யாழ்.
மாவட்டத்தில் படைக்குறைப்புச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற
போதும் அது திருப்திகரமானதாக இல்லை என்று யாழ். ஆயர் வண. தோமஸ்
சௌந்தரநாயகம் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்டத்துக்கு நேற்றைய தினம் வருகை தந்த இலங்கைக்கான
அமெரிக்கத் தூதரகத்தின் இரண்டாம்நிலை அதிகாரியான வில்லியம்ஸ் கைன் ஸ்ரைன்,
யாழ். ஆயரை அவரது இல்லத்தில் நேற்று மாலை சந்தித்துக் கலந்துரையாடினார்.
கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த யாழ். ஆயர்,
“”யாழ். மாவட்டத்தில் படைக்குறைப்பு மேற்கொள்ளப்பட்டதாக அரசு
தெரிவிக்கின்றது. இது தொடர்பில் திருப்தி கொள்கின்றீர்களா என்று என்னிடம்
கேட்டனர். இந்தப் படைக்குறைப்பு விடயத்தில் எனக்குத் திருப்தியில்லை என்று
பதிலளித்தேன்.
மீள்குடியமர்வு நடவடிக்கைகளை அரசு சரியாகச் செய்யவில்லை. இவற்றில்
நிறையக் குறைபாடுகள் இருக்கின்றன. மக்களுக்கு ஒழுங்கான முறையில் வீட்டுத்
திட்டங்கள் சென்றடையவில்லை. மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான
உதவிகள் குறைவாகவே உள்ளன என்று அவர்களிடம் தெரிவித்தேன் என்றார் ஆயர்.
சந்திப்புத் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
வடக்கு மாகாணசபைத் தேர்தல் அரசினால் இதுவரையில் நடத்தப்படவில்லை.
மக்களுக்கான அரசியல் தீர்வு முன்வைக்கப்படவில்லை. தமிழ் மக்களின்
தலைவர்களுடன் அரசியல் தீர்வு தொடர்பில் நடத்தப்பட்ட பேச்சு உரியமுறையில்
மேற்கொள்ளப்படவில்லை.
அரசு மக்களுக்கான உதவிகளை செய்து வருவதாகவும், அபிவிருத்திப் பணிகளை
மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கின்ற போதும் அது மக்களைச் சரிவரச்
சென்றடையவில்லை. இதனால் அவர்கள் அரசு மீது அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
அரசு மீது குற்றஞ்சாட்டுகின்றனர். அரசுக்கும் மக்களுக்கும் இடையில் வெளி
காணப்படுவதற்கு இதுவே காரணம். மக்களுக்கும் அரசுக்கும் இடையில் இடைவெளி
இருப்பதனால் தான் வடமாகாண தேர்தலைக் கூட ஒத்திவைக்கின்றேன் வடமாகாணசபைத்
தேர்தலை நடத்தினால் அரசு மக்களுடன் இல்லை என்று தெரிந்துவிடும்.
மக்களது காணிகளில் முகாம்களை அமைப்பது தொடர்பிலும் எடுத்துக்
கூறினேன். நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் எத்தனையோ குறைபாடுகள்
உள்ளன. இருப்பினும் அது கூறிய பரிந்துரைகளை நிறைவேற்றினாலேயே மக்களுக்கு
உதவியாக இருக்கும்.
இந்த விடயங்களை அமெரிக்கப் பிரதிநிதியிடம் எடுத்துக் கூறி
இருக்கின்றேன் என்று தெரிவித்தார் ஆயர். இதேவேளை, இலங்கைக்கான
அமெரிக்காவின் புதிய இரண்டாம் நிலைத் தூதுவர் தமிழ்த் தேசியக்
கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்களை தமிழரசுக் கட்சி
தலைமையகத்தில் மாலை 5 மணிக்கு சந்தித்துக் கலந்துரையாடினார்.
வலி.வடக்கு பிரதேச சபைத் தலைவர் சோமசுந்தரம் சுகிர்தன், வலி.தெற்கு
பிரதேச சபைத் தலைவர் தி.பிரகாஷ், வலி.தென்.மேற்கு பிரதேச சபைத் தலைவர்
அ.ஜெபநேசன், சாவகச்சேரி பிரதேச சபைத் தலைவர் சி.துரைராஜா, வலி.மேற்கு
பிரதேச சபைத் தலைவர் திருமதி. நா.ஜங்கரன் ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில்
பங்குபற்றினர்.
இதன் போது, “எங்களை நாங்களே நிர்வகிக்கும், வடக்கு கிழக்கு இணைந்த
சுயாட்சியுடன் கூடிய தீர்வே தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். மேலும்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றிய உள்ளுராட்சி மன்றங்களின்
அபிவிருத்தி திட்டங்களுக்கு அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடைகளை
ஏற்படுத்தி வருகின்றனர்.
தமிழர்கள் புர்வீகமாக வாழ்ந்த பிரதேசங்கள் இராணுவத்தினரால்
அபகரிக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் இடம்பெயர்ந்து இன்றும் நலன்புரி
நிலையங்களிலேயே தங்கி வாழ்கின்றனர். இலங்கை அரசால் திட்டமிட்ட ரீதியில்
சிங்கள குடியேற்றங்கள் தமிழர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
புனர்வாழ்வளிக்கபட்டு விடுதலை செய்யப்படுகின்ற போராளிகளுக்கு இன்னமும்
அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன.” என்று அமெரிக்கப் பிரதிநிதியிடம்
பிரதேச சபைகளின் தவிசாளர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment