Saturday, October 20, 2012

தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்திற்கு மழை நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு



தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை, குமரிக்கடல் பகுதிக்கும், ஆந்திராவுக்கும் இடையே மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில், தென் தமிழகத்திலும் தமிழகத்தின் உள்மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமட்டத்துடன் காணப்படும் என்றும், அவ்வப்போது லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது‌ கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக தொண்டியில் 26 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. திருச்செந்துரில் 20 சென்டிமீட்டரும் சென்னையில் 8 சென்டிமீட்டரும் மழை பதிவாகி இருக்கிறது.

சென்னையில் நேற்று முழுவதும் மழை தொடர்ந்தது. ஜிஎன் செட்டி சாலை, அண்ணாசாலை போன்ற இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. வண்ணாரப்பேட்டையில் கனமழையால், ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.
மேலும் காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர்,திருவண்ணாமலை, திருவாரூர், தஞ்சை, நாகை, தூத்துக்குடி, அரியலூர் மாவட்டங்களிலும் பரவலாக நல்ல மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக இந்த மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment