Saturday, September 15, 2012

படைக்குறைப்பு, போர்க்குற்ற விசாரணை, வடக்கு தேர்தல் – விரைவாக நடக்க வேண்டும் என்கிறார் பிளேக்

Robert-blake-2012சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக், இறுதிக்கட்டப் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக துரிதமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வடக்கில் இருந்து சிறிலங்காப் படைகளை குறைக்க வேண்டும் என்று சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.
அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக் நேற்றும் இன்றும் கொழும்பில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் அமைச்சர்கள் மகிந்த சமரசிங்க, நிமால் சிறிபால டி சில்வா, சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் குடியியல் சமூகப் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தினார்.
அவர் தனது பயணத்தின் முடிவில் இன்று கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்தார்.

இதன்போது,“போர் முடிந்து மூன்று ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், தீவிரமான குற்றச்சாட்டுகள் மற்றும் மீறல்கள் குறித்து நம்பகமான, வெளிப்படைத்தன்மை கொண்ட, விசாரணைகளை நடத்தி சட்ட நடவடிக்கை எடுத்திருக்க முடியும்.
காணாமற்போனோர் தொடர்பாகவும் முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும்.
மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய விசாரணைகள் துரிதமாக நடத்தப்பட வேண்டும் என்று சிறிலங்கா அரசிடம் வலியுறுத்தியுள்ளேன்.
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பொறுப்புக்கூறல் மிகவும் முக்கியம்.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கில் அதிகளவில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா படையினரை குறைக்க வேண்டும் என்றும், குடியியல் நிர்வாகத்தில் அவர்களின் தலையீட்டைத் தவிர்க்குமாறும் சிறிலங்கா அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளேன்.
அதிகாரங்களை பகிர்ந்து கொள்வதற்கான இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கு, தமிழ் அரசியல் தலைவர்களுடனான பேச்சுக்களை சிறிலங்கா அரசாங்கம் விரைந்து ஆரம்பிக்க வேண்டும்.
அத்துடன் சிறிலங்காவில் மனிதஉரிமைகளுக்கு முழுமையாக மதிப்பளிக்கப்பட வேண்டும்.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்தித்த போது, 2013 செப்ரெம்பரில் வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்துவதாக உறுதியளித்திருந்தார்.
ஆனால், வடக்கு மாகாணசபைக்கான தேர்தலை அதற்கு முன்னதாக – கூடிய விரைவில் நடத்த வேண்டும்” என்றும் சிறிலங்கா அரசாங்கத்திடம் கேட்டுள்ளேன் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment