Thursday, September 27, 2012

புதுக்குடியிருப்பு மந்துவில் மக்கள் சொந்த இடத்தில் மீள்குடியமர்வு

download (14)முல்லைத்தீவு புதுக் குடியிருப்புப் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த மந்துவில் பகுதி மக்கள் நேற்று சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளனர். இறுதிக்கட்ட போரினால் இடம்பெயர்ந்து ஆனந்த குமாரசுவாமி, கதிர்காமர் ஆகிய நலன்புரி நிலையங் களில் தங்கியிருந்த சுமார் 241 குடும்பங்களைச் சேர்ந்த 521 பேரே தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த் தப்பட்டுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை நலன்புரி நிலையங்களிலி ருந்து உடைமைகளுடன் அழைத்து வரப்பட்ட மக்கள், கைவேலி கணேச வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டனர். அங்கு மீளக் குடியமர்வதற்கான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு மீள் குடியமர்வு கொடுப்பனவுகள், நிவாரணப் பொருள்கள் என்பன வழங்கப்பட்டு தமது சொந்த இடங்களுக்கு அவர்கள் நேற்றுச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இதேவேளை போருக்கு முன்னர் இந்தப் பகுதியில் வசித்த நிரந்தர காணிகள் அற்ற சுமார் 10 குடும்பங்கள் மந்துவில் அரசரட்ணம் பாடசாலையில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை இறுதிக்கட்ட போர் இடம்பெற்ற பகுதியாகக் காணப்படுவதால் இங்கு பெருமளவான வீடுகள் சேதமடைந்து காணப்படுகின்றன. இதனால் மீளக் குடியமர அனுமதிக்கப்பட்ட மக்கள் தற்காலிக கொட்டகைகள் அமைப்பதனையும், ஓடுகள் அற்ற மக்கள் தறப்பாளினால் மூடிக் கட்டுவதனையும் அவதானிக்க கூடியதாக உள்ளது.

No comments:

Post a Comment