Monday, October 22, 2012

சர்வதேசம் ஈழத்தமிழர் பிரச்சினையை மறந்து வருவது மிகவும் அபாயமான சமிஞ்சை – பி.பி.சி. முன்னாள் நிருபர் பிரான்ஸஸ் ஹரிசன்

Frances-Hதமிழர்களின் அவலங்களை வெளிக்கொணர எனது  புத்தகம் உதவும் என்ற நம்பிக்கையிலேயே எனது புத்தகத்தை எழுதினேன். இது நான் தமிழர்களிற்குச் செய்யும் ஒரு கடமையாக நினைக்கிறேன். ஆனால் சர்வதேச சமூகம் ஈழப்பிரச்சினை முற்றாகவே மறந்து வருவதை தமிழர்களாகிய நீங்கள் உணர வேண்டும் என ரொறன்ரோவில் நடைபெற்ற தமிழ்மிரர் விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையில் தெரிவித்தார்.

 
இன்னமும் எண்ணப்படும் சாவுகள் என்ற புத்தகத்தை எழுதிய முன்னைநாள் பி.பி.சி.யின் சிறீலங்காவிற்கான நிருபரான பிரான்ஸஸ் ஹரிசன் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிக்கான தனது முதல் விஜயம் அவர்களுடனான தொடர்பு குறிப்பாக சமாதானச் செயலகப் பணிப்பாளரான புலித்தேவனுடனான தனது தொடர்பு குறித்து விரிவாக விபரித்தார்.
 
நவீன தொலைதொடர்பு உலகிற்கு தன்னை இட்டுச் சென்றவர்களே புலிகள் என்றும் “ஸ்கைப் என்ற தொடர்பாடலை தான் அவர்களின் மூலமாகவே உபயோகப்படுத்த கற்றுக் கொண்டதாகவும் தெரிவித்த பிரான்ஸஸ் ஹரிசன் இறுதிப் போரின் கடைசி 6 மாத காலத்திலும் புலிகளும் அவர்கள் சார்ந்த மக்களும் சந்தித்த பேரவலங்கள் உலகிற்குத் தெரியவரவில்லை என்பதே தனது ஆதங்கம் எனத் தெரிவித்தார்.
 
உலகம் மாறிக் கொண்டேயிருக்கிறது. இப்போது காசா பற்றியும் இஸ்ரேல் பற்றியும் பேசுகிறார்கள். நாளை இன்னொரு பிராந்தியத்தைப் பற்றிப் பேசுவார்கள். சர்வதேசம் இலங்கை அரசைத் தண்டிக்கும் என நான் மிகவும் நம்பியிருந்தேன். ஆனால் ஐக்கிய நாடுகள் அவை மற்றும் சர்வதேச தீர்மான சக்திகள் போன்றவை இலங்கை அரசைத் தட்டிக் கொடுத்து வருகின்றன என்பதை தான் உணர்வதாகவும்.
ஐக்கிய நாடுகள் அவையின் உப குழு இறுதிப் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கை 40.000 ஆயிரம் என்று சொல்கின்ற போதும் அது 75.000 ஆக இருக்கலாம் என்பதே பலரின் கணிப்பாக உள்ளதாகவும். இவர்களின் இழப்புக்களிற்கான பதில்தேடுவதைப் புலம்பெயர்ந்த தமிழர்களே முன்னெடுக்க வேண்டும் எனவும்.
 
ஆனால் தனது புத்தகம் குறித்த கருத்துப் பதிவுகளில் புலம்பெயர்ந்த தேசத்தைச் தமிழர்கள் சிலர் தனது புத்தகத்தை கடுமையாக விமர்சித்துள்ளதாகவும் இது தனக்கு பெருத்த ஏமாற்றத்தை அளிப்பதாகவும் தெரிவித்த அவர். தனது புத்தகம் உலகிற்கு எதைத் தெரிவிக்க வேண்டுமென எழுதப்பட்டதோ அந்த விவகாரம் உலகத்தால் மறக்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதைப் புலம்பெயர்ந்த தமிழர்கள் உணர வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
தான் புத்தகம் எழுதுவதை அறிந்த சில பிரபல்யங்கள். சிறீலங்கா விவகாரத்தைப் பற்றி எழுதுகிறீர்களா? அதற்கு என்ன இப்போ முக்கியம் எனக் கேட்டதையும் நினைவுபடுத்திய அவர். காலம் மாறிவருவதைக் கருத்திற் கொண்டு இன்னமும் எண்ணப்படும் இறப்புக்களிற்கான நியாயத்தை தமிழர்கள் இப்போது தேடாவிட்டால் நிச்சயமாக இந்த விவகாரம் பத்தோடு பதினொன்றாகக் காணாமற் போய் விடும் என்ற தனது கவலையையும் பதிவு செய்தார்.
இந்த விழாவில் முன்னைநாள் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரும். தமிழர்களிற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவருமான றொபேட் இவான்ஸ் கலந்து கொண்டார் என்பதும். கனடாவின் குடியுரிமை அமைச்சர் இவ்விழாவிற்கு தன்னால் வரமுடியாததால் தனது வாழ்த்துச் செய்தியினை பிரிதொரு பாராளுமன்ற உறுப்பினர் மூலம் கொடுத்து அச்செய்தி அவையில் நேரடியாக வாசித்தளித்தளிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment