Monday, September 24, 2012

ராஜபக்சே பேச்சு வேதாளம் வேதம் ஓதுவது போல் இருக்கிறது: ‘லேட்’டாகப் பேசும் தமிழக பாஜக!

23-pon-radhakrishnan300மத்திய பிரதேச மாநில ஆளும் பாரதிய ஜனதா அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே அழைக்கப்பட்டு அடிக்கல் நாட்டு விழா நடந்து முடிந்துவிட்டது.
ராஜபக்சேவின் வருகையைக் கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அந்த மாநிலத்துக்கே போய் தமிழன் யார் என்று காட்டிவிட்டு வந்திருக்கிறார். ஆனால் தமிழக பாஜகவோ இப்போதுதான் ராஜபக்சேவை அடிக்கல் நாட்ட அழைத்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மத்திய பிரதேச மாநிலம் சாஞ்சி நகரில் அமைக்கப்பட்டுள்ள புத்த மத பல்கலைக்கழகத்தின் அடிக்கல் நாட்டு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே மற்றும் பூடான் பிரதமர் ஜிக்மே யோசர் தின்லே ஆகியோர் வர மத்திய அரசு அனுமதி அளித்தது.
புத்தருக்கு அவமானம்
அடிக்கல் நாட்டு விழாவில் ராஜபக்சே பேசிய பேச்சுக்கள் வேதாளம் வேதம் ஓதுவது போன்று அமைந்துள்ளன. தம் சொந்த நாட்டின் மக்கள் மீதே வஞ்சம் நிறைந்த நெஞ்சும், விரோதமனப்பாவமும், மதங்கள் மீதான வெறுப்பும் கொண்டு தன் ராணுவத்தை வைத்தே தமிழர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு பெரும் அழிவை ஏற்படுத்தி நம் தமிழ் சமுதாயத்தை கருவறுத்த இலங்கை அதிபர் ராஜபக்சே கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு சகிப்புத்தன்மை முக்கியமானது என்று பேசி உள்ளார். உலக மக்களுக்கு அகிம்சையை போதித்த புத்த பிரானின் பெயரால் அமைந்த பல்கலைக்கழகத்துக்கு தமிழனின் ரத்தக்கறை படிந்த பாழ்க்கரங்களால் அடிக்கல் நாட்டப்பட்டது, புத்தருக்கே அவமானம்.
ராஜபக்சேவின் போதனையால் கலங்கம்
அகிம்சா மூர்த்தியான காந்திஜியின் பெயரைக் கூட உச்சரிக்க அருகதையற்ற ராஜபக்சே அகிம்சை, அமைதி பரப்பவேண்டிய கடமை பற்றி பறைசாற்றியுள்ளார். இலங்கை தமிழரின் அறிவுசார் முன்னேற்றத்தை தாங்க முடியாமல் இரக்கமற்ற முறையில் செயல்பட்ட ராஜபக்சே இந்திய நாட்டுக்கு போதனை வழங்கி இருப்பது நம் நாட்டிற்கே கலங்கத்தை விளைவிக்கும்.
இனி அழைக்காதீர்கள்..
உலக நாடுகளால் போர் குற்றவாளியாக கருதப்படும் ராஜபக்சே, இந்திய அரசு காமன்வெல்த் விளையாட்டு, 20-20 கிரிக்கெட் போன்ற அலங்கார விழாவுக்காக மட்டும் அழைக்கும் அசிங்கத்தை, இனிவரும் காலத்தில் எக்காரணம் கொண்டும் அரங்கேற்றக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment