Friday, November 23, 2012

40 ஆயிரம் சிறுவர்கள் விபசாரத்தில்: யுனிசெப்

8-ALARMINGவிபசாரத்தில் ஈடுபடும் 40000 சிறுவர்கள் இலங்கையில் இருப்பதாக பிரதான எதிர்க்  கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் றோஸி சேனாநாயக்க நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
யுனிசெப், புலம்பெயர்வோருக்கான சர்வதேச நிறுவனம் என்பவை தயாரித்த அறிக்கைகளிலேயே இந்த தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாக அவர் சுட்டிகாட்டினார்.

சிறுவர் மற்றும் பெண்கள் விவகார அமைச்சு மீதான குழுநிலை விவகாரத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், எழுத்தறிவு, எதிர்பார்க்கப்படும் வாழ்க்கைக் காலம் என்பவை தொடர்பான உயர் சுட்டிகள் இருப்பதாக இலங்கை பெருமைப்பட்டாலும் சிறுவர்கள் மற்றும் பெண்களின் நிலைமை விசனத்துக்குரியதாகும்.
இவ்வருடத்தில் முதல் ஒன்பது மாதத்தில் சிறுவர்களுக்கு எதிராக 4414 குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளது. பராயம் குறைந்த கர்ப்பங்கள் அதிகரித்து வருகின்றன. இவைபற்றி நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
இதேவேளை இந்த விவாதத்தில் ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் தலத்த அத்துகோறள உரையாற்றுகையில், கொடகவலையில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தடுப்புக்காவலில் உள்ளார். ஆயினும் இவர் அரசியல் செல்வாக்கு காரணமாக வசதிகளை அனுபவித்து வருகின்றார். பிரதேசசபை இவருக்கு தொடர்ந்து விடுமுறை வழங்கி வருகிறது. இரத்தினபுரி, கஹவத்தை பகுதிகளில் தொடர்கொலைகள் இடம்பெற்றுள்ளன.
பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் பிணை எடுக்க முடியாத குற்றங்களாக ஆக்கப்பட வேண்டும் என்றார்

No comments:

Post a Comment