இந்திய
– சிறிலங்கா பாதுகாப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து சிறிலங்கா
பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, இந்தியப் பாதுகாப்புச் செயலர்
சசிகாந்த் சர்மாவுடன் புதுடெல்லியில் இன்று பேச்சுக்களை நடத்தவுள்ளார். தொடர்ச்சியான கூட்டுப்பயிற்சிகள், இந்திய பாதுகாப்பு நிறுவனங்களில் சிறிலங்கா படையினருக்கான பயிற்சிகள், மரணத்தை ஏற்படுத்தாத, பாதுகாப்புக் கருவிகளை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இவர்கள் பேச்சு நடத்தவுள்ளனர்.
போரின் போது, சிறிலங்காவுக்கு இந்தியா ரேடர்கள், ரோந்துப் படகுகள் மற்றும் உயர்திறன் கருவிகளின் பராமரிப்பு போன்ற உதவிகளை இந்தியா வழங்கிய போதிலும், தமிழ்நாட்டின் எதிர்ப்புக் காரணமாக மரணத்தை ஏற்படுத்தும் ஆயுதங்களை வழங்க மறுத்து விட்டது.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு சிறிலங்காவுக்குத் தேவையான ஆயுதங்களை விநியோகிக்கத் தொடங்கிய சீனா, இந்தியாவின் நலனுக்கு நேரடியான அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய துறைமுகங்கள் மற்றும் மின்சக்தித் திட்டங்களில் முதலீடு செய்துள்ளது.
அதேவேளை சிறிலங்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கமும் இந்தியாவுக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானின் மிகச்சிறந்த இராணுவப் பயிற்சி நிறுவனங்களில் சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், இழந்துபோன செல்வாக்கை மீளப் பெறுவதற்காக கோத்தாபய ராஜபக்சவுடனான இன்றைய பேச்சுக்களின் போது, தமிழ்நாட்டின் எதிர்ப்புகளால் இருநாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள் பாதிக்கப்படாது என்ற உத்தரவாதத்தை சிறிலங்காவுக்கு புதுடெல்லி வழங்கும் என்று பயோனியர் ஆங்கில நாளேடு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment