Friday, October 05, 2012

தமிழகத்தில் காவிரி உரிமை மீட்பு குழுவினர் ரயில் மறியல்- ஆயிரக்கணக்கானோர் கைது

தஞ்சாவூர்: தமிழகத்தில் டெல்டா மாவட்ட சாகுபடிக்காக காவிரியில் இருந்து தினமும் 2 டிஎம்சி நீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்று வலியுறுத்தி தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பெண்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாய சங்கங்கள், கட்சிகள் அடங்கிய காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது தஞ்சாவூர், கும்பகோணம் உள்பட பல்வேறு இடங்களில் ரயில் மறியல்கள் நடந்தன.
மயிலாடுதுறையில் இருந்து திருச்சி சென்ற பாசஞ்சர் ரயில், சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் உள்பட பல்வேறு ரயில்கள் மறிக்கப்ட்டன.

இதையடுத்து பெண்கள் உள்பட 600 பேர் கைது செய்யப்பட்டனர். அதே போல நாகப்பட்டிணத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட மொத்தம் 450 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிதம்பரம் ரயில் நிலையத்தில் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலை போராட்டக் குழுவினர் மறித்து கர்நாடக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 95 பேரை போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக காலை 7.45 மணிக்கு நாகூரில் இருந்து பெங்களூருக்கு சென்ற ரயிலை தமிழக இளைஞர் முன்னணியினர் மறித்து கர்நாடகா அரசுக்கு எதிராக கண்டன கோஷமிட்டனர். அவர்கள் 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சியில் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் ரெயில் மறியலில் ஈடுபட்ட மதிமுக மாவட்டச் செயலாளர் மலர்மன்னன் உள்பட 175 பேர் கைது செய்யப்பட்டனர்.

No comments:

Post a Comment