கச்சத்
தீவு ஒப்பந்தம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கினை
உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கோரி தமிழக அரசின்
சார்பில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: 1974-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கச்சத் தீவை இலங்கைக்கு இந்திய அரசு தாரை வார்த்தது. இதனால் ராமேசுவரம் பகுதி மீனவர்களின் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த நிலையில் கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்த ஒப்பந்தங்கள் சட்டப்படி செல்லத்தக்கவை அல்ல என சுட்டிக்காட்டி அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் என்ற முறையில் கடந்த 2008-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் நான்
வழக்குத் தொடர்ந்தேன். கச்சத் தீவு குறித்த அனைத்து ஆவணங்களையும் தன் வசம் வைத்துள்ள தமிழக அரசின் வருவாய்த் துறையும் பின்னாளில் இந்த வழக்கில் தன்னை ஒரு வாதியாக இணைத்துக் கொண்டது.தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையின் தாக்குதல்கள் குறையவில்லை.
இந்நிலையில் அது குறித்து விவாதிக்க எனது தலைமையில் ஓர் ஆய்வுக் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கச்சத் தீவு ஒப்பந்தம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை உச்ச நீதிமன்றம் உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கோரி ஒரு மனுவினை தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்வது என்று அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் மனு தாக்கல் செய்யப்படும் என்று ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment