Thursday, October 11, 2012

இறுதிக் கட்ட போரின் போது புலி உறுப்பினர்கள் சரணடைய விரும்பினர்: விக்கிலீக்ஸ்

wikileaks001இறுதிக் கட்ட போரின் போது தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் சரணடைவதற்கு முயற்சி செய்ததாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.
உலக நாடுகளில் இயங்கி வந்த அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுக்கும் அந்நாட்டு இராஜாங்கத் திணைக்களத்திற்கும் இடையிலான தொடர்பாடல்களை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.
அந்த அடிப்படையில் நோர்வேக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகள், இலங்கை விவகாரம் தொடர்பில் பரிமாறிக் கொண்ட தகவல்களும் விக்கிலீக்ஸில் வெளியிடப்பட்டுள்ளது.
இறுதிக் கட்ட போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சரணடைய விரும்பியதாக முன்னாள் நோர்வேயின் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

மே மாதம் 17,18ம் திகதி வரையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களுடன் தொடர்புகளைப் பேணினோம். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அல்லது வேறு சர்வதேச நிறுவனமொன்றின் ஊடாக இறுதி நேரத்தில் சரணடைய புலிகள் விரும்பினர்.
எந்த மூன்றாம் தரப்பும் போர்க் களத்தில் இருக்கவில்லை என்பதனால் வெள்ளைக் கொடியுடன் சரணடையுமாறு ஆலோசனை வழங்கினோம். எனினும், ஆலோசனை வழங்கியதன் பின்னர் போரில் புலிகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இறுதிக் கட்ட போரின் போது ஒரு சில புலி உறுப்பினர்களேனும் சரணடைய விரும்பியிருக்கலாம், அவர்கள் எவ்வாறு உயிரிழந்தார்கள் என்பது விளங்கவில்லை. தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரம் குறித்த புரிதல் மிகவும் குறைவாகவே காணப்பட்டது.
இதுவே தமிழீழ விடுதலைப் புலிகளின் இறுதிக்கட்ட அழிவிற்கு காரணமாகவும் அமைந்தது. இறுதி நேரத்தில் சர்வதேச சமூகமோ அல்லது புலம்பெயர் தமிழர்களோ தலையீடு செய்து தங்களை காப்பாற்றுவார்கள் என மரபு ரீதியில் போரை முன்னெடுத்து வந்த புலிகள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள் என எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கத் தூதரக அதிகாரிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் என விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment