Tuesday, September 25, 2012

கிழக்கு மாகாண அமைச்சரவையில் தமிழருக்கு இடமில்லை

najeeb-a-mujeebகிழக்கு மாகாணத்தில் தமிழர்களே அதிகம் வசிக்கின்ற போதிலும், கிழக்கு மாகாணசபை அமைச்சரவையில் தமிழர் ஒருவர் கூட அமைச்சராக நியமிக்கப்படவில்லை.
கிழக்கு மாகாணசபை அமைச்சர்களின் பதவியேற்பு நிகழ்வு நேற்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இதன்போது, ஏற்கனவே கிழக்கு மாகாண அமைச்சராகப் பதவி வகித்து வந்த தேசிய காங்கிரசைச் சேர்ந்த, எம்.எஸ். உதுமாலெப்பை, வீதி அபிவிருத்தி, வீடமைப்பு, நிர்மாண, மின்சார, நீர் வழங்கல் அமைச்சராக பதவியேற்றார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த விமலவீர திசநாயக்க மீண்டும் கல்வி மற்றும் காணி அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்த, ஹபீஸ் நசீர் அஹமட், விவசாய, நீர்ப்பாசன, கால்நடைகள் அமைச்சராகவும், எம்.ஐ.எம்.மன்சூர், சுகாதார, விளையாட்டு, தொழில்நுட்பக்கல்வி அமைச்சராகவும் பதவியேற்றுக் கொண்டனர்.
அதேவேளை, கிழக்கு முதல்வர் நஜீப் அப்துல் மஜீத், நிதி திட்டமிடல் அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.
இதனிடையே கிழக்கு மாகாணத்தில் 40 வீதமான மக்கள் தமிழர்களாக இருந்த போதிலும், தமிழர் ஒருவர் கூட அமைச்சராக நியமிக்கப்படவில்லை.
ஏற்கனவே, முன்னாள் முதல்வர் சந்திரகாந்தனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும், அவர் அதை நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.
கிழக்கில் தமிழர் ஒருவர் முதல்வர் பதவியைப் பெறும் வாய்ப்பு பறிபோனால் அதற்குக் காரணம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே என்று குற்றம்சாட்டிய, முன்னாள் முதல்வர் சந்திரகாந்தன், தற்போது கிழக்கில் தமிழர் ஒருவர் கூட அமைச்சராகப் பதவியேற்க முடியாத நிலைக்குக் காரணமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment