Sunday, September 23, 2012

காவிரியில் தண்ணீர் தராவிட்டால் கர்நாடக அரசை கலைக்க வேண்டும்: சீமான் அறிக்கை

seemanநாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-  கர்நாடக மாநிலத்தில் காவிரி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கபினி, ஹேமாவதி, ஹாரங்கி, கிருஷ்ணராஜ சாகர் ஆகிய நான்கு அணைகளிலும் இன்றைய நிலையில் 76 டி.எம்.சி. தண்ணீர் இருக்கிறது என்று ஒப்புக்கொள்ளும் கர்நாடக முதல்வர், அடுத்த 25 நாட்களுக்கு தமிழ்நாட்டிற்கு 20 டி.எம்.சி. தண்ணீரைக் கூட திறந்துவிட மறுப்பது அநியாயமாகும்.
இந்த அடிப்படையில்தான் நாள் ஒன்றிற்கு 2 டி.எம்.சி. தண்ணீரை 24 நாட்களுக்கு திறந்துவிடுமாறு தமிழக முதல்வர் காவிரி நதி ஆணையக் கூட்டத்தில் கோரிக்கையை வைத்தார். அதை ஏற்றுக்கொள்ள கர்நாடக முதல்வர் மறுத்த நிலையிலேயே நாள் ஒன்றிற்கு ஒரு டி.எம்.சி. தண்ணீராவது திறந்துவிடுமாறு தமிழக முதல்வர் கேட்டுக் கொண்டார்.

ஆனால் அதையும் ஏற்க மறுத்த கர்நாடக முதல்வர், இறுதியாக காவிரி ஆணையத்தின் தலைவரான பிரதமர், குறைந்த பட்சம் நாள் ஒன்றிற்கு 9,000 கன அடி நீரை அடுத்த 25 நாட்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொண்டதையும் ஏற்க மறுத்தார். பிரதமரின் கோரிக்கையை மறுத்ததோடு மட்டுமின்றி, கூட்டத்தில் இருந்து வெளிநடப்பும் செய்தார். இப்போது 9,000 கன அடி நீரை வழங்குமாறு காவிரி நதி ஆணையம் பிறப்பித்த உத்தரவையும் ஏற்க முடியாது என்று பெங்களூரில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்குப் பிறகும் அறிவிக்கிறார் என்றால், இது இந்திய நாட்டின் இறையாண்மையை மீறிய நடவடிக்கை இல்லையா?.
சட்டத்திற்குப் புறம்பான, இந்த நாட்டின் ஒற்றுமைக்கு உலைவைக்கக்கூடிய ஒரு முடிவை கர்நாடக முதல்வர் அறிவித்திருக்கிறார், மத்திய அரசு இதற்கு பதிலடி கொடுக்க வேண்டும். 1991ஆம் ஆண்டு முதல் இன்று வரை காவிரி நதி தீர்ப்பாயம் அளித்த உத்தரவுகளை ஒரு ஆண்டில் கூட முறையாக செயல்படுத்தவில்லை. காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய நீர் பங்கு உடனடியாக கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.
இல்லையேல், அரசமைப்பு சட்ட ரீதியாக அமைக்கப்பட்ட காவிரி ஆணையத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்த மறுக்கும் கர்நாடக அரசை நீக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment