இராணுவ
புலனாய்வுப் பிரிவு மேஜர் ஒருவரை பிரபல அரசியல்வாதியொருவரின் மகன் உட்பட
குழுவொன்றினால் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான இராணுவ விசாரணை
மன்ற விசாரணைகள் பூர்த்தியடைந்துள்ளதாக இராணுவம்
தெரிவித்துள்ளது. அத்துடன் மேற்படி புலனாய்வு அதிகாரி அச்சம்பவத்தின் போது
கடமையில் இருந்தவரல்லாத நிலையில் அவர் குற்றவாளியாக காணப்பட்டுள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்படி சம்பவத்தின்போது தான் உத்தியோகபூர்வ பணியில் இருந்ததாக மேற்படி மேஜர் தெரிவித்த போதிலும் உத்தியோகபூர்வ கடமைநிமித்தம் அவர்அங்கிருக்கவில்லை என கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூவரடங்கிய குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை, இலங்கை இராணுவத்தின் சட்டப்பிரிவிடம் கையளிக்கப்படவுள்ளது.
மேற்படி சட்டப்பிரிவானது தனது அறிக்கையை இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரியவிடம் இன்று கையளிக்கவுள்ளது. இராணுவத் தளபதி இதை மேலும் ஆராய்ந்து தனது அபிப்பிராயத்தை தெரிவிப்பார்.
இராணுவத் தளபதியின் அபிப்பிராயத்தின் அடிப்படையில் இராணுவ சட்டப்பிரிவானது தேவையேற்படின் மேலதிக நடவடிக்கையை மேற்கொள்ளும்.
மேற்படி சம்பவத்தில் காயமடைந்து, தனது துப்பாக்கியை இழந்த மேஜர், மேற்படி அரசியல்வாதியின் மகன் அடங்கிய குழுவினர் தன்னை தாக்கவில்லை எனவும் இவ்விடயத்தை தான் சுமுகமாக தீர்த்துக்கொள்ளத் தயார் எனவும் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் தொடர்பான சோதனை நடவடிக்கையொன்றுக்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்துவிட்டு, சம்பவ இடத்திற்கு தான் சென்றதாகவும் அவர் கூறியிருந்தார்.
அவர் அளித்த வாக்குமூலத்தை வாபஸ் பெற்றது ஏன் எனக் கேட்டபோது, மேற்படி சம்பவத்தின்பின் தான் அதிர்ச்சியடைந்திருந்த நிலையில் அவ்வாக்குமூலத்தை அளித்ததாக அவர் கூறியமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment