Friday, October 05, 2012

பெங்களூரில் நாளை 25,000 கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் பேரணி.. பதற்றம்!

 Bangalore Tamils Should Come Streets To Protest
பெங்களூர்: காவிரி பிரச்சனைக்காக வரும் 6ம் தேதி பந்த் என்று பல்வேறு கன்னட அமைப்புகள் அறிவித்துள்ள போதிலும் பெங்களூரில் நாளையே நகரம் ஸ்தம்பிக்கும் என்று தெரிகிறது. கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பு நாளை 25,000 முதல் 30,000 பேரைத் திரட்டி பிரமாண்டப் பேரணி நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.
நாளேய பந்த் நடத்தவும் இந்த அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. ஒரு வேளை நாளை பந்த் நடந்தால் பெங்களூரில் கடந்த 3 வாரங்களில் நடைபெறும் 3வது பந்த்தாக இது அமையும்.
நாளை வெள்ளிக்கிழமையன்று பெங்களூரை ஸ்தம்பிக்க வைக்கப் போவதாகவும் கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பின் தலைவர் நாராயண கெளடா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எங்களது அமைப்பின் உறுப்பினர்கள் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பெங்களூருக்குத் திரண்டு வருகிறார்கள். பெங்களூரைச் சேர்ந்த பல்வேறு அமைப்பினருடன் இணைந்து நாளை பிரமாண்டப் பேரணியை நடத்தவுள்ளோம். அனைவரும் பசவனகுடி நேசனல் காலேஜ் மைதானத்தில் திரண்டு அங்கிருந்து பேரணியாகச் செல்லப் போகிறோம். தெருக்கள் தோறும் இந்தப் பேரணி செல்லும். பெங்களூர் நகர வர்த்தகர்கள் இந்த பேரணிக்கும், போராட்டத்திற்கும் ஆதரவு தருவதாகக் கூறியுள்ளனர் என்றார்.

நாளை பந்த்தாக அது நடக்கிறதா என்பது தெரியவில்லை. இருப்பினும், 25,000க்கும் மேற்பட்டோர் பேரணியாக செல்ல உள்ளதால் பெங்களூர் நகரின் இயல்பு வாழ்க்கையும் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த திடீர் பந்த், பேரணி குறித்து நகர போலீஸ் கமிஷனர் ஜோதி பிரகாஷ் மிர்ஜி இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. பாதுகாப்புக்கு ஏதாவது செய்துள்ளனரா காவல்துறை என்ற விவரமும் தெரி்யவில்லை.
ஆனால் நாளைய பேரணியை தடுத்து நிறுத்த போலீஸ் கமிஷனர் தரப்பில் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
பெங்களூர் தமிழர்களுக்கு நாராயண கெளடாவின் அழைப்பு:
இதற்கிடையே, பெங்களூரில் வசித்து வரும் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து மொழியினரும் காவிரி நீரைத்தான் குடித்து வாழ்ந்து வருகிறார்கள். எனவே பெங்களூர் தமிழ்ச் சங்கம் தமிழகத்திற்குக் காவிரி நீரை திறந்து விடக் கூடாது என்று கர்நாடகத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததை நாங்கள் வரவேற்கிறோம். அத்தோடு நில்லாமல் வீதியில் இறங்கி தமிழர்கள் போராட்டம் நடத்துவதையும் நாங்கள் வரவேற்கிறோம் என்று கூறியுள்ளார் நாராயண கெளடா.
பெங்களூர், டவுன்ஹால் எதிரே புதன்கிழமை கெம்பேகௌடா மையச்சங்கம், கர்நாடக மாநில ஒக்கலிகர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு கன்னட அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு நாராயண கெளடா பேசுகையில், காவிரி நதியின் குறுக்கே அமைந்துள்ள அணைகளில் மொத்தம் 72 டிஎம்சி தண்ணீர் மட்டுமே உள்ளது. இது நமக்கு போதுமானதல்ல. கூடுதலாக 20 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுகிறது. இந்த நிலையில், தமிழகத்திற்கு 20 டிஎம்சி தண்ணீர் கேட்பது எந்தவகையில் நியாயம்.
போதுமான அளவு தண்ணீர் இருக்கும்போது தமிழகத்திற்கு தருவதில் எங்களுக்கு ஆட்சேபம் இல்லை. கர்நாடகத்தில் கடும் வறட்சி நிலவும்போது, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளதை காவிரி நதி ஆணையம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இந்தியாவில் கர்நாடகம் அங்கம் வகிப்பதை மத்திய அரசு கவனத்தில்கொள்ள வேண்டும். தமிழகத்திற்கு ஆதரவாக செயல்படும் மத்திய அரசு, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படுகிறது.
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டுள்ளதற்கு எதிராக பெங்களூர் தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருவதை வரவேற்கிறேன். பெங்களூரில் வசிக்கும் தமிழர்கள் உள்ளிட்ட அனைவரும் காவிரி நீரைதான் பருகிறார்கள். இந்தியாவின் எல்லா பகுதிகளை சேர்ந்தவர்களும் பெங்களூரில் வசிக்கிறார்கள். எனவே, காவிரி நீரை பாதுகாக்க தமிழர்கள் உள்பட மற்ற மொழியினர் அனைவரும் வீதியில் இறங்கி போராட வேண்டும்.
காவிரி நதி கர்நாடகத்திற்கு மட்டுமே சொந்தம். காவிரிக்கு கன்னடர்கள் மட்டுமே உரிமை கொண்டாட முடியும். கிருஷ்ணராஜசாகர் அணை எங்கள் பணத்தில் கட்டிய அணையாகும். அதில் இருந்து நீர் கேட்க தமிழகத்திற்கு உரிமையில்லை என்றார்.

No comments:

Post a Comment