இலங்கைத் தமிழர்களுக்கு திருப்தி தருகிற
வரையில் ஒரு அரசியல் தீர்வு காணப்படுவதைத் தடுத்துவிட தமிழகத்தில்
நடக்கின்ற சில நிகழ்ச்சிகள் போதும். தினந்தோறும் நடக்கின்ற கொடும்பாவி
எரிப்பு, சில சமயங்களில் பத்திரிகைகளில் பிரசுரமாகின்ற இலங்கையைப் பிளந்து
ஈழத்தை உருவாக்குவதே தீர்வு என்று தீர்ப்பளிக்கின்ற கட்டுரைகள், திடீர்
உண்ணாவிரதங்கள் , இவை போதாதென்று டெசோ பிரேத ஊர்வலம் அதைத் தொடர்ந்து
மாவட்டம் தோறும் டெசோ எலும்புக்கூடு நடனம்.
மத்திய அரசுக்கு மிரட்டல்கள். என்று
இலங்கை அரசின் பிடிவாதம் தளர்ந்து விடாமல் பார்த்துக் கொள்ள, இங்கு பெரும்
முயற்சிகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில்,
தமிழகத்தில் சில கோவில்களுக்கு யாத்திரையாக இலங்கை யிலிருந்து வந்தவர்கள்,
நாம் தமிழர் இயக்கத்தினரால் தாக்கப்பட்டிருக்கின்றனர். இலங்கையிலிருந்து
வந்த யாத்திரிகர்களில் பலர் தமிழர்கள் என்பது பற்றி நாம் தமிழர்
கவலைப்படவில்லை.
யாத்திரீகர்களுக்குத் தரப்பட்டிருந்த
பொலிஸ் பாதுகாப்பையும் மீறி இந்த வெறித்தனம் நடந்திருக்கின்றது.
தாக்கப்பட்டவர்களில் தமிழர் யாரும் இல்லையென்றே ஒரு பேச்சுக்காக வைத்துக்
கொண்டால் கூட, இந்த வன்முறை கண்டிக்கத்தக்கதே. சிங்களவர் மீது எப்படியாவது
விரோதத்தை வளர்த்து விடுவது என்று இந்த மாதிரி அமைப்புக்களும், சில தனி
நபர் சுயநிர்ணய தமிழ்த்தலைவர்களும் முனைந்திருக்கின்றனர். இவர்களுடைய
வன்முறை பேச்சுக்களும் மொழித்துவேஷப் போஸ்டர்களும் பிரிவினைவாத கோஷங்களும்
இலங்கைத் தமிழர்களுக்கான நீதியைத் தடுக்கும். இரு நாடுகளுக்கிடையேயான
உறவைக் கெடுக்கும் அது மட்டுமன்றி தமிழகத்திலும் கூட பிரிவினைவாதமும் மொழி
வெறியும் மீண்டும் தலைதூக்க வழி செய்துவிடும்.
பலவருடங்களாக நடந்து வந்த புலி அரசு
மோதல்களின் போது வெளியேறி அயல்நாடுகளில் குடியேறிவிட்ட இலங்கைத் தமிழர்கள்
பலர் இலங்கையில் தமிழர் பிரச்சினை தீர்வதை விரும்பவில்லை. ஏனென்றால் நம்
நாட்டில் பங்களாதேஷ் விடுதலை பெற்ற பின் அங்கிருந்து இங்கு வந்த அகதிகள்
திரும்பிச் செல்லவேண்டும் என்று கோருவது போல, சில நாடுகளில், குரல்கள்
எழலாம். உங்கள் நாட்டில் நீங்கள் பட்ட அவதியின் காரணமாக இங்கு வந்தீர்கள்.
இப்போது உங்கள் நாட்டில் தான் அமைதி திரும்பி விட்டதே! ஆகையால் நீங்கள்
திரும்பிச் செல்லுங்கள் என்று சில நாடுகளில் சில அமைப்புக்கள் கூறத்
தொடங்கலாம்.
இதைவிட முக்கியமாக இப்போது, ஈழம்
பெறுவதற்கான போர், அதற்கான ஆயத்தங்கள் செய்ய நிதி தேவை என்றோ இலங்கையில்
தமிழர்கள் மிக மோசமான நிலையில் இருப்பதால், அவர்களுக்கு உதவ நிதி தேவை
என்றோ அல்லது இம் மாதிரி வேறு காரணங்களைக் கூறியோ அயல்நாடுகள் சிலவற்றில்
இலங்கைத் தமிழ் முக்கியஸ்தர்கள் பணவசூல் நடத்துகின்றார்கள், இது மிரட்டல்
மூலமாகவும் நடக்கின்றது. பணத்திற்குப் பணம், ஆதிக்கத்திற்கு ஆதிக்கம். இது
தொடரவேண்டும் என்றால் இலங்கையில் அமைதி திரும்பி விட்டதாக யாரும் ஒப்பு
கொண்டுவிடக்கூடாது. ஆகையால், இலங்கையில் இன்றும் தமிழர்கள்
வேட்டையாடப்படுகின்றார்கள் என்று அயல்நாட்டு அமைப்புகள் முன்பு காட்ட, அயல்
நாடுகளுக்குச் சென்று, ஆதிக்கம் புரிந்து வசதியாக வாழ்கிற இலங்கைத்
தமிழர்கள் முயல்கிறார்கள.
இந்த ஈழ பிஸினஸ் தொடர்வதற்காக,
அவர்கள் வசூல் செய்கின்ற நிதியில் ஒரு பங்கு, இதற்கான பிரசாரத்திற்காகச்
செலவிடப்படுகின்றது. அந்த நிதி உதவி எங்கெங்கே செலவாகின்றது. யார் யாருக்கு
பிரசார சம்பளம் தரப்படுகின்றது என்பதெல்லாம், இலங்கை அரசு ஆராயவேண்டிய
விஷயங்கள். ஆனால், இப்படி நடக்கிற பிரசாரத்தின் காரணமாக, இன்றும்
இலங்கையில் தமிழர்கள் துன்புறுத்தப்படுகின்றார்கள் என்பதை நாம்
நம்பிவிடக்கூடாது. தமிழர்கள் பிரச்சினை தீரவில்லை என்பது உண்மை,
அதைத்தீர்ப்பதில் இலங்கை அரசு இன்னமும் முனைப்பு காட்டவேண்டும் என்பது
நியாயம், ஆனால், தமிழர்களை இன்றும் இலங்கை விரட்டுகின்றது என்பது
உண்மையல்ல.
இன்றோ வடக்குத் தமிழர்கள் கூட,
பிரிவினைக் கோஷத்தைக் கைவிட்டு சம உரிமை கோரிக்கையைத் தான்
வலியுறுத்துகின்றார்கள். அவர்களுடைய அந்த கோரிக்கைக்கு உதவுவதே இந்திய
அரசின் கடமை. இதை நட்பு மூலமாகச் செய்ய முடியுமே தவிர, பகைமையினால்
சாதிக்கமுடியாது. இலங்கைத் தமிழர்களுக்கு சிங்களவர்களுடன் சம உரிமை
பெற்றுத் தருவதில், இந்திய அரசுக்கு பொறுப்பு உண்டு. ராஜரீக
நடவடிக்கைகளினாலும் தொடர்ந்து தருகின்ற உந்துதலினாலும் வர்த்தக சலுகைகள்,
கூட்டமைப்பு, தீர்மானம் உதவிகள் போன்றவற்றினாலும் இந்திய அரசு, இலங்கை அரசை
இவ்விஷயத்தில் நியாயமான பாதைக்குத் திருப்பவதில் முனையவேண்டும். தமிழகமும்
இதற்கு உதவியாக இருக்கவேண்டும். தமிழகத்தில் சிங்கள விரோதத்தையும் இலங்கை
அரசின் மீதான வெறுப்பையும் வளர்த்து வருகின்ற துவேஷம் மற்றும் பிரிவினைவாத
பிரசாரங்களை அடக்கவேண்டும். இது எதிர்காலத் தமிழகத்திற்கே கூட நல்லது.
இல்லாவிட்டால் இங்கேயும் கூட ஒரு வன்முறை நிறைந்த பிரிவினைவாதப்
பிரசாரத்திற்கான விதை ஊன்றப்பட்டு விடக்கூடிய ஆபத்து உண்டு.
அதேசமயத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு
சமஉரிமை பெற்றுத் தரும் பாதையில், இலங்கை அரசைத் திருப்பி விடுவதற்கான
நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கத் தூண்டுவதும், அம்மாதிரி நடவடிக்கைகளை
மத்திய அரசு எடுக்க உதவுவதும் தமிழகத்தின் பொறுப்பு.
இவையெல்லாம் ஒரு தினத்தில்
நடப்பவையல்ல. காலம் வேண்டும். அதற்கான பொறுமையைக் காட்டுவது, இந்தியாவின்
கடமை என்றும் அந்தப் பொறுமை எல்லை மீறாமல் பார்த்து கொள்கிற வகையில்
விரைவாகச் செயற்படுவது இலங்கை அரசின் கடமை.

No comments:
Post a Comment