தொகுதிவாரி மற்றும் விகிதாசார முறைகளை இணைத்து தயாரிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்ட மூலம் ஆளும் தரப்பு, எதிர்த்தரப்பு கட்சிகளின் ஆதரவுடன் நேற்று நிறைவேற்றப்பட்டது. வாக்கெடுப்பு எதுவும் இன்றி திருத்தங்களுடன் தேர்தல் சட்டம் நிறைவேற்றப்பட்டதோடு, இதனூடாக உள்ளூராட்சி தேர்தல்களில் விருப்பு வாக்கு முறை முற்றாக ரத்துச் செய்யப்படுகிறது.
பல வருடங்களாக ஆராயப்பட்டு வந்த உள்ளூர் அதிகார சபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம், உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல் (திருத்தச்) சட்டமூலம் என்பன கடந்த வருடம் ஏப்ரல் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. இது குறித்து ஆராய எதிர்க்கட்சிகள் கால அவகாசம் கோரியதையடுத்து சட்டமூலங்கள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில் நேற்று இரு சட்டங்கள் மீதான குழு நிலை விவாதம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்றது.
சட்ட மூலத்திற்கான திருத்தங்களை மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் ஏ. எல். எம். அதாஉல்லா முன்வைத்தார். இரு திருத்த சட்டங்களிலும் உள்ள ஒவ்வொரு சரத்தாக திருத்தங்களுடன் நிறை வேற்றப்பட்டன. எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் தரப்பு எம்.பிக்கள் தமது தரப்பு திருத்தங்களை முன்வைத்ததோடு அவை குறித்து பரிசீலிக்க ஆளும் தரப்பு இணக்கம் தெரிவித்தது.
சகல கட்சிகளினதும் இணக்கப்பாட்டு டன் தேர்தல் சட்டம் நிறைவேற்றப்பட்டது சிறந்த முன்மாதிரியாகும் என்று குறிப்பிட்ட சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இதே போன்று எதிர்காலத்திலும் முன்மாதிரியாக செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். தேர்தல் முறையை மாற்ற பங்களித்தது தொடர்பில் ஜனாதிபதி அவர்களுக்கு பலரும் நன்றி தெரிவித்தனர்.
புதிய தேர்தல் திருத்தத்தின் பிரகாரம் உள்ளூராட்சி சபைகளுக்கு தொகுதிவாரி முறை மூலம் 70 வீதமானவர்களும் விகிதாசார முறை மூலம் 30 வீதமானவர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர். தேர்தல் தொகுதி எல்லையை நிர்ணயிப்பதற்காக எல்லை நிர்ணயம் செய்ய தேசிய குழு வொன்றும் பிரதான குழுவுக்கு உதவியாக மாவட்ட நிர்ணய குழுக்களும் அமைக்கப்படும். பெண்கள் மற்றும் இளைஞர்களுக்காக 25 வீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படவுள்ளதோடு கட்சி வேட்பாளர் 5 ஆயிரம் ரூபாவும் சுயேச்சைக்குழு வேட்பாளர் 20 ஆயிரம் ரூபாவும் கட்டுப்பணம் செலுத்த வேண்டும்.
வேட்பு மனுதாக்கல் செய்யும் காலம் 15 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளதோடு வாக்களிப்பு நிலையங்களிலேயே வாக்குகள் எண்ணப்படும். குறித்த தேர்தல் தொகுதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வாக்குகளில் 20 இல் ஒரு பங்கிற்கு குறைவான வாக்குகள் பெறும் வேட்பாளர்களின் கட்டுப்பணம் அரசுடைமையாக்கப்படும்.
50 வீதம் வாக்குகள் பெறும் கட்சியின் செயலாளர் அல்லது தலைவர், உள்ளூராட்சி சபை தலைவர், உப தலைவரை தெரிவு செய்வார். இரு தடவைகள் வரவு செலவுத் திட்டம் தோல்வி அடைந்தால் தலைவர் பதவி விலக வேண்டும் உட்பட பல விடயங்கள் இந்த தேர்தல் திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
குழுநிலை விவாதத்தில் கருத்துத் தெரிவித்த சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்புடன் தேர்தல் சட்டம் நிறைவேற்றப்பட்டது குறித்து மகிழ்ச்சி அடைகிறோம். இது ஆரம்பம் மட்டுமே, சிறந்த தேர்தல் முறையொன்றை கொண்டுவர சகல தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும். நாட்டு நலனுக்காகவே அரசாங்கம் இந்த திருத்தத்தை மேற்கொண்டது. ஜனாதிபதி அவர்களே இதனை துரிதமாக நிறைவேற்றுவதில் உறுதியாக இருந்தார். ஐ. தே. க. ஒத்துழைத்திருந்தால் பாராளுமன்ற தேர்தல் முறையையும் மாற்றியிருக்கலாம்.
அமைச்சர் ஹக்கீம் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறியதாவது:-
புதிய தேர்தல் முறையை கொண்டுவர பங்களித்த ஜனாதிபதி, அமைச்சர் தினேஷ் குணவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் அடங்கலான சகலருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். இது சிறுபான்மையினருக்கு நன்மையான முறையாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. கட்சிகளின் திருத்தங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும்.
அமைச்சர் விமல்
அமைச்சர் விமல் வீரவங்ச கூறியதாவது:- விருப்பு வாக்கு முறையினால் மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த மாற்றம் மூலம் ஜனநாயகம் பலமடையும். இதற்கு காரணமான ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
விஜித ஹேரத் எம். பி.
விஜித ஹேரத் எம். பி. கூறியதாவது:- இதில் குறைபாடு உள்ளது. மக்களின் அபிலாஷைகள் நிறைவேறும் வகையில் இது அமைய வேண்டும்.
சஜித் பிரேமதாஸ சஜித் பிரேமதாஸ எம். பி. கூறியதாவது:-
பெண்களின் பிரதிநிதித்துவம் 25 வீதமாகவும் ஆண்களின் பிரதிநிதித்துவம் 25 வீதமாகவும் இருக்க வேண்டும். இதற்காக கூடுதல் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
ஏ. எச். எம். அஸ்வர் எம். பி.
ஏ. எச். எம். அஸ்வர் எம். பி. தேர்தல் முறையை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்த ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கிறேன். அமைச்சர் அதாஉல்லா, அமைச்சர் தினேஷ் ஆகியோரும் அதிகம் பங்காற்றினர். இலங்கையில் நீண்ட ஜனநாயக முறை காணப்படுகிறது. கொழும்பு நகரை அலங்கரிக்க நகராதிபதி முஸம்மில் பங்களிக்கிறார். நவீன உள்ளூராட்சி சபைகளின் தந்தையாக அமைச்சர் அதாஉல்லா காணப்படுகிறார்.
No comments:
Post a Comment