Monday, October 22, 2012

இலங்கையை இராணுவமயமாக்க அரசு முயற்சி

images (1)13ஆவது அரசியல் திருத்தத்தை இல்லாதொழிக்க வேண்டும் எனப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்த கருத்துக்கு அரசு உடனடியாகப் பதில் கூறியாக வேண்டும். அதிகாரப் பரவலாக்கலில் உண்மைத் தன்மை இருந்தால் அரசு ஏன் இன்னும் மௌனம் காக்கிறது? எது எப்படி இருப்பினும், அதிகாரப் பரவலாக்கலில் அரசின் உண்மையான நிலைப்பாட்டையே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் என்று ஜனநாயக மக்கள் முன்னணி யின் பிரதித் தலைவர் கலா நிதி குமரகுருபரன் நேற்றுத் தெரிவித்தார்.
எந்தவொரு அமைச்சின் செயலாளரும் அரசியல் கருத்துகளைத் தெரிவிப்பதில்லை. ஆனால், தனது குடும்ப அதிகாரத்தைக்கொண்டே அவர் மேற்படி கருத்தொன்றைத் தெரிவித்துள்ளார் எனத் தெரிவித்த அவர், கே.பியுடன் பேச்சு நடத்துவதற்குப் புலம்பெயர் தமிழர்கள் அறிவிலிகள் அல்லர். இப்போதுள்ள தமிழ்த் தலைவர்கள் மக்கள் ஆதரவற்றவர்களும்  அல்லர் என்றும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று நடைபெற்ற பொது எதிர்க்கட்சிகளின் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே கலாநிதி குமரகுருபரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
13ஆவது அரசியல் திருத்தத்தை இல்லாதொழிக்கவேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். பொறுப்புவாய்ந்த அதிகாரத்திலுள்ள அமைச்சின் செயலாளர்கள் இவ்வாறான அரசியல் கருத்துகளை வெளியிடமாட்டார்கள்.
ஆனால், தமது குடுமப அதிகாரத்தை வைத்துக்கொண்டே அவர் இப்படியொரு கருத்தைக் கணிப்பிடுகிறார். கோட்டாபய ராஜபக்ஷவின் கருத்தை ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் சம்பிக்க ரணவக்க, விமல் வீரவன்ஸ, கலாநிதி குணதாச  அமரசேகர ஆகியோர் வரவேற்றுள்ளனர்.
கோட்டாபய ராஜபக்ஷவின் கருத்துக் குறித்து அரசு இதுவரையில் பதிலளிக்கவில்லை. தமிழர் இனப்பிரச்சினைத் தீர்வு விவகாரத்தில் அரசின் உண்மையான நிலைப்பாட்டையே அவர் தெரிவித்துள்ளார். அவர் மேற்படி கருத்தைக் கூறியமைக்கு நாம் அவருக்கு நன்றிகூறவேண்டும்.
ஏனெனில், இனப்பிரச்சினைக்குத் தீர்வு வழங்குவதாகக் கூறிக்கொண்டு இந்த அரசு வெறும் கபட நாடகத்தையே நடத்திவருகின்றது. “திவிநெகும’ (வாழ்வின் எழுச்சி) என்ற சட்டமூலத்தினூடாக மாகாணசபைகளின் அதிகாரங்களை மத்திய அரசின்வசம் சுவீகரித்துக்கொள்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்துவருகின்றது.  இது மட்டுமல்ல, இன்னும் பல நடவடிக்கைகளினூடக 13ஆவது அரசியல் திருத்தத்தை அரசு சிறிதுசிறிதாக இல்லாது செய்துவருகின்றது.
அரசின் இந்த நடவடிக்கைகளின் உண்மைத்தன்மையையே கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆனால், கோட்டாபய ராஜபக்ஷவின் இந்தக் கருத்துக்கு அரசு இதுவரையில் பதிலளிக்கவில்லை. அரசு இதற்கு உடனடியாகப்  பதிலளித்தேயாகவேண்டும்.
கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனைக் கொண்டு புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சு நடத்தவுள்ளோம் என்று அரசு கூறுகிறது. புலம்பெயர் தமிழர்கள் ஒன்றும் அறிவிலிகள் அல்லர். அத்துடன், தமிழ்த் தலைவர்களும் மக்கள் ஆதரவற்றவர்கள் அல்லர்.
நாட்டில் இடம்பெற்றுவருகின்ற ஜனநாயக விரோத ஆட்சியால் தமிழ் மக்களின் காணி, நிலம் முதல் மயானங்களையும் இராணுவத்தினர் அபகரித்துவிட்டனர்  என்றார் கலாநிதி குமரகுருபரன்

No comments:

Post a Comment