Tuesday, September 11, 2012

தமிழகம் தழுவிய சாலை மறியல்! அனைத்திந்திய மீனவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு!

கூடங்குளம் பகுதியில் போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவை வாபஸ் பெறாவிட்டால் இன்னும் 2 நாட்களில் தமிழகம் தழுவிய சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அனைத்திந்திய மீனவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அனைத்திந்திய மீனவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த கடலோர மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் ஜெயக்குமார், அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்கத்தலைவர் எஸ்.ஏ.மகேஷ் ஆகியோர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
இடிந்தகரை கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிராக அந்த பகுதியை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் என அனைவரும் கடந்த 25 ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். இந்த போராட்டம் கடந்த ஒரு ஆண்டுகளாக தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

கூடங்குளம் பகுதி மக்கள் தங்களின் வாழ்வாதாரத்துக்காகவும், வாழ்விடத்துக்காகவும் போராடி வருகிறார்கள். இவர்களை காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் விரட்டி உள்ளனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
மேலும், கூடங்குளம் பகுதியில் போடப்பட்டு உள்ள 144 தடை உத்தரவை வாபஸ் பெறவேண்டும் என்று கோரி போலீஸ் டி.ஜி.பி.யை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம். மனுவின்மீது உரிய நடவடிக்கை எடுத்து தடை உத்தரவை வாபஸ் பெறவேண்டும்.
இல்லாவிட்டால், 2 நாட்கள் கிராம மக்களை சந்தித்தபிறகு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் நடத்தப்படும். இது மிகப்பெரிய போராட்டமாக உருவெடுக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

No comments:

Post a Comment