தியாக
தீபம் திலீபனின் 25 ஆவது நினைவுதினம் தமிழர் தாயகம் உட்பட உலகெங்கும்
தமிழர்கள் வாழும் பகுதிகளில் பெரும் எழுச்சியுடன் இன்று ஆரம்பமாகிறது.
அதற்கான ஏற்பாடுகள் பெருமெடுப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனத்
தெரியவருகிறது.
பாரதப் படைகளுக்கெதி ராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாள்கள்
உண்ணாநோன்பிருந்து ஒவ்வொரு நாளும் அணுஅணுவாக உயிரை விட்டவர் தியாகி
திலீபன்.
தான் நேசித்த தமிழ் மக்கள் விடுதலை பெற்று நிம்மதியாகவும்,
சுதந்திரமாகவும் வாழவேண்டும் என்பதற்காக தன்னை வருத்தி இன்னுயிரைத் தியாகம்
செய்த அந்த அற்புத மனிதன் திலீபனின் நினைவு வாரத்தை தமிழர்கள் மிகவும்
உணர்வுபூர்வமாகக் கொண்டாடத் தயாராகியுள்ளனர்.
லண்டன், கனடா, அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், சுவிஸ், ஆஸ்திரேலியா,
நெதர்லாந்து, சுவீடன் போன்ற நாடுகளில் திலீபனின் நினைவுவாரம்
என்றுமில்லாதவாறு இம்முறை மிகவும் பிரமாண்டமாக அனுஷ்டிக்கப்படுகிறது.
புலம்பெயர் அமைப்புகள் இந்த நிகழ்வை முன்னின்று நடத்துகின்றன.
இந்த நிகழ்வில் தமிழ் மக்களை அணிதிரண்டு வந்து பங்கேற்குமாறு
தமிழகத்து ஈழ ஆதரவாளர்களும் தமிழ் உணர்வாளர்களும் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஒருசொட்டுத் தண்ணீர்கூட அருந்தாமல் உண்ணாவிரதமிருந்து உயிரை விட்டு
உலகத்திற்கே அஹிம்சையைப் போதித்துச் சென்ற தியாகி திலீபனின் வழியில்
தமிழர்களாகிய நாம் எமக்குள் உள்ள கருத்து வேறுபாடுகளை களைந்து, பிளவுகள்
இன்றி அனைவரும் ஒன்றுசேர்ந்து விடுதலை நோக்கிய பாதையில் செல்லவேண்டும்
என்றும் தமிழின உணர்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1987 செப்டெம்பர் 15ஆம் திகதி இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து அம்\க் கோரிக்கையை முன்வைத்து திலீபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.
* மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
* சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும்
தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற்கைதிகள் யாவரும் விடுதலை
செய்யப்படவேண்டும்.
* அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.
* ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
* தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.
இந்த 5 கோரிக்கைகளையும் முன்வைத்தே உண்ணாவிரதம் இருந்தார் திலீபன். ஆனால், அஹிம்சையைப் போதித்த பாரததேசம் இறுதிவரை மனமிரங்கவில்லை.
அதனால் செப்டெம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு திலீபன் தியாக மரணத்தைத் தழுவினார்.
No comments:
Post a Comment