையவே உள்ளது. தமிழர் பிரச்சினை பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்போகும் போதும் தமது குடும்ப உறுப்பினர்களுக்கு ஐரோப்பிய விஸா பெறுவதிலும், தமது பிள்ளைகளுக்கு அரச புல மைப்பரிசில் பெறுவதிலுமே அதிக அக்கறை காட்டிச் செயற்படுவது அவர்களுக்கு கைவந்த கலை.
கிழக்கு தேர்தல் மேடைகளில் எதிர்க்கட்சியிலிருப்போரை விடவும் அரசை விமர்சிப்பதில் மு.கா. முன்னிலை வகிக்கின்றது என்றால் ஏற்காதவர் எவருமே இருக்க மாட்டார்கள். எனவே ஆட்சியைத் தீர்மானிப்பது நாமே எனும் மு.கா வின் புளித்துப் போன கதையும், அதிகாரத்தைக் கைப்பற்றுவது நாமே எனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உப்புச் சப்பில்லாக் கதையும் சமாதானத்தையும், இன ஒற்றுமையையும், மாகாணத்தின் அபிவிருத்தியையும் விரும்பும் கிழக்கிலங்கைமக்களுக்குத் தேவையற்றதொரு விடயம். அதனை கிழக்கிலங்கை மக்கள் நன்கு விளங்கி வைத்துள்ளார்கள்.
No comments:
Post a Comment