Sunday, September 16, 2012

இனிமேலும் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது: கர்நாடக அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்

meetகாவிரியில் இருந்து இனிமேலும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ள காவிரி நதி நீர் ஆணையக் கூட்டத்தில் தெரிவிக்க, கர்நாடக அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
காவிரி நதி நீர் ஆணையக் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் வருகிற 19-ம் தேதி தில்லியில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் கர்நாடக அரசின் நிலைப்பாடு எவ்வகையில் அமைந்திருக்க வேண்டும் என்பது குறித்து விவாதிக்க, அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையில் பெங்களூர், கிருஷ்ணா அரசு இல்லத்தில்
சனிக்கிழமை நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் கர்நாடக துணை முதல்வர் ஆர்.அசோக், எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, சட்டப்பேரவை மஜத கட்சித் தலைவர் எச்.டி.ரேவண்ணா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், மக்களவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் மேற்கொண்ட தீர்மானங்கள் குறித்து செய்தியாளர்களிடம் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கூறியது: காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும் விவகாரத்தில் மாநில அரசின் நிலையை வலுவாக எடுத்துரைக்க ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தின் உண்மையான நிலை பிரதமர் மன்மோகன் சிங்கின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
எங்கள் தரப்பு நியாயத்தை வலுவாக எடுத்துரைக்க தீர்மானித்துள்ளோம். கர்நாடகத்தில் கடும் வறட்சி நிலவுவதால், இனிமேலும் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று அந்தக் கூட்டத்தில் பிரதமரிடம் உறுதியாக தெரிவிப்போம் என்றார்.கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கூறியது:கர்நாடகத்தில் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்துள்ளது. ஆனால், அடுத்த மாதம் பெய்யவுள்ள வடகிழக்கு பருவ மழைக்காக தமிழகம் காத்திருக்கிறது.
தமிழகத்தின் மேட்டூர் அணையில் 44 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது. இது அடுத்த 45 நாள்களில் சம்பா பயிருக்கும், குடிநீர்த் தேவைக்கும் போதுமானதாக இருக்கும்.2-வது ஆண்டாக கர்நாடகத்தில் வறட்சி நிலவுகிறது. கர்நாடகத்திற்கே போதுமான தண்ணீர் இல்லாத போது, தண்ணீருக்குத் தவிக்கும் நிலையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும் கேள்வியே எழாது என்றார்.

No comments:

Post a Comment