Thursday, October 11, 2012

நீதித்துறையின் பாதுகாப்பை அரசு உறுதிசெய்ய வேண்டும்; சர்வதேச நீதித்துறை வல்லலுநர்கள் அமைப்பு கண்டனம்

lawநீதிச்சேவை ஆணைக் குழுவின் செயலாளரான மஞ்சுள திலகரட்ண உடல் ரீதியாகத் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இலங்கை அரசு உடனடி விசாரணையை மேற்கொண்டு நீதி வழங்கவேண்டுமென நிதித்துறை வல்லுநர்கள் அமைப்பு வலி யுறுத்தியுள்ளது.
இதன்மூலம் இலங்கையின் நீதித்துறையின் சுயாதீன செயற்பாடு குறித்து மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியையும், அவநம்பிக்கையையும் நீக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் இந்த அமைப்புக் கோரியுள்ளது.
தாக்குதல்களிலிருந்தும், அச்சுறுத்தல்களிலிருந்தும் இலங்கை நீதிவான்களுக்கு அளிக்கும் பாதுகாப்பும் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
நீதிச்சேவை ஆணைக் குழுவின் செயலாளரான மஞ்சுள திலகரட்ண, ஒக்டோபர் 7ஆம் திகதி அடையாளங் காணப்படாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளார். இத்தாக்குதலுக்குக் கடும் ஆட்சேபனை தெரிவித்து சட்டத்தரணிகளும், நீதிவான்களும் வேலைநிறுத்தப் போராட்டமொன்றை மேற்கொண்டனர்.
அத்துடன், நீதித்துறை சுயாதீன இயக்கத்துக்கு ஏற்பட்டுள்ள மிரட்டல்களையும் சூசகமாகச் சுட்டிக்காட்டியிருந்தார்கள். “இலங்கையின் சட்ட அமுலாக்கம், நீதித்துறை ஆகியவை மீது நம்பிக்கை இழப்பதற்கான காரணங்களில் உடல்ரீதியிலான இத்தாக்குதல் மற்றுமொரு பயங்கர நடவடிக்கையாக அமைகிறது” என நீதிக்கான சர்வதேச நீதிமன்ற ஆசிய பணிப்பாளர் சாம் ஷரிபி குறிப்பிட்டுள்ளார்.
“இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக இலங்கை அரசு உடனடி விசாரணையை மேற்கொண்டு குற்றவாளிகளை நீதிக்குமுன் நிறுத்தவேண்டும். அதேவேளை, தாக்குதல்களிலிருந்தும், அச்சுறுத்தல்களிலிருந்தும் இந்நாட்டு நீதிவான்களுக்கு அளிக்கும் பாதுகாப்பும் உத்தரவாதப்படுத்தப்படவேண்டும்” என்றும் அவர் கோரியுள்ளார்.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, செப்டெம்பர் ஆரம்பத்தில் பிரதம நீதியரசரையும், நீதிச்சேவை ஆணைக்குழுவின் இரு உறுப்பினர்களையும் சந்திப்பதற்கான நிகழ்ச்சியொன்றை மேற்கொள்ள முன்வந்தார். எனினும், இச்சந்திப்புக்கு நீதிச்சேவைகள் ஆணைக்குழு மறுத்துவிட்டது. இத்தகைய சந்திப்பு நீதித்துறையின் சுயாதீன இயக்கத்துக்குக் குந்தகமாக அமைந்துவிடக் கூடுமென்றும் அது காரணம் கூறியிருந்தது.
இதையடுத்து பிரதம நீதியரசர், நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் இதர உறுப்பினர்கள் ஆகியோர் மீது அரச கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் அச்சக, இலத்திரனியல் ஊடகங்கள் அவதூறு பிரசாரங்களைக் கட்டவிழ்த்து வந்தன.
ஆணைக்குழுவின் இந்த உறுப்பினர்களும், உச்சநீதிமன்ற நீதியரசர்களாக கடமைபுரிபவர்களே ஆவர். இதுகுறித்து நீதிக்கான சர்வதேச நீதிமன்ற ஆசிய பணிப்பாளர் சாம் ஹரிபி மேலும் குறிப்பிடுகையில், “நீதிவான்களை அச்சுறுத்துவதற்கும், அவதூறு கற்பிப்பதற்கும் அரச கட்டுப்பாட்டிலுள்ள ஊடகத்துறையை முடுக்கிவிடுவது, இலங்கை நீதித்துறையின் சுயாதீனத்துக்கும், பாரபட்சமற்ற செயற்பாட்டிற்கும் எதிரான தாக்குதலாகும்” என்றும் தெரிவித்துள்ளார்.
“மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு சுயாதீனமான நீதித்துறை இயக்கமே அவசியம்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment