Tuesday, September 18, 2012

பிரிட்டன் எம்.பிக்கள் வடக்கு செல்வதை கடைசி நேரத்தில் தடுத்து நிறுத்திய அரசு; நாடாளுமன்றில் பிரச்சினை எழுப்ப அவர்கள் திட்டம்

britishவடபகுதிக்கு பயணம் மேற்கொள்வதற்கு சிறப்பு ஹெலி ஒன்றை வழங்க இலங்கை அரசு கடைசி நேரத்தில் மறுத்த விவகாரத்தால் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் சீற்றமடைந்துள்ளனர். இந்த விவகாரம் குறித்துப் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அவர்கள் இலங்கைக்கு எதிராகப் பிரச்சினை எழுப்பவுள்ளதாகத் தெரியவருகிறது.
பொதுநலவாய் நாடாளுமன்றச் சங்கத்தின் கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரிட்டன் மற்றும் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சிறப்பு ஹெலி மூலம் வடபகுதிக்கு அழைத்துச் செல்ல கொழும்பிலுள்ள பிரிட்டன் தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது.
 அதேவேளை, பொதுநலவாய் நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை வடபகுதிக்கு அழைத்துச் செல்ல இலங்கை அரசு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிலையில், பிரிட்டன் தனியான பயணத்துக்கு ஏற்பாடு செய்தது அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
 இருந்தபோதிலும், இலங்கையின் எந்த இடத்துக்கும் எவரும் செல்வதைத் தடுக்கப் போவதில்லை என்று கூறிப் பாதுகாப்பு அமைச்சு அதற்கு அனுமதி கொடுத்தது.
இந்தநிலையில், வடபகுதிக்குச் செல்வதற்காக பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரத்மலானை விமான நிலையத்துக்குச் சென்றபோது, அங்கு அவர்களின் பயணத்துக்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஹெலியைக் காணவில்லை.
இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான ஹெலி ருவர்ஸ் நிறுவனத்தின் ஹெலியையே பிரிட்டன் தூதரகம் இந்தப் பயணத்துக்காக ஒழுங்கு செய்திருந்தது. கிளிநொச்சியில் பிரிட்டனின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் திட்டங்களை அவர்கள் பார்வையிடவிருந்தனர்.
இந்த நிலையில், அவர்களின் பயணத்துக்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஹெலி வேறு பயணத் தேவைக்கு பயன்படுத்தப்படுவதாக இலங்கை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதையடுத்து, பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களையும், தமது ஏற்பாட்டில் வடக்குக்கு மேற்கொள்ளும் பயணத்தில் இணைந்து கொள்ளுமாறு இலங்கை அரசதரப்பினால் கேட்கப்பட்ட போதும் அவர்கள் அதற்கு இணங்கவில்லை. பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சுதந்திரமான பயணத்தைத் தடுப்பதற்கே, ஹெலியை வழங்க அரசு மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள இலங்கை விமானப் படைப் பேச்சாளர் குறூப் கப்டன் அன்ரூ விஜேசூரிய, பொதுநலவாய் நாடாளுமன்றக் குழுவின் 122 உறுப்பினர்களின் பயணங்களுக்கான பொறுப்பை ஹெலி ருவர்ஸ் நிறுவனமே ஏற்றிருந்தது. அவர்களை யாழ்ப்பாணம், சிகிரியா, கொக்கல அகிய இடங்களுக்கு ஏற்றிச் செல்ல வேண்டியிருந்தது.
அரசின் அதிகாரபூர்வத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பயணங்களுக்காக எமது முழுவளங்களையும் பயன்படுத்தினோம். இதனால், துரதிஸ்டவசமாகப் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்பிய இடங்களுக்கு அழைத்துச் செல்வதற்குத் தனிப்பட்ட ஹெலியை அவர்களுக்கு வழங்க முடியாது போனது என்று கூறியுள்ளார்.
இதனால் கோபம் கொண்டுள்ள பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாம் நாடு திரும்பியதும் இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரச்சினை எழுப்பவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

No comments:

Post a Comment