Sunday, November 25, 2012

தமிழர்கள் விரும்பாத திவிநெகுமவின் திணிப்புக்கு துணையாகப் போகின்றீர்களா?; சுமந்திரன் எம்.பி. கேள்வி

sumanthiran“வடமாகாணத்தில் வாழும் தமிழ் மக்கள் விரும்பாத “திவிநெகும’ சட்டத்தை அந்த மக்கள் மீது பலவந்தமாக திணிக்க சிறுபான்மை இன அமைச்சர்கள் துணைபோகப் போகின்றீர்களா?” இவ்வாறு நேற்று நாடாளுமன்றத்தில் கேட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்
பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதத்தில் அவர் உரையாற்றினார்.
அவர் தெரிவித்ததாவது:
“திவிநெகும’ சட்ட வரைவை சட்டமாக்க நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளை அரசு பெறவேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்தச் சட்டவரைவுக்கு வடக்கு மாகாண மக்கள் ஒப்புதல் அளிக்கவில்லை.
தமிழ் மக்கள் விரும்பாத “திவிநெகும’ சட்டத்தைப் பலவந்தமாகத் திணிப்பதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமானும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும், அரசுக்கு ஆதரவளித்துக் கொண்டிருக்கும் ஏனைய தமிழ்க் கட்சிகளின் தலைவர்களும் ஏன் துணைபோகிறீர்கள்?
நாட்டில் வறுமையை ஒழிக்கவும், வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களின் சமூக மேம்பாட்டை கருத்தில்கொண்டும் முன்னாள் ஜனாதிபதி “ஜனசவிய’ திட்டத்தை ஆரம்பித்தார்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் அதனை “சமுர்த்தி’ எனப் பெயர் மாற்றம் செய்தனர். இப்பொழுது சிறிது விரிவுபடுத்தி “திவிநெகும’ என்று மாற்றியமைத்து அது ஜனாதிபதியின் சகோதரரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வரவுசெலவுத் திட்டத்தில் அரசமைப்புக்கு ஒவ்வாத வகையில் நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்து பொறுப்புக்கூற முடியாத ஒரு நபரிடம் வரவுசெலவுத் திட்டத்தின் செலவினத்தில் மூன்றில் இரண்டு பங்கு வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு நகர அபிவிருத்தி அமைச்சு, நெடுஞ்சாலைகள், கப்பல் துறைமுகங்கள் அமைச்சு என மூன்று அமைச்சுகள் இந்தச் சபையில் இல்லாதவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இது அரசமைப்பின் 148ஆவது உறுப்புரிமைக்கு மாறானதாகும்.
சட்டவாக்கமும் நிறைவேற்று அதிகாரமும் சுயாதீனத் தன்மையுடன் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளாமல் இயங்க வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருக்கும்போது செய்த ஒரு முட்டாள் தனமான செயல்தான் முன்னாள் பிரதம நீதியரசர் நெவில் சமரகோனுக்கு எதிராகக் கொண்டு வந்த குற்றப் பிரேரணை. அரசமைப்பில் அதற்கு இடமில்லாத போதும் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளில் திருத்தம் ஒன்றைச் செய்தது.
அன்று எதிர்க்கட்சியில் இருந்த காலஞ்சென்ற உறுப்பினர்களான சரத் முத்தெட்டு வேகம, அனுராபண்டார நாயக்க போன்ற சிரேஷ்ட உறுப்பினர்கள் இதனை வன்மையாகக் கண்டித்தனர் என்பதை இந்தச் சபையில் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.
இப்பொழுது பிரதம நீதியரசருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றப் பிரேரணைகள் தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக் குழு தனது விசாரணைகளைத் தற்காலிகமாகப் பின்போடும்படி உயர்நீதிமன்றம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது உயர்நீதிமன்றம் உத்தரவிடவோ, கட்டளை பிறப்பிக்கவோ இல்லை. தாழ்மையான ஒரு வேண்டுகோளைத்தான் விடுத்துள்ளது என்றார்.

No comments:

Post a Comment