Thursday, November 29, 2012

பிரதம நீதியரசருக்கு மரியாதை செலுத்த வேண்டாமென அரசு தெரிவித்தது: சுமந்திரன்

Sumanthiran(1)தெரிவுக்குழுவின் முன் தோன்றுவதற்காக பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கா நாடாளுமன்றத்துக்கு வரும் போது அவருக்கு மரியாதை செலுத்த வேண்டாம் என அரசாங்கத்தினால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறினார்.
இந்த கட்டளை மேலிடத்திலிருந்து வந்ததாக சுமந்திரன் கூறினார். இதன்போது உற்பத்தித்திறன் மேம்பாட்டு அமைச்சர் லக்ஷ்மன் செனவிரத்ன, சுமந்திரன் கூறியதை மறுக்க முயன்றார்.
பிரதம நீதியரசருக்கு பொலிஸ் அதிகாரிகள் மரியாதை செலுத்தவில்லை என்பது நிதர்சனமான உண்மை என சுமந்திரன் எம்.பி கூறினார்.  ‘இது உண்மை என்பது எனக்கு நிச்சயமாக தெரியும். பிரதி பொலிஸ் மா அதிபர் அநுர
சேனாநாயக்கா இந்த கட்டளையை பிறப்பித்திருந்தார்’ என அவர் கூறினார்.
நாடாளுமன்றம் வரும்போது பிரதம நீதியரசர், சட்டத்தரணிகளுடன் வருவது சட்டப்படி முறையாகுமா என அவைக்கு தலைமை தாங்கிக்கொண்டிருந்த ஏ.எச்.எம்.அஸ்வர் எம்.பி. கேட்டார்.
‘ஒரு சிரேஷ்ட சட்டத்தரணி என்றவகையில், உங்களிலிருந்து விளக்கம் பெற விரும்புகின்றேன்’ என அஸ்வர் எம்.பி கூறினார்.
‘இது ஒரு சங்கடமான நிலைமை. இது நாடாளுமன்றத்தில் முன்னொருபோதும் நடந்ததில்லை. உங்களுக்கு சட்ட ஆலோசனை தேவையானால் தயவுசெய்து கட்டணம் செலுத்தி ஒரு சட்டத்தரணியிடம் ஆலோசனை பெறுங்கள். என்னிடமிருந்து இலவச சட்ட ஆலோசனை பெற முயலவேண்டாம்’ என சுமந்திரன் எம்.பி கூறினார்.
‘இங்கு சங்கடம் எதுவுமில்லை. நான் தெளிவுபடுத்தவே இதைக் கேட்டேன். நான், விமர்சிக்கவில்லை. நான் கட்டணம் செலுத்த விரும்பவில்லை’ என்றார் அஸ்வர் எம்.பி.
அஸ்வர் எம்.பி.யுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின்னர், தனது பேச்சைத் தொடர்ந்த சுமந்திரன் எம்.பி, ‘நீதித்துறையில் மக்கள் நம்பிக்கையை சிதைக்கும் பாதையில் அரசாங்கம் போகின்றது. அரசாங்கம் நினைத்தபடி நீதித்துறை செயற்படாததால் இவ்வாறான நடவடிக்கைகளில் இந்த அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது’ என அவர் கூறினார்.

No comments:

Post a Comment