கனடாவின்
பெரும்பாண்மைக் கட்சிகளில் ஒன்றான லிபரல் கட்சியின் தலைமைப்பதவிக்கான
வேட்பாளர் ஜஸ்ரின் ரூடோ ஈழத்தமிழர் விவகாரத்தை தனது கொள்கை விஞ்ஞாபனத்தில்
இணைப்பதாக கனடிய மனிதவுரிமை மையத்திடம் உறுதியளித்துள்ளார்.கனடாவின் புகழ்பூத்த பிரதமரான பிய ரூடோவின் மகனான இவரின் தலைமைத்துவப் பதவிக்கான போட்டி கனடாவின் தேசிய ஊடகங்களின் முக்கிய செய்தியாக மாறியுள்ள நிலையில், கனடிய மனிதவுரிமை மையம் இவருடனான உத்தியோகபூர்வ சந்திப்பொன்றை நேற்றைய தினம் கனடியத் தலைநகரில் மேற்கொண்டது.

சுமார் மூன்றரை மணி நேரம் நீடித்த இச் சந்திப்பில் ஈழத்தமிழர்களின் மனிதவுரிமை விவகாரத்தில் கனடிய மனிதவுரிமை மையம் ஆற்றி வரும் பங்களிப்பை பெரிதும் பாராட்டிய ஜஸ்ரின் ரூடோ கனடிய மனிதவுரிமை மையத்தின் இலங்கை தொடர்பான நிலைப்பாட்டோடு தான் ஒத்துப் போவதாகவும் தெரிவித்து,
மனிதவுரிமை விவகாரத்தை சிறீலங்கா மதித்து நடப்பதற்கு ஏற்றவகையில் செயற்படுவதற்கான வகையில் அதனை தனது கொள்கை விஞ்ஞாபனத்தில் இணைப்பதாகவும் தெரிவித்தார். இச்சந்திப்பில் கனடிய மனிதவுரிமை மையத்தின் பேச்சாளர் றொட் ரொஸ், கனடிய மனிதவுரிமை மையத்தின் ஊடக தொழில்நுட்ப ஆலோசகர் நாதன் தியா, சமூகவள ஆலோசகர் ஸ்ரான் முத்துலிங்கம், மக்கள் தொடர்பாடல் அலுவலர் பிரகாஸ் நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கனடிய தேசிய நீரோட்டத்தை சேர்ந்த வேற்று இனத்தவர்களை இயக்குனர் சபை அங்கத்தவர்களாகவும், இயக்குனர் சபை ஆலோசகர்களாகவும் கொண்டுள்ள கனடிய மனிதவுரிமை மையம் கனடாவின் மூன்று பிரதான கட்சிகளுடனும் மேற்கொள்ளும் தொடர்ச்சியான தொடர்பாடல்களின் மூலம் ஈழத்தமிழினத்திற்கு கிடைத்த இன்னொரு வெற்றியிது என மக்கள் தொடர்பாடல் அலுவலர் பிரகாஸ் நந்தகுமார் தெரிவித்தார்
No comments:
Post a Comment