கச்சதீவு,
இலங்கைத் தமிழர்கள் படுகொலை, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், டெசோ ஏமாற்று வேலை
என்று அடுக்கடுக்காக தமிழினத்துக்கே இழிவை ஏற்படுத்திய கருணாநிதி தன்மானம் பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது என்று அ.தி.மு.க. சட்ட மன்ற உறுப்பினர் கலைராஜன் கடுமையாக சாடியுள்ளார்.1974ஆம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தபோது அன்று தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி அதனை தடுத்து நிறுத்த என்ன செய்தார்? மவுனசாமியாக இருந்து சம்மதம் தெரிவித்த தமிழின துரோகிதானே இந்த தன்மானம் பேசும் கருணாநிதி?
அன்றைக்கே தடுத்திருந்தால் இன்றைக்கு 550-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் உயிர் இலங்கை இராணுவத்தினரால் பறிக்கப்பட்டிருக்குமா?
1975-இல் புதுப்பிக்கப்படவேண்டிய காவிரி நதிநீர் ஒப்பந்தத்தை ஊழல் குற்றசாட்டிலிருந்து தன்னைக் காப்பாற்றிகொள்ள புதுப்பிக்காமல் விட்டு தமிழக விவசாயிகளை வஞ்சித்ததோடு, காவிரி குறுக்கே கர்நாடகா அணைகளைக் கட்டியபோது குறைந்தபட்ச எதிர்ப்பைக் கூட காட்டாது இருந்துவிட்டு, எத்தனை அணைகளை வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளட்டும் என்று பேசி தமிழக உரிமையை விட்டுக் கொடுத்துள்ளார்.
அம்மா முதல்வரான பின்பு காவிரி பிரச்சனைக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது போல் கருணாநிதி வழக்கு போடவேண்டாம் போடப்பட்டிருந்த வழக்கையும் உச்சநீதிமன்றத்திலிருந்து இந்திராவின் கோரிக்கையை ஏற்று வாபஸ் பெற்று தமிழகத்திற்கு துரோகம் புரிந்த கருணாநிதியின் செயல் தன் மானமிக்கதா?
முல்லைப்பெரியாறு பிரச்சனையிலும் கேரளாவுக்குச் சாதகமாக செயல்பட்ட மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷிற்கு எதிராக மதுரையில் ஆர்பாட்டம் என்று அறிவித்து பின்பு சோனியாவிடமிருந்து வந்த தகவலுக்குப் பிறகு ஆர்பட்டத்தையே கைவிட்டு சரணாகதி அடைந்தாரே அப்போது அவரது தன்மானம் என்ன ஆனது?
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலால் தமிழினத்திற்கே மிகப்பெரிய இழிவைச் சேர்த்தது யார்? தமிழினமே தலை கவிழ நேர்ந்ததே! இதற்கு இந்த தன்மான வீரர் கருணாநிதி என்ன சொல்கிறார்?
இலங்கையில் லட்சக்கணக்கில் தமிழர்கள் சாகடிக்கப்பட்டபோது மவுனம் சாதித்து மத்திய அரசிற்கு கடிதம் எழுதியும், மனித சங்கிலி நடத்தியும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ராஜினாமா கடிதத்தை வாங்கி தானே வைத்துக் கொண்டும் மெரினாவில் உண்ணாவிரதம் இருந்தும் போர் முடிந்து விட்டது என்று கூறி ஒரே நாளில் 50,000 தமிழர்கள் சாவதற்குக் காரணமாகவும் இருந்தவர் யார்? இந்தத் தன்மானமில்லாக் கருணாநிதிதானே!
உண்ணாவிரதத்தை சிதம்பரம் கூறியதால் கைவிட்டதாகவும், அன்றைய அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கை அரசு ஏமாற்றிவிட்டது என்றும் பேசியது யார்? சரி ஏமாற்றிய இலங்கை ஜனாதிபதியை சந்தித்து பேசி பரிசுப் பொருட்களை வாங்கிவர தனது மகள் கனிமொழியை அனுப்பியது ஏன்? ஒரு பொய்யை மறைக்க இன்னும் எத்தனைப் பொய்யை கூறப்போகிறார் இந்த தன்மானமிக்க கருணாநிதி.
டெசோ என்று கூட்டத்தை நடத்தி அதன் மூலம் தனது துரோகத்தை மூடி மறைக்க முயன்று டுவிட்டரை திறந்ததும் ஒரே நாளில் வந்த விமர்சனக் கணைகளைக் கண்டு பீதியடைந்து டுவிட்டரை மூடியதும் இந்த தன்மானமிக்க கருணாநிதிதானே!
இப்படி கருணாநிதியின் தன்மானத்திற்கு கண்ணதாசன் இவரோடு நட்பாக இருந்த காலத்திலிருந்து சான்றுகள் தர நடந்த நிகழ்வுகளை ஒவ்வொன்றாகக் கூறத் தொடங்கினால் சந்தி சிரிக்குமே! தன்மானம் பற்றி கருணாநிதி இனிமேல் பேசாமல் இருப்பாரா?
இவ்வாறு கலைராஜன் தனது அறிக்கையில் கடுமை காட்டியுள்ளார்.

No comments:
Post a Comment