Thursday, October 11, 2012

நல்லூர் பிரதேச சபைக் காணி அபகரிப்புக்கு எதிராக வழக்கு; உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யத் தீர்மானம்

oderதிருநெல்வேலி கலாசாலையில் உள்ள பாற் பண்ணைக்கு முன்பாக அமைந்துள்ள நல்லூர் பிரதேச சபையின் காணியைப் படையினர் அடாத்தாக ஆக்கிரமித்துள்ளமைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு சபை முடிவு செய்துள்ளது.
நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற சபையின் விசேட கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்றைய கூட்டத் தின்போது சபைக்குச் சொந்தமான காணியைப் படையினர் அடாத்தாகக் கைப்பற்ற எடுத்த முயற்சிகள் குறித்து தலைவர் ப.வசந்தகுமார் விளக்கினார்.
இதனை அடுத்தே படையினரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்குத் தீர் மானிக்கப்பட்டுள்ளது. இந்தக் காணி சபைக்கு உரியது என்பதை உறுதிப்படுத்தும் அனைத்து ஆவணங்களையும் திரட்டி உயர்நீதிமன்றத்தில் விரைவில் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தைப் பிரதேச சபை உறுப்பினர் பெ.கனகசபாபதி பிரேரித்தார்.
தற்போது குறித்த காணியில் இராணுவம் காவலரண் ஒன்றை அமைத்துள்ளதாகவும் மேற்கொண்டு இந்தக் காணியில் எந்தவித வேலைகளையும் செய்யாதிருக்கத் தடை உத்தரவை நீதிமன்றத்தில் பெறுவது எனவும், இது குறித்து வடக்கு மாகாண ஆளுநருக்குத் தெரியப்படுத்துவது எனவும் நேற்றைய கூட்டத்தில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
அத்துடன் படையினரின் இந்த நடவடிக்கைக்கு எதிராகப் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் சபை உறுப்பினர்களும் இணைந்து போராட்டங்களை நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
படையினரின் இந்த அடாத்தான செயற்பாட்டுக்கு எதிராக நேற்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்களும் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.

No comments:

Post a Comment