சிறிலங்காவில்
உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில்,அங்கு
உறுதியான,இறுதியான அமைதித் தீர்வு கொண்டு வரப்பட வேண்டும் என்று
தென்னாபிரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. ‘சிறிலங்கா தீவில் இடம்பெற்று வரும் மீளிணக்கப்பாடு மற்றும் யுத்தத்தின் பின்னான நாட்டைக் கட்டியெழுப்பும் திட்டங்கள் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துடன் தொடர்ந்தும் தொடர்புகளைப் பேணி வந்துள்ள தென்னாபிரிக்க அரசாங்கம், சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்ற மீறல்கள் தொடர்பாக முதலில் தீர்வு காணப்படவேண்டும் என்பதை எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளது.
இவ்வாறான மீறல்கள் தேசிய மட்டத்தில் தீர்வு காணப்பட வேண்டும் என்றும், இவ்வாறு செய்வதன் மூலம் நாடு பயன்மிக்க பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ளும் என்பதிலும் தென்னாபிரிக்க அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது’ என தென்னாபிரிக்காவின் அனைத்துலகத் தொடர்பாடல் மற்றும் ஒத்துழைப்புக்கான திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீளிணக்கப்பாட்டு முயற்சி தமிழ் சமூகத்தின் சுதந்திர உரிமையை முதன்மைப்படுத்தி கலந்துரையாடப்பட்டு இதயசுத்தியுடன் முன்னெடுக்கப்படுவதுடன், அனைத்துலக சமூகத்தினதும், சிறிலங்காவிற்குள் உள்ளேயும் வெளியேயும் வாழும் சிறிலங்கர்களின் ஆதரவுடனும் முன்னெடுக்கப்படும் போது, சிறிலங்கா தீவில் நிலையான அமைதியை எட்டமுடியும் என்ற தென்னாபிரிக்க அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அனைத்துலக தொடர்பாடல் மற்றும் ஒத்துழைப்புக்கான திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
கடந்த மாதம் தென்னாபிரிக்காவின் அனைத்துலக தொடர்பாடல் மற்றும் ஒத்துழைப்புக்கான திணைக்களத்தின் பிரதி அமைச்சர் எப்ராகிம் எப்ராகிம், சிறிலங்கா தலைவர்கள், தமிழ் சமூகப் பிரதிநிதிகள், அரசசார்பற்ற நிறுவனங்கள் ஆகியவற்றுடன் சந்திப்புக்களை மேற்கொள்வதற்காக பொது அமைப்புப் பிரதிநிதிகளுடன் சிறிலங்காவுக்கு பயணம் செய்திருந்தார்.
சிறிலங்காவில் குருதி தோய்ந்த யுத்தம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து அங்கு நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியதன் தேவைப்பாட்டை முதன்மைப்படுத்துவதை நோக்காகக் கொண்டே பிரதி அமைச்சர் எப்ராகிம் சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொண்டதாக தென்னாபிரிக்காவின் அனைத்துலகத் தொடர்பாடல் மற்றும் ஒத்துழைப்புக்கான திணைக்களம்
தெரிவித்துள்ளது.
தென்னாபிரிக்காவின் அனைத்துலகத் தொடர்பாடல் மற்றும் ஒத்துழைப்புக்கான திணைக்கள அமைச்சர் Maite Nkoana-Mashabane மற்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிசுக்கும் இடையில் மார்ச் 2012ல் பிரிட்டோரியாவில் இடம்பெற்ற சந்திப்பைத் தொடர்ந்தே பிரதி அமைச்சர் எப்ராகிம் எப்ராகிம் குழுவினர் சிறிலங்காவுக்கு பயணம்
மேற்கொண்டிருந்தனர்.
இச்சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துதல் மற்றும் சிறிலங்காவில் நிவவும் தமிழர் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் தென்னாபிரிக்காவுக்கு சென்றிருந்த போது பிரதி அமைச்சர் எப்ராகிமையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
சிறிலங்கா தீவில் உண்மையான மீளிணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கு அது தொடர்பாக இதயசுத்தியுடன் பேச்சுக்கள் நடத்தப்பட வேண்டியதன் முக்கியத்துவம் மற்றும் சிறிலங்காவில் வாழும் தமிழ் சமூகத்தவர்களுக்கான உரிமை தொடர்பாகவும் இரு தரப்பினரும் விவாதித்தனர்.
மே 2009ல் யுத்தம் முடிவுற்றதைத் தொடர்ந்து ஏப்ரல் 2011ல் ஐ.நா செயலாளர் நாயகத்தால் நியமிக்கப்பட்ட வல்லுனர் குழுவினரின் அறிக்கை வெளியிடப்பட்டது.
அத்துடன் 2011 டிசம்பரில் சிறிலங்கா அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின்அறிக்கையும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் இவ் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு தொடர்ந்தும் அனைத்துலக சமூகம் சிறிலங்கா அரசாங்கம் மீது அழுத்தங்களை கொடுத்து வருகிறது.
இரு பத்தாண்டுகளுக்கு மேலாக சிறிலங்காவில் தொடர்ந்த உள்நாட்டுப் போர் பல பத்தாயிரக்கணக்கான மக்களின் உயிர்களைப் பறித்ததுடன், சிறிலங்காவின் பொருளாதாரத்தையும் நாசம் செய்துள்ளது எனவும் தென்னாபிரிக்காவின் அனைத்துலகத் தொடர்பாடல் மற்றும் ஒத்துழைப்புக்கான திணைக்களத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்செல்ல
No comments:
Post a Comment