வடக்கிலுள்ள
உயர்பாதுகாப்பு வலயங்களை நீக்குமாறு சிறிலங்கா அரசிடம் வலியுறுத்தும்படி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவிடம் கோரிக்கை விடுக்கவுள்ளது. வரும் ஒக்ரோபர் 10ம் நாள் புதுடெல்லி செல்லவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இது தொடர்பான கோரிக்கையை இந்தியாவிடம் முன்வைக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
“இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா ஆகியோருடனான சந்திப்புக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பில், கலந்துரையாடப்பட வேண்டிய விடயங்கள் குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.
ஆனாலும் உயர்பாதுகாப்பு வலயங்களை அகற்றக் கோரும் விவகாரம் குறித்து நிச்சயம் ஆராயப்படும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு புதுடெல்லியில் பேசப்பட வேண்டிய விவகாரங்கள் குறித்து ஆராய்ந்து முடிவு செய்யும்.
நாடாளுமன்றத் தெரிவுக்குழு, இடம்பெயர்ந்துள்ள எஞ்சிய மக்களின் மீள்குடியமர்வு, இந்தியாவில் உள்ள அகதிகளின் நிலை குறித்தும் கலந்துரையாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும், வடக்கிலுள்ள உயர்பாதுகாப்பு வலய விவகாரம் நிச்சயம் ஆராயப்படும்.
ஏனென்றால், வலிகாம் வடக்கில் 28 ஆயிரம் பேர் இந்த உயர்பாதுகாப்பு வலயத்தினால், தமது வீடுகளில் குடியமர முடியாமல் உள்ளனர்.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச உயர்பாதுகாப்பு வலயங்கள் இல்லை என்று கூறினாலும், இந்தப் பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் இரு பத்தாண்டுகளாக மீளக்குடியேற்றப்பட முடியாத நிலையில் உள்ளனர்” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment