Wednesday, October 03, 2012

இனப்பிரச்சினைக்கு காலதாமதமின்றி அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் :பீரிஸிடம் பான் கீ மூன் வலியுறுத்தல்

G.-L.-Peiriஉள்நாட்டில் யுத்தம் ஏற்பட காரணியாக அமைந்த இனப்பிரச்சினைக்கு இலங்கை அரசாங்கம் அவசரமாக அரசியல் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அப்போதுதான் இலங்கையின் ஏனைய அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வை எட்ட முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் 67 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் குழுவினரை நேற்று முன்தினம் மாலையில் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் சந்தித்தார். இச் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.

இதன் போது இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் முன்னெடுக்கப்படுகின்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், பான் கீ மூனுக்கு தெளிவுபடுத்தியுள்ளார். குறிப்பாக நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாக நல்லிணக்கத்தை ஏற்படுத்த இலங்கை அரசு தேசிய செயற்றிட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றது. இதனை ஏனைய சர்வதேச நாடுகளும் அங்கீகரித்து பாராட்டியுள்ளன. யுத்தத்தின் பின்னர் நிரந்தரமான தீர்வை ஏற்படுத்தும் நோக்கில் இலங்கை அரசு ஆக்கபூர்வமாக செயற்படுகின்றது என்று வெளிவிவகார அமைச்சர் பான் கீ மூனிடம் எடுத்துக் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் இலங்கையில் நீண்ட நாள் உள்நாட்டு யுத்தம் ஏற்பட காரணிகளுக்கு அரசியல் தீர்வொன்றை ஏற்படுத்த வேண்டியது அவசியமாக உள்ளது. இதனை இலங்கை அரசு கருத்தில் கொள்ள வேண்டும். நிரந்தரமான அரசியல் ரீதியிலான தீர்வொன்றை ஏற்படுத்துவதுடன் பிரச்சினைகளுக்கு காலதாமதமின்றி தீர்வுகளை முன் வைக்க வேண்டும் என்று பான் கீ மூன் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment