Thursday, October 04, 2012

ஈழத்தமிழர் உரிமைக்காக தலையிடவேண்டும் ஜ.நா;வலியுறுத்துமாறு இந்திய அரசிடம் கோருகிறது தி.மு.க.

Karunanidhi_0ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க ஐ.நா. சபையின் தலையீட்டைக் கோரும் தீர்மானத்தை இந்திய அரசு முன் மொழிவதன் மூலம் இலங்கையில் தற்போதுள்ள நிலைமைக்கு விரைந்து முற்றுப்புள்ளி வைக்க முடியும். அதன்மூலம் ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடவும், அவர்கள் தங்களுடைய உரிமைகளை விவாதித்து தாங்களே தீர்மானித்துக் கொள்ளவும் இயலும். எனவே, இந்தியப் பேரரசு இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு நேற்று நடைபெற்ற டெசோ மாநாட்டுக் கூட்டத்தில் தி.மு.க. தீர்மானம் நிறை வேற்றியுள்ளது.இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு நேற்றுமுன்தினம் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்த நிலையில் நேற்று இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தி.மு.க. பொருளாளர் ஸ்டாலினும், டி.ஆர்.பாலுவும் ஐ.நாவுக்குச் சென்று கையளிப்பது எனவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நேற்று டெசோ அமைப்பு கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து தி.மு.க. அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:
டெசோ அமைப்பின் சார்பில் நடைபெற்ற ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இணைத்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதிய கடிதத்துக்கு பதில் கடிதம் கிடைத்துள்ளது. அதில் இலங்கைத் தமிழர்களின் நலனுக்கும், நல்வாழ்வுக்கும் தேவையான பணிகளில் இந்திய அர_ அக்கறை காட்டி வருகிறது என்றும், ஈழத் தமிழர்களின் மறுகுடியமர்வு மற்றும் மறுவாழ்வுக்கு இந்திய அரசு மிகுந்த முன்னுரிமை வழங்கிச் செயல்படுகிறது என்றும், பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருக்கிறார்.
பிரதமரின் இக்கடிதம் தமிழக மக்களுக்கு ஓரளவு ஆறுதல் அளிப்பதாக உள்ளது. பிரதமரின் இக்கடிதத்துக்கு டெசோ அமைப்பு நன்றி தெரிவித்துக் கொள்கிறது. அதே நேரத்தில் ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாத்திட ஐ.நா. சபையின் தலையீட்டைக் கோரும் தீர்மானத்தை இந்திய அரசு முன்மொழிவதன் மூலம் இலங்கையில் தற்போதுள்ள நிலைமைக்கு விரைந்து முற்றுப்புள்ளி வைத்து, ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடவும், தங்களுடைய உரிமைகளை விவாதித்து தாங்களே தீர்மானித்துக் கொள்ளவும் இயலும் என இக்கூட்டம் முழுமையாக நம்புகிறது. எனவே, இந்தியப் பேரரசு இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும், டெசோ உறுப்பினர்களுடன் விவாதித்து, உருவாக்கிய ஈழத்தமிழர்கள் அரசியல் உரிமைகளையும், வாழ்வுரிமைகளையும் உள்ளடக்கிய கருணாநிதியின் கோரிக்கை மனுக்களை நியூயோர்க்கில் ஐ.நா. பொதுச்செயலாளரிடமும்  ஜெனிவாவிலுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையத்திடமும் வழங்கத் திட்டமிடப்பட்டது.
இக்கோரிக்கை மனுக்களை கருணாநிதி சார்பிலும், டெசோ அமைப்பன் சார்பிலும், கழகப் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின்  தி.மு.க. நாடாளுமன்றக்குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோரை ஐ.நா. சபைக்கும், ஐ.நா. மனித உரிமை ஆணையத்திற்கும் அனுப்ப வைத்து நேரில் வழங்கிடும் முடிவை இன்றைய டெசோ கூட்டம் ஏற்றுக் கொள்கிறது  என்று அதில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment