
நல்லூர் பிரதேசசபைக்குச் சொந்தமான காணியை இராணுவம் அடாவடித்தனமாக அத்துமீறி ஆக்கிரமித்ததற்கு எதிராக நல்லூர் பிரதேசசபை மக்களாட்சி வழிமுறையில் சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு செய்து அதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. நீதிமன்றில் இக்காணி தொடர்பான வழக்கைத் தொடர்வதற்கான ஆவணங்களை நல்லூர் பிரதேசசபை தலைவர் கொண்டு சென்று கொடுத்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோதுதான் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
“மக்களாட்சி முறைமை வழியில் இந்த நாட்டில் எதுவும் செய்ய முடியாது
என்பதையும் இராணுவம் தமிழர் நிலங்களை அபகரிப்பதை தடுத்து நிறுத்த முயல்பவர்களுக்கு இப்படியான கீழ்த்தரமான நாகரிகமற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதையும் இந்தத் தாக்குதல் சம்பவம் வெளிப்படுத்துகின்றது என்றும் இது அனைத்துலக நாடுகளின் கவனத்திற்கு கொண்டு வரப்படும் என்றும்” சிவஞானம் சிறீதரன், நா.உ. தெரிவித்துள்ளார்.
வடக்கில் குடிகொண்டுள்ள சிங்கள இராணுவம் அவ்வப்போது பொது மக்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2011 ஓகஸ்ட் 22 இரவு நாவாந்துறையில் மர்மமான முறையில் நடமாடியவர்களைத் துரத்திச் சென்ற ஊர் மக்கள் மீது இராணுவம் தாக்குதல் மேற்கொண்டது. அதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் படுகாயப்பட்டார்கள். அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள். இராணுவத்துக்குப் பயந்து பெண்கள், பிள்ளைகள் மற்றும் எஞ்சியுள்ள ஆண்கள் இரவுப் பொழுதை நாவாந்துறை தேவாலயத்தில் கழித்தார்கள்.தாக்குதல் நடத்திய இராணுவம் பொது மக்கள் 95 பேர் மீது வழக்குத் தொடுத்துள்ளது. வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
யூன் 16, 2011 அன்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் அளவெட்டி மகாஜனசபை மண்டபத்தில் நடத்திய உள்ளூராட்சி தேர்தல் பரப்புரைக் கூட்டத்துக்குள் துப்பாக்கிகள், கொட்டன்கள், மண்வெட்டிப் பிடிகள், தடிகள் சகிதம் திடீரெனப் புகுந்து சீருடை தரித்த இராணுவத்தினர் அங்கிருந்த பொதுமக்களை கொட்டன்களால் தாக்கியும் அடித்தும் விரட்டினர். கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தாக்க முற்பட்டனர். மெய்ப்பாதுகாவலர் இடையில் புகுந்து அடியை வாங்கியதால் சிப்பாய் ஒருவரின் பலமான தாக்குதலில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் நூலிழையில் உயிர் தப்பினார். இது தொடர்பாக காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்தும் தாக்குதல் நடத்தியோர் மீது எந்த சட்ட நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. தமிழர் மீது சிங்கள இராணுவம் தாக்குதல் நடத்தினால் தாக்கியோர் மீது எந்த நடவடிக்கையையும் அரசு மேற்கொள்ளாது என்பது எழுதப்படாத விதியாகிவிட்டது.
கற்றபாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையம் வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் எனப் பரிந்துரை செய்தது. ஆனால் போர் முடிந்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் வடக்கில் நிலை கொண்டுள்ள படையினர் எண்ணிக்கை குறையவில்லை. தமிழ்மக்களின் நாளாந்த வாழ்க்கையில் இராணுவத்தினரின் தலையீடு தொடர்ந்தவண்ணம் உள்ளது.
வடக்கில் நிலை கொண்டிருக்கும் இராணுவத்தினரின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைக்கப்படும் அதன் பின்னர் வடக்கின் சிவில் நிருவாகம் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படும் என கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணையத்தின் முன்பு செப்தெம்பர் 09, 2010 அன்று சாட்சியம் அளித்த இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரிய, கடற்படைத் தளபதி வைட் அட்மிரல் திஸர சமரசிங்க மற்றும் விமானப் படைத்தளபதி ரொஷான் குணத்திலக ஆகியோர் உறுதி கூறினார்கள். ஆனால் வடக்கு கிழக்கில் பல புதிய படைத்தளங்களும் கடற்படை முகாம்களும் கண்காணிப்புக் கோபுரங்களும் காவலரண்களும் அதிகரித்த வண்ணம் உள்ளன.
கடந்த செப்தெம்பர் 19 ஆம் நாள் சென்னையில் இருந்து வெளிவரும் இந்து நாளேட்டில் அதன் நிருபர் நிருபா சுப்பிரமணியன் எழுதிய செய்தி வெளிவந்தது. இந்து சரி, நிருபா சுப்பிரமணியன் சரி கடந்த காலங்களில் சிறீலங்கா அரசுக்கு ஆதரவாக லாலியும் வி.புலிகளுக்கு எதிராக அறம் பாடியும் வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இதே காலப் பகுதியில் இந்து நாளேட்டின் ஆசிரியர் இராம் அவர்களது அளப்பரிய பணியைப் பாராட்டி சிறீலங்கா அரசு அவருக்கு ‘சிறீலங்கா ரத்னா’ உயர் விருதை வழங்கியிருந்தது. அதே ஏடு ” வட – கிழக்கில் சிறீலங்கா இராணுவத்தின் இருப்பு பெரிய அளவில் உள்ளது” (Sri Lankan Army still has vast presence in North & East) என்ற தலைப்பில் வெளியிட்ட செய்தியில் “விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றிபெற்று மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் தீவின் வட – கிழக்கில் சிறீலங்கா இராணுவம் மிகப் பெரிய அளவில் தனது இருப்பை வசமாக வைத்துக் கொண்டுள்ளது. தமிழர் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளில் 19 பிரிவுகளில் 16 பிரிவுகளை நிறுத்தி வைத்துள்ளது.
இந்துவுக்குக் கிடைத்திருக்கும் தகவல் படி யாழ்ப்பாணத்தில் உள்ள 3 பிரிவுகள் நீங்கலாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவில் தலா3 பிரிவுகளை நிறுத்தியுள்ளது. வவுனியாவில் 5 பிரிவுகளை நிறுத்தியுள்ளது. இவற்றைவிட மேலும் 2 பிரிவுகள் கிழக்கில் நிறுத்தப்பட்டுள்ளன. மூன்று பிரிவுகள் தென்னிலங்கையில் நிறுத்தப்பட்டுள்ளன.
ஏனைய படைகளோடு ஒப்பிடும் போது சிறீலங்கா படைப்பிரிவு
சிறியதாகும். ஆறாயிரம் தொடக்கம் ஏழாயிரத்துக்கு இடைப்பட்ட வீரர்களைக்
கொண்டது. இதில் குறைந்த எண்ணிக்கையை எடுத்தால் வடக்கு கிழக்கில் 85,000 –
86,000 போர் வீரர்கள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளார்கள். இந்த எண்ணிக்கை
கிழக்கில் பிறிதாக ஈடுபடுத்தப்பட்டுள்ள சிறப்பு நடவடிக்கைப் படையணி
(Special Task Force) மற்றும் கடற்படை, விமானப்படை ஆகியவற்றை உள்ளடக்காது.”
ஆனால் சிங்கள இராணுவம் தொடர்ந்து தனது படை எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்பட்டுவிட்டதாகவும் இப்போது அதன் எண்ணிக்கை 15,000 – 18,000 மட்டுமே என முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கப் பார்க்கிறது.
கடந்த மாதம் மரியாதையின் நிமித்தம் தன்னைச் சந்தித்த
அய். நா சபை அதிகாரிகளிடம் போர் முடிவடைந்து அமைதியேற்பட்டிருக்கின்ற
போதிலும் வடபகுதியில் இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை என
யாழ்ப்பாண மாவட்ட ஆயர் தோமாஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை முறையிட்டார்.
ஏப்ரல், 2009 இல்
முல்லைத்தீவின் நந்திக்கடல் நீரேரிக்கு அண்மையாக விடுதலைப்புலிகளின்
படையணிகளையும் பொதுமக்களையும் சிறீலங்கா இராணுவம் சுற்றிவளைத்த போது அது 20 படைப்பிரிவுகளை கொண்டதாக இருந்தது.அதாவது இந்த காலப்பகுதியில் சிறீலங்கா இராணுவத்தில் 11, 21, 22, 23, 51, 52, 53, 55, 56, 57, 58, 59, 61 ஆகிய படைப்பிரிவுகளும் சிறப்பு நடவடிக்கை படையணிகளான (Special Task Force) 2, 3, 4, 5,6, 7, 8 என்பனவும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தன.
வடபகுதியில் நிலைகொண்டுள்ள இந்த நடவடிக்கைப் படையணிகளில் நடவடிக்கை படையணி 4,5, 8 என்பன படைப்பிரிவு நிலைக்குத் தரமுயர்த்தப்பட்டது. மேலும் ஒரு புதிய படைப்பிரிவு (65) போர் நிறைவடைந்த பின்னர் உருவாக்கப்பட்டது.
இராணுவம் 2009 மே மாதம் மரபு வழியிலான சமரை நிறைவு செய்துள்ளதாக அறிவித்த போது 265 பற்றாலியன்களை உள்ளடக்கிய 20 படைப்பிரிவுகளைக் கொண்ட 240,000 படையினரை சிறீலங்கா இராணுவம் கொண்டிருந்தது. எனினும் அது தற்போது 300,000 படையினரை கொண்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய இராசபக்சே தெரிவித்திருந்தார். அது மட்டுமல்லாது சிறீலங்காவின் முப்படையினரினதும் எண்ணிக்கை 450,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். (வீரகேசரி வாரஏடு – 02.05.2010)
போருக்குப் பின்னர் படைக்குறைப்பு நடைபெறவில்லை. பாதுகாப்பு மற்றும் நகர மேம்பாட்டுக்கு ஒதுக்கப்படும் நிதி ஆண்டு தோறும் கூடிக் கொண்டு போகிறதேயொழிய குறையவில்லை. பாதுகாப்பு அமைச்சுக்கு 2013 ஆண்டுக்கு 290 பில்லியன் ( ஒரு பில்லியன் 100 கோடி) உரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டின் முழுச் செலவு 2,250 பில்லியன். இந்த ஆண்டு பாதுகாப்பு அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதி சென்ற ஆண்டை விட 26 விழுக்காடு அதிகமானது. 2012 இல் மொத்தச் செலவில் (2,220 பில்லியன்) 230 பில்லியன் உரூபாய் ஒதுக்கப்பட்டது.
மேலே கூறியவாறு 20 படைப்பிரிவுகளின் மொத்த எண்ணிக்கை 300,000 என்று எடுத்துக் கொண்டால் வடக்கு கிழக்கில் நிலைகொண்டுள்ள 16 படைப்பிரிவின் எண்ணிக்கை 240,000 ஆக இருக்க வேண்டும்! அண்மையில் சுரேஷ் பிரேமச்சந்திரன், நா.உ. வடக்கு கிழக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கை 170,000 ஆயிரம் என்றும் தென்பகுதியில் 30,000 ஆயிரம் இராணுவத்தினர் மட்டுமே இருக்கின்றனர் என்றும் கூறியிருந்தது நினைவு கூரத்தக்கது.
எனவே வடக்கில் 15,000 – 18,000 இராணுவத்தினர் மட்டுமே உள்ளனர் என்று கூறுவது ஏமாற்றுப் பேச்சாகும். அது உண்மையானால் மிகுதி 150,000 – 200,000 இராணுவத்தினர் எங்கே இருக்கிறர்கள் என்ற கேள்வி எழுகிறது.
போர் முடிந்த அடுத்த வாரம் பேசிய முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா 170,000 ஆயிரமாக இருந்த இராணுவத்தை 230,000 உயர்த்திவிட்டதாகவும் அதனை மேலும் 300,000 ஆக உயர்த்த வேண்டிய ‘தேவை’ இருப்பதாகவும் குறிப்பிட்டார். (http://www.dnaindia.com/
பாதுகாப்பு அமைச்சின் இணையதளத்தில் காணப்படும் தரவுகளின்படி சிறீலங்காவின் படை பலம் 500,000 (http://www.defence.pk/forums/ military-forum/172283-sri- lanka-armed-forces-military- sri-lanka.html)
எனக் கூறப்பட்டுள்ளது. சிறீலங்கா இராணுவம், சிறீலங்கா கடற்படை, சிறீலங்கா
விமானப்படை, சிறப்பு நடவடிக்கைப் படையணி, அரச சிறீலங்கா புலனாய்வு சேவை,
சிவில் பாதுகாப்புப் படை ஆகியவற்றின் மொத்த எண்ணிக்கையே 500,000 ஆகும். சேமப்படை 80,000 (Reserve personnel) ஆகும். கடற்படையில் பலம் 48,000, விமானப்படையின் பலம் 28,700 ஆகும்.
வடக்கு கிழக்கில் இராணுவம் நிலை கொண்டிருக்கு மட்டும் தமிழ் மக்களது மீள்குடியமர்வு சாத்தியமில்லை. கடந்த செம்தெம்பர் 24 ஆம் நாள் இராணுவம் மாணிக்கம் தோட்ட முகாமில் இருந்த 361 குடும்பங்களை (1,187 பேர்) மந்தைகள் போல் பலவந்தமாகப் பாரவண்டிகளில் ஏற்றிச் சென்று காடுகளில் இறக்கிவிடப்பட்டார்கள். இவர்களில் 251 குடும்பங்களைச் சேர்ந்த 827 பேர் மந்துவில் பிரதேச மக்கள் ஆவர். எஞ்சிய 110 குடுபங்களைச் சேர்ந்த 360
பேர் கேட்பார்புலவு மக்கள் ஆவர். அவர்களது காணிகளில் சிங்கள இராணுவம்
முகாம்கள், வீடுகள் கட்டி குடியிருக்கிறது. அவர்களது விவசாய நிலங்களில்
இராணுவம் விவசாயம் செய்கிறது! இதனால் மக்கள் சொந்தக் காணிகளில்
குடியமரமுடியாமல் இருக்கிறது.
திருகோணமலை மாவட்டத்தில் சம்பூரில் 5,000 மேற்பட்ட தமிழ்மக்கள் முகாம்களில் இருக்கின்றனர். இவர்கள் கடந்த 6
ஆண்டுகளாகச் சொந்தக் காணிகளுக்குச் செல்லமுடியாத நிலையில் இராணுவம்
காணிகளை ஆக்கிரமித்துள்ளது. இம் மக்களது குடியிருப்புக் காணிகள், வயல்
காணிகள், வீடுகள் ௭ன ௭ல்லாவற்றையும் இராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள்
வைத்துள்ளது. அதுபோல் கிளிநொச்சி நகரிலும் பரவிப்பாஞ்சான் கிராமம்
முழுமையாக இராணுவப் பிரிகேட் பிரிவுக்காக அபகரிக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்குப் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்தோர் சொந்த
இடங்களிற்குத் திரும்பிச் செல்ல முடியாதநிலையில் இராணுவத்தினர் பொது
மக்களுடைய காணிகள், நிலங்கள் வீடுகளை ஆக்கிரமித்து வைத்துள்ளனர். ஆனால்,
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய இராசபக்சே மக்களை
மீளக்குடியமர்த்திவிட்டோம் ௭ன்கிறார். இது உலக நாடுகளை ஏமாற்றும்
முயற்சியாகும். மாணிக்கம் தோட்டத்தை மூடி வடக்கில் இடம்பெயர்ந்தோர் யாரும்
இல்லை எனக் காண்பிக்க அவர் முயற்சிக்கின்றார்.
இறுதிக் கட்டப் போரின் போது இடம்பெயர்ந்த 300,000 அகதிகளில் 75, 000 பேர்
இன்னமும் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படவில்லை. மாணிக்கம் தோட்ட
முகாம்களிலிருந்து வெளியேறிய ஒரு தொகுதி அகதிகள் இடைத்தங்கல் முகாம்கள்
அல்லது நண்பர்கள், உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர். பல்வேறு
காரணிகளினால் அகதிகள் மீள்குடியேற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. சொந்த
இடங்களில் மீள்குடியேறிய மக்களுக்கு அரசாங்கம் உரிய வசதிகளை ஏற்படுத்திக்
கொடுக்கத் தவறியுள்ளது என இரா.சம்பந்தன் தில்லியில் வைத்து அரசு மீது
குற்றம் சுமத்தியுள்ளார்.
சிங்கள இராணுவம் தமிழ்மக்களின் நாளாந்த அலுவல்களில்
தலையிடுகிறது. திருமணமா, பூப்புநீராட்டு விழாவா, திருவிழாவா, விளையாட்டுப்
போடியா எதுவாக இருந்தாலும் தங்களுக்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைக்குமாறு
இராணுவம் தமிழ்மக்களை நிர்ப்பந்திக்கிறது.
தற்சமயம் இறுதிப் போரின்போது இடம்பெயர்ந்து பின் தமது
சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள மந்துவில், கோம்பாவில்,
புதுக்குடியிருப்பு மேற்கு இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு கிழக்கு,
சிவநகர் உட்பட பல பகுதிகளில் இராணுவம் குடும்ப விபரங்களைச் சேகரிக்கும்
பணியில் ஈடுபட்டுள்ளது. சிவில் உடையில் வீடு வீடாகப் போகும்
இராணுவத்தினர் வீடுகளில் தங்கியிருப்போரின் பெயர் விபரங்களைப் பதிவு செய்து
வருகின்றனர்.
இது போன்ற இராணுவத்தின் நடவடிக்கைகள் தமிழ்மக்களின் இயல்பு
வாழ்க்கைக்கு பாரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. தமிழ் சமூகத்தை
திட்டமிட்டு அழிப்பதற்கே பரம்பரைக் காணிகள் இராணுவத்தினால்
கையகப்படுத்தப்படுகிறது என மன்னார் ஆயர் இராயப்பு யோசேப் ஆண்டகை அச்சம்
வெளியிட்டுள்ளார்.உணவு, தன்னாதிக்கத்தை பாதுகாப்பதற்காகவும் மக்கள் உரிமையை உறுதிப்படுத்தும் நோக்குடன் காணிக் கொள்கைக்கு எதிரான தேசிய எதிர்ப்பு வாரம் மன்னாரில் கடைப்பிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு மன்னார் ஞானோதயத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றிய ஆயர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.மேலும் அவர் பேசுகையில் “மக்களின் தனித்துவம், சுதந்திரம் அனைத்தும் சூறையாடப்படுகின்றன. காணிகளைத் தாம் நினைத்தவாறு அபகரிப்பது மட்டுமல்லாமல் மீன்பிடித் தொழிலை மேற்கொள்ள முடியாத அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது. பரம்பரை பரம்பரையாக எமது மக்கள் ஆண்டு, அனுபவித்த காணிகளை அரசு அபகரித்து வருகிறது. இது எங்கள் சமூகத்தை கூண்டோடு அழிக்கும் செயல். இதே போலவே கல்வித்துறையிலும் மறைமுகமான திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இங்கே நடைபெறுவது தனிநபர் சிக்கல் என்றோ, ஒரு பகுதி மக்களின் சிக்கல் என்றோ பார்த்துக் கொண்டிருக்க முடியாது. இது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் சிக்கலாக உருமாறி வருகிறது. வெறும் காணி மட்டும் பறிபோனால் போகட்டும் என்பது வேறு. இதனால் எமது சமூகம், இனம் அழிந்து போகும் பேரபாயம் தோன்றி உள்ளது. இப்பகுதியில் பரம்பரையாக வாழ்ந்த மக்கள் மீளக்குடியமர்ந்து வாழ முடியாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. அவர்களது உரிமைகளை வேறுயாரோ அனுபவிக்கும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. மன்னார் முள்ளிக்குளம் மக்கள் அந்தப் பிரதேசத்தில் பரம்பரையாக வாழ்ந்தவர்கள் அந்தக் கிராமத்தின் பழைமை வாய்ந்த குடிமக்கள். ஆனால் அவர்கள் தற்போது வசதிகள் அற்ற காட்டுப் பிரதேசத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்” என்று ஆயர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இராணுவம் வடக்கிலும் கிழக்கிலும் நிலை கொண்டிருக்கு
மட்டும் அது பொதுமக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திக் கொண்டே
இருக்கும். நல்லூர் பிரதேச சபைத் தலைவர் வசந்தகுமார் மீது மேற்கொள்ளப்பட்ட
தாக்குதல் அதனையே சுட்டிக் காட்டுகிறது. இராணுவமே தாக்குதல் நடத்துவதால்
அவர்களைப் பிடிக்கவோ, சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டனை வாங்கிக்
கொடுக்கவோ நாட்டில் யாரும் இல்லை.
ஒரு குடிசைக்குள் பாம்போடு வாழ்வது போல் தமிழ்மக்கள் வாழ்ந்து
கொண்டிருக்கிறார்கள். இராணுவத்தை வெளியேற்றினால் மட்டுமே தமிழ்மக்கள்
நிம்மதியாக வாழமுடியும்.
No comments:
Post a Comment