Friday, October 05, 2012

காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் இன்று மறுசீராய்வு மனு: கர்நாடக முதல்வர்

காவிரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ( அக்டோபர் 4 )மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று, கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்தார்.
பெங்களூர், கிருஷ்ணா அரசு இல்லத்தில் புதன்கிழமை ள்ற்ன்க்ங்ய்ற்ள்ண்ய்ற்ங்ழ்ய்ங்ற்ஜ்ர்ழ்ப்க்.ஸ்ரீர்ம் இணையதளத்தைத் தொடக்கிவைத்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தினமும் வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட காவிரி நதி நீர் ஆணையம் பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (அக்டோபர் 4) மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும். இதுகுறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்த நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தில்லியில் முகாமிட்டுள்ளார்.

கர்நாடக மக்களின் உணர்வுகளுக்கு அரசு மதிப்பளிக்கும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கிணங்கவே காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
காவிரி நீரைப் பாதுகாக்கக் கோரி சாலை மறியல் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், கன்னட அமைப்பினருக்கு மாநில அரசு என்றும் துணையாக இருக்கும். ஆனால், போராட்டத்தை அமைதியான முறையில் நடத்த வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
மாநில விவசாயிகளின் நலன் காக்க கர்நாடக அரசு உறுதி பூண்டுள்ளது. காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறோம்.
மேலும், கர்நாடகத்தில் நிலவும் வறட்சி நிலை மற்றும் அணைகளின் நீர்மட்டத்தை அறிவதற்காக நிபுணர் குழுவை மாநிலத்திற்கு அனுப்பிவைக்க மீண்டும் பிரதமரைக் கேட்டுக் கொள்கிறேன்.
கர்நாடகத்தின் நீர், நிலம், மொழி விஷயங்களில் கன்னட மக்களின் உணர்வுகளுக்கு ஏற்ப மாநில அரசு நடந்து கொள்ளும் என்றார்.
உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதாக கர்நாடகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. எனினும், தவிர்க்க முடியாத காரணத்தால் இந்த மனு வியாழக்கிழமை தாக்கல் செய்யப்படும் என தற்போது கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை: இதனிடையே, கர்நாடக மாநில விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளுடன் அந்த மாநில முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் புதன்கிழமை இரவு ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவதை நிறுத்த வேண்டும் என்று விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர். அதற்கு பதில் அளித்த ஜெகதீஷ் ஷெட்டர், உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்த பிறகு தமிழகத்துக்கு வழங்கும் தண்ணீரை நிறுத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.

No comments:

Post a Comment