Wednesday, October 03, 2012

மகிந்த ராசபக்சவுடன் நடக்கும் சந்திப்பில் சம்பந்தன் தனது தனிப்பட்ட விடங்களை பேசுகிறார்!

a55feb07-40b2-4197-abab-aea53b1f09fc1ஆயுதப்போராட்டம் தோற்றுப்போன நிலையில் வடக்கு கிழக்கில் பெரும்பாலான தமிழ் மக்களின் அரசியல் தலைமையாக உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை சிதைத்து விட வேண்டும் என பொது எதிரியும் அவர்களோடு ஒட்டிக்கொண்டிருப்பவர்களும் கங்கணம் கட்டி நிற்கும் இவ்வேளையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தன்னை பலப்படுத்திக்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். ஆனால் தன்னை பலப்படுத்திக்கொள்ள வேண்டிய தமிழ் அரசியல் தலைமை தங்களுக்குள் தடுமாறி நிற்பதாகவும், பொது எதிரியை காப்பாற்ற முற்படுவதாகவும் செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்டிருக்கும் தடுமாற்றத்திற்கான காரணம் என்ன, அக்கட்சியின் தலைவர்கள் மீது உள்ளும் புறமும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் எவ்வாறு தமிழ் மக்களை பாதிக்கும் என்பதை பற்றி வெளிப்படையாக பேசுவதே ஆரோக்கியமான அரசியல் பயணத்திற்கு உதவ முடியும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிங்கள நிறுவனம் ஒன்றுடன் செய்து கொண்ட ஒப்பந்தம், சர்வதேச அழுத்தங்களிலிருந்து சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராசபக்சவையும் அவரது அரசையும் காப்பாற்றுவதற்காகவே சம்பந்தன் தனியாக மகிந்த ராசபக்சவை சந்தித்து வருகிறார் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் சுமத்தியுள்ள குற்றசாட்டு ஆகியன தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய அரசியல் தலைமை தடுமாறி செல்கிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த சந்தேகங்கள் குற்றச்சாட்டுக்கள் வெறும் ஒரு அரசியல் கட்சி மீது சுமத்தப்பட்டால் அது பற்றி தமிழ் மக்கள் பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் சிலர் தங்களின் அரசியலை நடத்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற கூட்டை ஒரு தளமாக பார்க்கலாம். ஆனால் தமிழ் மக்களை பொறுத்தவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது ஒரு அரசியல் கட்சியல்ல, வெறுமனே தேர்தல்களை சந்திப்பதற்கும், பாராளுமன்ற உறுப்பினர்களையும் மாகாண உள்ளுராட்சி உறுப்பினர்களையும் தெரிவு செய்வதற்கான கட்சியாக அதை பார்க்கவில்லை.
தேர்தல் அரசியலுக்கு அப்பால் சிங்கள தலைமைகளால் பறிக்கப்பட்ட தங்களின் உரிமைகளை பறிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் தங்களின் தாயக நிலங்களை காப்பாற்ற கூடிய பலம் மிக்க அரசியல் தiலைமையாகத்தான் பார்க்கிறார்கள். தங்களின் உரிமையை மீட்டெடுப்பதற்கு உள்ளுரிலும் சர்வதேச மட்டத்திலும் ஆதரவு தளத்தை திரட்டக் கூடிய அரசியல் தலைமையாக, ஆயுதப்போராட்டம் தோற்ற பின் தங்களின் உரிமைகளை மீட்டு தரக் கூடிய தலைமையாகத்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பார்க்கிறார்கள். மௌனமாக்கப்பட்ட தங்களின் குரலாக தங்களின் அரசியல் தலைமை விளங்கும் என்ற நம்பிக்கையில்தான் தமிழர்கள் உள்ளனர்.
ஆனால் தமிழ் மக்கள் மலைபோல் நம்பியிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகள், அரசியல் தலைவர்களின் போக்குகள் அந்த மக்களின் நம்பிக்கைகயை காப்பாற்றக் கூடிய வகையில் உள்ளதா என்பதை மதிப்பீடு செய்வது அவசியமாகிறது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது, அந்த நோக்கத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் என இப்போது சொல்லிக்கொள்பவர்கள் கவனத்தில் கொள்கிறார்களா என்பதை முதலில் பார்க்க வேண்டும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இப்போது முடிவுகளை எடுக்க கூடியவர்களாக இருக்கும் சுமந்திரன் போன்றவர்களுக்கு நிட்சயமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன தளத்தில் உருவாக்கப்பட்டது, அதற்காக எத்தனை உழைப்புக்கள் இருந்தன என்பது அறவே தெரியாது. ஏனெனில் சுமந்திரன் 2010ஆம் ஆண்டில்தான் சம்பந்தன் அவர்களால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்டிருந்தார்.
ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்ட வரலாற்றில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோற்றம் என்பது ஒரு மைல்கல்லாகும். ஆயுதப்போராட்டத்தின் மூலம் விடுதலையை பெற்றுவிடலாம் என்ற நம்பிக்கை வளர்ந்திருந்த காலத்தில் அதற்கு இணையாக தமிழ் அரசியல் தலைமை ஒன்றும் உருவாக்கப்பட வேண்டும் என்ற தீர்க்கதரிசனமான எண்ணத்தில் உருவானதே தமிழ் தேசியக் கூட்டமைப்பாகும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது கொழும்பு கறுவாக்காட்டு மாளிகையில் இருந்து உதித்த எண்ணமல்ல. எந்த அரசியல் இலாப நோக்கமும் இல்லாத தமிழ் மக்களின் விடுதலை என்ற உயர்ந்த நோக்கத்தை மட்டும் கொண்டு செயற்பட்ட அரசியல்வாதிகள் அல்லாதவர்களின் உழைப்பில் உருவானதே தமிழ் தேசியக் கூட்டமைப்பாகும். அந்த உருவாக்கத்தின் பின்னணியில் பல உழைப்புக்கள் வேதனைகள் உண்டு. ஏன் இழப்புக்களும் உண்டு.
எந்த பாதுகாப்போ அரசியல் பின்புலமோ இல்லாது தமிழ் அரசியல் தலைமை ஒன்றை உருவாக்குவதற்காக கிராமம் கிராமமாக சென்று கருத்தரங்குகளையும், மக்களை அரசியல் மயப்படுத்துவதிலும் ஈடுபட்ட போது சந்தித்த நெருக்கடிகள் பல. அந்த அர்ப்பணிப்புக்களை செய்த பலர் இன்று உயிருடன் இல்லை.
நவக்கிரகங்கள் போல ஒருவரின் முகத்தை ஒருவர் பார்க்க மறுத்து சிதறுண்ட நிலையில் அரசியல் நடத்திக்கொண்டிருந்த அரசியல் கட்சி தலைவர்களை அணுகி தமிழ் கட்சிகளை ஒன்றிணைத்து பலமான தமிழ் அரசியல் தலைமை ஒன்றை உருவாக்க வேண்டும் என சொன்ன போது இது நடக்க கூடிய காரியமா என தமிழ் அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கேள்வி எழுப்பிய சம்பவங்கள் கூட உண்டு. ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ போன்ற கட்சிகள் இரத்தம் தோய்ந்த கரங்களை கொண்டவர்கள். அவர்களுடன் எப்படி நாங்கள் இணைந்து கொள்வது என அப்போது இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியும், அகில இலங்கை தமிழ் காங்கிரசும் பின்னடித்த சம்பங்களும் உண்டு. ( தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட போது தமிழரசுக்கட்சி இருந்ததில்லை)
ஆயுதப்போராட்டத்தை நடத்திய இயங்கங்களை இரத்தம் தோய்ந்த கரங்களை கொண்டவர்கள் என உதாசீனம் செய்த தமிழ் மிதவாத அரசியல்வாதிகளை பார்த்திருக்கிறேன். இவர்களுடன் எப்படி இணைவது என தயக்கம் காட்டிய தமிழ் இயக்க தலைவர்களை பார்த்திருக்கிறேன். இந்த துருவங்கள் இணைக்கப்பட்ட போது அதற்காக உழைத்தவர்களுக்கு மட்டுமல்ல வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கும் நம்பிக்கை ஏற்பட்டது.
ஒருவருக்கு ஒருவர் நம்பிக்கையீனங்களும், சந்தேகங்களும், கசப்புணர்வுகளும், நிறைந்திருந்த வேளையில் அவர்களை ஒரு அணியில் இயங்க வைப்பதற்கு மேற்கொண்ட முயற்சியின் பின்னணியில் இருந்த உழைப்புக்களை பற்றியோ அல்லது அதில் ஈடுபட்டவர்கள் எந்த அரசியல் இலாபமும் இன்றி தமிழ் மக்களின் நலன் ஒன்றையே கருதி செயற்பாட்டர்கள் என்பதையும் இப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் முடிவுகளை எடுக்கும் தலைவர்களாக இருக்கும் சம்பந்தனுக்கோ அல்லது சுமந்திரனுக்கோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
தென்னிலங்கை மற்றும் அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் கட்சிகளைப்போல வேலைவாய்ப்பு மற்றும் சலுகைகளை மூலதனமாக கொண்ட கட்சியல்ல தமிழ் தேசியக் கூட்டமைப்பு. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மூலதனம் என்பது தமிழ் மக்களின் நம்பிக்கை மட்டும் தான். அந்த நம்பிக்கையில் ஒரு துளி கறுப்பு புள்ளி விழுந்தாலும் அந்த மூலதனத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது தமிழ் மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அண்மையில் வெளிவந்த செய்திகளில் ஒன்றுVerité Research Pvt. Ltd  என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டதாகும். இந்த நிறுவனத்தின் பின்னணி என்ன இதை யார் நடத்துகிறார்கள், என்பதை சரியாக புரிந்து கொண்டால் அவர்களுடன் தமிழ் மக்களின் விடுதலைக்காக உரிமைகளை மீட்டெடுப்பதற்காக ஜனநாயக ரீதியில் போராடி வரும் அமைப்பு ஒன்று ஒப்பந்தம் ஒன்றை செய்து கொள்ள முடியுமா என்பதை தமிழ் மக்கள் தீர்மானிக்க முடியும்.
Verité Research Pvt. Ltd  என்ற நிறுவனம் யாரால் என்ன நோக்கத்துடன் நடத்தப்படுகிறது. இவர்களின் கடந்த கால செயற்பாடு என்ன என்பதை முதலில் பார்க்க வேண்டும்.
Verité Research Pvt. Ltd என்ற இந்த நிறுவனம் இனச்சிக்கல்கள் இராஜதந்திர, கல்வி ஆய்வு, ஊடக ஆலோசனை வழங்குவதும், அரசாங்கத்தின் நோக்கங்களுக்காக செயற்படும் சில அமைப்புக்களுக்கும் திட்டங்களை வகுத்து ஆலோசனை வழங்குவதும் இதன் நோக்கமாகும்.
இந்த நிறுவனத்தில் பணிப்பாளர்களாக ஆராய்ச்சி உத்தியோகத்தர்களாக திட்ட உத்தியோகத்தர்களாக இருக்கும் 11பேரும் சிங்களவர்களாவர். இதன் பணிப்பாளராக இருக்கும் நிசான் டி மெல் என்பவர் ஜனாதிபதி மகிந்த ராசபக்சவின் தேசிய சமூக பாதுகாப்பு குழுவின் முக்கிய ஆலோசகராக இருப்பவர். இந்நிறுவனம் ஜனாதிபதியின் அலரிமாளிகைக்கு அருகில் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள்ளேயே உள்ளது. இந்நிறுவனத்தில் பணிப்பாளர்களாக உள்ளவர்கள் பலர் ஆளும் கட்சி அமைச்சர்களின் ஆலோசகர்களாகவும் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசகர்களாகவும் உள்ளனர்.
இந்நிறுவனம் ஆலோசனைகளையும் திட்டங்களையும் வழங்கும் முக்கிய அமைப்பாக லட்சமன் கதிர்காமரால் 2001ல் உருவாக்கப்பட்ட நீலன் திருச்செல்வம் பவுண்டேசன் உள்ளது. நீலன் திருச்செல்வம் பவுண்டேசனே உலகம் முழுவதும் தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தை பயங்கரவாத போராட்டமாக பிரசாரம் செய்ததுடன் தமிழ் மக்களை பயங்கரவாதிகளாக உலகம் முழுவதும் சித்தரித்திருந்தார்கள். இதனாலேயே ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா உட்பட உலக நாடுகள் பல விடுதலைப்புலிகளை தடைசெய்து முள்ளிவாய்க்கால் வரை தமிழர்கள் அழிக்கப்படுவதற்கு காரணமாக இருந்தார்கள்.
உலகம் எல்லாம் தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்தை பயங்கரவாத போராட்டமாக பிரசாரம் செய்து தமிழ் மக்களை அழிப்பதற்கு காரணமாக இருந்த அமைப்புக்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்புகளை பேணுவதே அபாயகரமானதாகும். மீண்டும் ஒரு முள்ளிவாய்க்கால் தோல்வியை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தும் சூழ்ச்சியை இந்நிறுவனங்கள் ஏற்படுத்த மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
ஏநசவைé சுநளநயசஉh Pஎவ. டுவன என்ற இந்த நிறுவனத்தின் நோக்கம் மறைமுகமாக எந்த காய்களையும் சாணக்கியமாக நகர்த்தி யாரையும் வீழ்த்த கூடிய வல்லமை கொண்டவர்கள் என்பதாகும்.
இராஜதந்திர மற்றும் ஊடக ஆலோசனை வழங்கும் Verité Research Pvt. Ltd  நிறுவனத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஊடக ஆய்வு அறிக்கைகளை பெறுவதற்கான ஒப்பந்ததை மாத்திரம் செய்ததாக இந்த ஒப்பந்தத்தை செய்வதற்கு முக்கிய பங்கு வகித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் விளக்கம் கூறினாலும் தமிழ் மக்களுக்கு எதிராக, தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டத்திற்கு எதிராக இந்த நிறுவனம் கடந்த காலங்களில் செயல்பட்டதை அறியாமலா தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டது என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.
அத்துடன் 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் கிழக்கில் பல தமிழ் இளைஞர்கள் காணாமல் போவதற்கும், படுகொலை செய்யப்படுவதற்கும் காரணமாக இருந்தவர் என மனித உரிமை அமைப்புக்களால் குற்றம் சாட்டப்படும் பிரிகேடியர் சக்கி இந்நிறுவனத்தின் முக்கிய ஆலோசகராக உள்ளார் என்ற தகவலும் தமிழர்களுக்கு அதிர்ச்சி தரும் விடயம் தான். வெரிN;ட றிசேர்ச் என்ற நிறுவனத்தை பொறுத்தவரை இராணுவ புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரியாக இருந்த பிரிகேடியர் சக்தியை ஆலோசகராக வைத்திருப்பது சகசமான விடயம்தான். ஆனால் அப்படிப்பட்டவர்களை ஆலோசகர்களாக கொண்ட நிறுவனங்களுடன் தமிழ் மக்களின் அரசியல் தலைமை ஒன்று தொடர்பை பேணுவது எத்தகைய ஆபத்தை ஏற்படுத்தும் என்பது நாம் சொல்லி தெரியவேண்டியதில்லை.
‘வெரிடே ரிசேர்ச்’ தனியார் நிறுவனத்திடமிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்பான செய்திகளின் ஆய்வுத்தொகுப்புகளை மாத்திரமே பெறுவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியிருக்கிறார். வெரிடே ரிசேர்ச் போன்ற தமிழர் விரோத போக்குடைய தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தை பயங்கரவாத போராட்டமாக உலகம் எல்லாம் பரப்புரை செய்வதற்கு திட்டங்களை வகுத்துக்கொடுத்த இந்த நிறுவனத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்புகளை பேணுவதே தமிழர்களுக்கு செய்யும் துரோகம் மட்டுமல்ல, தமிழ் தேசியக் கூட்டமைப்பை படுபாதாள குழியில் தள்ளுவதற்கு வழிவகுத்து விடும்.
இலங்கையில் முஸ்லீம் கட்சிகள் உட்பட தென்னிலங்கை அரசியல் கட்சிகளை உடைத்து பலவீனப்படுத்தி வரும் மகிந்த ராசபக்ச தலைமையிலான அரசிற்கு நெருக்கமாக செயற்படும் இந்நிறுவனம் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்பை பேணி வருவது தென்னிலங்கை கட்சிகளுக்கும் முஸ்லீம் கட்சிகளுக்கும் நேர்ந்த கதி தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்படாது என கூறுவதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
இலங்கையில் இருக்கும் அரசியல் கட்சிகளில் பிளவை ஏற்படுத்தி பலவீனப்படுத்த முடியாத கட்சியாக ஓரளவுக்கு திகழும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் அண்மைக்காலத்தில் எழுந்திருக்கும் பூசல்கள் இத்தகைய உளவு நிறுவனங்களின் செயற்பாடோ என்று சந்தேகம் எழுவதும் இயல்பானதே.
இந்த நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை செய்து கொண்ட விடயம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்களுக்கும் தெரிந்த விடயம் என சுமந்திரன் கூறியிருக்கிறார். அப்படியானால் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள அத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதற்கு உடந்தையாக இருந்தார்களா என்பதை தமிழ் மக்களுக்கு விளக்க வேண்டும்.
ஏனெனில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களின் சொத்து- தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்பாக சுமந்திரனும் சம்பந்தனும் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்க முடியாது. தமிழர்களுக்கு விரோதமான ஒரு சிங்கள அமைப்புடன் ஊடக ஒப்பந்தத்தை மட்டுமல்ல தொடர்பை பேணுவது கூட விடுதலை வேண்டிய நிற்கும் தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாகும்.
இத்தகைய அமைப்புக்களின் தொடர்புகளினால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவுகள் ஏற்படலாம் என அச்சப்படும் தமிழ் மக்களுக்கு அதை நிரூபிக்கும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளியிட்டிருக்கும் அறிக்கை வெளிவந்திருக்கிறது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பலத்தை சிதைக்கும் வகையில் சம்பந்தன் போன்ற தமிழரசுக்கட்சி தலைவர்கள் செயற்படுகிறார்கள் என்றும் சர்வதேச அழுத்தங்களிலிருந்து சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராசபக்சவையும் அவரது அரசையும் காப்பாற்றுவதற்காகவே சம்பந்தன் தனியாக மகிந்த ராசபக்சவை சந்தித்து வருகிறார் என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சாட்டி இருக்கிறார்.
சுரேஷ் பிரேமச்சந்திரனின் குற்றச்சாட்டை சம்பந்தன் அவர்கள் சில வேளைகளில் மறுக்கலாம். ஆதாரமற்ற குற்றச்சாட்டு என நிராகரிக்கலாம். ஆனால் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வு பற்றி பேசுவதற்காக சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராசபக்சவை சந்திக்கிறார் என்றால் அவர் ஏன் தனியாக சென்று சந்திக்க வேண்டும் என்ற கேள்வி எழுவது இயல்பானதுதான்.
அலரிமாளிகையில் சம்பந்தனுடனான சந்திப்பில் மகிந்த ராசபக்ச தனது செயலாளர் லலித் வீரதுங்க, அமைச்சர் பீரிஸ், அமைச்சர் பசில் ராசபக்ச உட்பட அனைவரையும் தன்னுடன் வைத்து கொண்டு பேசுகிறார். ஆனால் தமிழர் தரப்பில் தனியாக சம்பந்தன் மட்டும் சந்திப்பதேன்? சம்பந்தனை மட்டும் தான் சந்திப்பேன் வேறு எவரையும் அழைத்து வரக் கூடாது என்று மகிந்த ராசபக்ச கூறியிருக்கிறாரா அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய தலைவர்களை அழைத்து செல்வதற்கு சம்பந்தன் விரும்பவில்லையா என்பதை சம்பந்தன் தெளிவு படுத்த வேண்டும்.
மகிந்த ராசபக்சவுடன் நடக்கும் சந்திப்பில் சம்பந்தன் தனது தனிப்பட்ட விடங்களை பேசுகிறார் என்றால் தனியாக அவர் சந்திக்க செல்வது பற்றி யாரும் கேள்வி எழுப்ப முடியாது. ஆனால் தமிழர்களின் உரிமை பற்றி இனப்பிரச்சினை தீர்வு பற்றி பேச செல்கிறார் என்றால் கட்டாயம் ஆகக்குறைந்தது இருவரையாவது அழைத்து செல்ல வேண்டும். அப்படி அழைத்து செல்ல வில்லை என்றால் சுரேஷ் பிரேமச்சந்திரன் சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டு உண்மையாகிவிடும்.
தன்னுடைய கட்சியை சேர்ந்தவர்களை அழைத்து செல்வதற்கு சம்பந்தன் தயக்கம் காட்டுவதேன்? மகிந்த ராசபக்சவுடன் தான் பேசும் விடயங்கள் வெளியில் தெரியவந்துவிடும் என்பதாலா அல்லது தனது கட்சியை சேர்ந்த யாரும் இந்த பேச்சுகளில் கலந்து கொள்ள தகுதியற்றவர்கள் என்பதாலா என்பதை தமிழ் மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும். இதை தெளிவு படுத்தவில்லை என்றால் மகிந்த ராசபக்சவையும் சிறிலங்கா அரசாங்கத்தையும் சர்வதேசத்திடமிருந்து காப்பாற்றுவதற்கே சம்பந்தன் மகிந்த ராசபக்சவை தனியாக சந்திக்கிறார் என்ற சுரேஷ் பிரேமச்சந்திரனின் கூற்று உண்மை என்று தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிலையே ஏற்படும்.
2000ஆம் ஆண்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கான அடித்தளங்கள் இடப்பட்டு 2001ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற அணியின் கீழ் தமிழர் விடுதலைக்கூட்டணியின் கீழ் முதலாவது தேர்தலை சந்தித்தது முதல் இன்றுவரை வடக்கு கிழக்கில் பெரும்பான்மை தமிழர்களால் ஏற்றுக்கொண்ட அரசியல் கட்சியாகவும் தமிழர்களின் நம்பிக்கைக்குரிய அரசியல் தலைமையாகவும் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் இவ்வாறான பிளவுகள் பலவீனங்கள் இருப்பது எந்த வகையிலும் ஆரோக்கியமானதல்ல.
மட்டக்களப்பின் குக்கிராமங்களில் ஒன்றான கல்லாற்றில் மாலை பொழுது ஒன்றில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயர் பிரேரிக்கப்பட்ட போது இந்த தமிழ் மக்களின் ஒன்றுமையின் சின்னமாக திகழும் என்ற நம்பிக்கை இதற்காக உழைத்த அனைவருக்கும் இருந்தது. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் அரசியலுக்குள் நுழைந்து 11வருடங்கள் கடந்து விட்டபோதிலும் சட்டரீதியாக அதனை பலப்படுத்திக்கொள்ளாது மோதல்களையும் நம்பிக்கையீனங்களையும் வளர்த்து கொண்டிருப்பதற்கான காரணத்தை உரியவர்கள் கண்டறிய வேண்டும். தங்களுக்குள் இருக்கும் பலவீனங்களையும் போட்டிகளையும் நம்பிக்கையீனங்களையும் களையவில்லை என்றால் நீண்டகாலத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது மக்கள் நம்பிக்கை கொள்வார்கள் என கூற முடியாது.
வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பெருவாரியாக ஆதரிக்கிறார்கள் என்றால் அதில் முக்கியகாரணங்களில் ஒன்று அரசின் மீதும் அரசுடன் சேர்ந்திருக்கும் தமிழ் கட்சிகள் மீதும் கொண்டிருக்கும் வெறுப்பாகும். அந்த வெறுப்பை கோபத்தை வெளிப்படுத்தும் ஆயுதமாகத்தான் தமிழ் மக்கள் இத்தேர்தல்களை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். எத்தனை காலத்திற்கு வெறுப்பையும் கோபத்தையும் மூலதனமாக கொண்டு அரசியலை நடத்த முடியும்?
உரிமையை விடுதலையை பெற்றுத்தரக் கூடிய பலமான அமைப்பு என்ற நம்பிக்கை தமிழ் மக்களுக்கு ஏற்படும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தன்னை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். தமிழ் மக்களின் நம்பிக்கை என்ற மூலதனத்தை பெறாதவரை பல தியாகங்கள், இழப்புக்கள் மத்தியில் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம் இருண்டதாகவே இருக்கும்.
இரா.துரைரத்தினம்

 

No comments:

Post a Comment