Friday, October 12, 2012

தீர்வுக்காக இணைந்து பணியாற்ற இந்தியா-கூட்டமைப்பு இணக்கம்;டில்லியில் மன்மோகனைச் சந்தித்த பின் சம்பந்தன் அறிவிப்பு

Untitled-1இலங்கைத் தமிழரின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில்  இந்திய அரசுடன் இணைந்து செயற்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணங்கியுள்ளது.  இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது  இந்த இணக்கம் எட்டப்பட்டதாக இரா. சம்பந்தன் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களைச் சந்தித்த இந்தியப் பிரதமர் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதில் இந்தியாவுடன் இணைந்து கூட்டமைப்பு செயற்பட வேண்டும் என்று கோரியதை அடுத்து இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் நேற்றுமாலை 5 மணியளவில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேச்சு நடத்தினர். சுமார் 45 நிமிட நேரம் இந்தச் சந்திப்பு நீடித்தது.
இலங்கை இனப்பிரச்சினை விடயத்தில் இந்தியா மேற்கொண்டுவரும் அனைத்து முயற்சிகள் குறித்தும் இந்தச் சந்திப்பின்போது இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் கூட்டமைப்பினரிடம் எடுத்து விளக்கினார்.
தமிழ் மக்கள் இலங்கையில் சுய மரியாதையுடனும், கௌரவத்துடனும் வாழ வேண்டும் என்ற தனது நிலைப் பாட்டிலிருந்து இந்திய அரசு பின்வாங்காது என்பதை மன்மோகன் தம்மிடம் வலியுறுத்தினார் என்று சம்பந்தன் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் இந்தியா மிகுந்த கவனம் செலுத்திவருகிறது. அந்தத் தீர்வு விரைவாக எட்டப்படவேண்டும் என்பதிலும் நாம் கவனமாக இருக்கிறோம். இதற்காக இலங்கைக்கு முழு அழுத்தங்களை வழங்கிவருகிறோம். இலங்கையில் வாழும் அனைத்துத் தமிழர்களின் உரிமைகள் உறுதிப்படுத்த வேண்டும் என்பதில் இந்தியா தெளிவாக இருக்கிறது” என்று இந்தியப் பிரதமர் இந்தச் சந்திப்பில் தெரிவித்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் “உதயனுக்கு” தெரிவித்தார்.
“இலங்கையில் தமிழர்கள் ஒரு தேசிய இனம். அவர்களுக்கென்று தனித்துவம் உண்டு. அதை இந்தியாவும் மதிக்கிறது. அவர்களுடைய வாழ்வுரிமை உறுதிப்படுத்தப்படவேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கு நல்லதொரு எதிர்காலம் கிடைக்கவேண்டும். அதனைத்தான் நாமும் விரும்புகிறோம். இதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இந்திய அரசும் இணைந்து செயற்படவேண்டும்” என்று பிரதமர் மன்மோகன்சிங் தம்மிடம் கோரினார் எனவும் அதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணக்கம் தெரிவித்ததாகவும் செல்வம் மேலும் கூறினார்.
இந்தியாவும் கூட்டமைப்பும் தீர்வு விடயத்தில் இணைந்துசெயற்படுவதாக அறிவிப்பதுடன் நின்றுவிடாது அதனை இலங்கை அரசுக்கு நேரடியாக எடுத்துச் சொல்ல வேண்டும் என்று மன்மோகனிடம் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளதாக இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
இதேவேளை, தெரிவுக்குழுவில் கூட்டமைப்பு இடம்பெறுவது குறித்து புதுடில்லி அக்கறை காட்டவில்லை என்கிறது கூட்டமைப்பு. அது குறித்து இந்தியப் பிரதமர் கேள்வி எதுவும் எழுப்பவில்லை என்றும் கூட்டமைப்பு தெரிவிக்கிறது.
“இந்தச் சந்திப்பின் போது இலங்கை அரசினால் அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்க வேண்டும்  என்ற கோரிக்கை எதனையும் பிரதமர் மன்மோகன்சிங் எம்மிடம் விடுக்கவில்லை. தெரிவுக்குழு குறித்து கூட்டமைப்பின் நிலைப்பாட்டை இந்தியப் பிரதமருக்கு எமது தலைவர் சம்பந்தன் தெளிவாக விளக்கினார். ஏற்கனவே இணக்கம் காணப்பட்டதைப் போல முதலில் அரசு கூட்டமைப்பு இடையேயான பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படவேண்டும்.
அந்தப் பேச்சுக்களில் எட்டப்படும் இணக்கப்பாடுகளை தெரிவுக்குழுவுக்குக் கொண்டு வரவேண்டும். அவ்வாறு செயற்பட அரசு முன்வந்தால் தெரிவுக்குழு பற்றி பரிசீலிப்பதற்கு கூட்டமைப்பு தயாராகவே உள்ளது. அதனை விட்டு உடனடியாக தெரிவுக்குழுவுக்கு வருமாறு இலங்கை அரசு கூறுவதை ஏற்க முடியாது. அரசை நம்புவதற்கு கூட்டமைப்பு தயாரில்லை. ஏனெனில் ஏற்கனவே பேச்சின்போது எட்டப்பட்ட பல முடிவுகள் இன்னும் செயற்படுத்தப்படவில்லை. இவ்வாறான நிலையில் தெரிவுக்குழுவுக்குச் சென்று மீண்டும் ஏமாறுவதற்கு கூட்டமைப்பு தயாரில்லை. அத்துடன் தமிழ் மக்களைத் தொடர்ந்து நெருக்கடிக்குள் தள்ளவும் கூட்டமைப்பு விரும்பவில்லை. அரசிடம் இருந்து ஒரு உறுதியான செயற்திட்டம் கிடைத்தால் மட்டுமே தெரிவுக்குழு பற்றி பரிசீலிக்கப்படும்” என்று தலைவர் இரா. சம்பந்தன் இந்தியப் பிரதமரிடம் விளக்கிக் கூறினார் என அடைக்கலநாதன் தெரிவித்தார்.
மீள்குடியமர்வு எனக் கூறி அரசு மக்களை காடுகளில் கொண்டுசென்று இறக்கிவிட்டிருப்பது, சர்வதேசத்தைத் திருப்திப்படுத்த இவ்வாறான மோசமான செயற்பாடுகளை அரசு மேற்கொள்வது, அத்துடன் உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் மக்களின் குடியிருப்புகள் விடுவிக்கப்படாமல் உள்ளமை, தமிழ் மக்களின் காணிகள் படையினரால் அபகரிக்கப்படுகின்றமை ஆகிய  விடயங்களையும் கூட்டமைப்பு இந்தியப் பிரதமரிடம் சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை குறித்தும் இந்தச் சந்திப்பில் பேசினோம். இது குறித்து இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனியை சந்தித்து எடுத்துரைக்குமாறு பிரதமர் எம்மிடம் கேட்டுக்கொண்டார். அதற்கிணங்க நாளை (இன்று) இந்திய பாதுகாப்பு அமைச்சரைச் சந்தித்து இந்த விடயம் குறித்து பேசவுள்ளோம் எனவும் அடைக்கலநாதன்  குறிப்பிட்டார்.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி, எம்.ஏ.சுமந்திரன், பொ.செல்வராசா ஆகியோர் இந்தியப் பிரதமருடனான சந்திப்பில் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment