Saturday, November 17, 2012

ஈழத் தமிழர் வாழ்வில் நம்பிக்கை தென்பட காரணமான உலகத் தமிழர் மாநாடு: நாம் தமிழர் கட்சி சார்பில் கா.அய்யநாதன்

imageலண்டனில், ஜனநாயகத்தின் தொட்டில் என்றழைக்கப்படும் அந்நாட்டு நாடாளுமன்ற வளாகத்தில் கடந்த 7, 8 ஆம் திகதிகளில் நடந்த உலகத் தமிழர் மாநாட்டில் நாம் தமிழர் கட்சி சார்பில் பங்கேற்றுவிட்டு திரும்பியுள்ள கா.அய்யநாதன், இம்மாநாடு, ஈழத் தமிழர் வரலாற்றில் ஒரு அழுத்தமான முக்கியத்துவத்தை பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

உலகத் தமிழர் மாநாட்டில் கலந்துகொண்டமை குறித்து தனது கருத்துக்களை இவ்வாறு பதிவு செய்துள்ளார்.

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உள்ள 81 உறுப்பினர்களைக் கொண்ட தமிழருக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் (All Party Parliamentarian Group for Tamils – APPGT), பிரிட்டன் தமிழர் பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த மாநாட்டின் நோக்கம், ஈழத்தில் நடந்த உள்நாட்டுப் போரில் அந்நாட்டு அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்ட தமிழின அழித்தல், போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியன பற்றி சுதந்திரமான பன்னாட்டு விசாரணைக்கு ஐ.நா. உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஒரே ஒரு தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
ஈழத்தில் நடந்த போர் தொடர்பாக தமிழினத்தின் கோரிக்கை என்ன என்பதை ஒரு தீர்மானமாக வடித்து, அதனை தமிழினம் சார்ந்த கட்சிகள், அமைப்புகள் ஆகியவற்றின் ஒப்புதலோடு நிறைவேற்றித் தாருங்கள் என்று தமிழருக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே, தமிழ்நாடு, இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் உள்ள அனைத்து தமிழர் கட்சிகளுக்கும், இயக்கங்களுக்கும், அமைப்புகளுக்கும் பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுத்து இம்மாநாட்டை நடத்தியது.
மாநாட்டிற்கு முதல்நாள் 6 ஆம் திகதியே இம்மாநாட்டிற்கு அழைக்கப்பட்ட பேராளர்களின் கலந்தாய்வு நடைபெற்றது. அந்த கலந்தாய்விலேயே தீர்மானத்தின் பொருளடக்கம் விவாதிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டது.
அதுவே மறுநாள், 7ஆம் திகதி, பிரிட்டன் நாடாளுமன்றத்திற்குள் உள்ள ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் டெர்ரஸ் எனும் மண்டபத்தில் படிக்கப்பட்டு அனைவராலும் ஏற்கப்பட்ட அந்தத் தீர்மானம், இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கு அளிக்கப்பட்டது.
சுதந்திரமான பன்னாட்டு விசாரணைக்கான அவசியத்தை வலியுறுத்தி தமிழருக்கான நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் குழுவின் தலைவர் லீ ஸ்காட், செயலர் ஹூன்ஸ் உள்ளிட்ட பலரும் பேசினர். அவர்களைத் தொடர்ந்து இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களான து. இராசா, தொல் திருமாவளவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தா. பாண்டியன், தி.மு.க.வின் சார்பாக மு.க.ஸ்டாலின், பா.ம.க.வின் கோ.க.மணி, புதிய தமிழகம் கட்சித் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி, நாம் தமிழர் கட்சியின் சார்பாக நானும் பேசினேன்.
இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் போர் விதி முறை மீறல்கள், அதாவது போர்க் குற்றங்கள் நடைபெற்றுள்ளன என்று கூறும்போதே, அந்த போர் நியாயமானதாகி விடுகிறது. ஆனால் தமிழினத்தை அழித்தொழிக்கும் உள்நோக்கத்தோடு நடத்தப்பட்ட அந்தப் போரே குற்றம்தான் என்று நான் பேசினேன்.
அதுமட்டுமின்றி, போஸ்னியாவில் இருந்த ஐ.நா.வின் முகாமில் இருந்த 7,000 முஸ்லிம்களை செர்பிய இராணுவம் படுகொலை செய்ததை இனப் படுகொலை என்று கூறி, அதற்குக் காரணமான தளபதி ராட்கோ மிலாடிச்சை இனப் படுகொலைக் குற்றம் சுமத்தி விசாரணை நடத்தும் சர்வதேசம், இலங்கையில் நடந்த போரின் இறுதி நாட்களில் மட்டும் 40,000 பேர் கொல்லப்பட்டனர் என்பதை ஒப்புக்கொண்டுள்ள நிலையிலும் அதனை இனப் படுகொலை பிரகடனத்தின் மீது விசாரணை நடந்த மறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினேன்.
இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான் என்பதற்கு அங்கு வாழந்துக் கொண்டிருக்கும் 90,000 தமிழ் விதவைகளே சான்று என்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் எடுத்து வைத்த வாதத்தை இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பாராட்டினர், ஏற்றுக்கொண்டனர்.
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவஞானம் சிறீதரன், யோகேஸ்வரன், மாவை சேனாதிராசா உள்ளிட்டவர்களும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் இம்மாநாட்டில் கலந்துகொண்டு பன்னாட்டு விசாரணைக்கான அடிப்படைகளையும், அவசியத்தை எடுக்காட்டி பேசினர்.
உலக தமிழர் பேரவை, நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், உலகத் தமிழர் மாநாடு, மனித உரிமைக்கான தமிழர் மையம், திராவிடர் விடுதலைக் கழகம், மே 17 சேவ் தமிழ் இயக்கம், காந்திய மக்கள் இயக்கம், இந்து மக்கள் கட்சி ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இம்மாநாட்டில் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் மாநாடு நடந்த இரண்டு நாட்களிலும் மாலை வேளையில் இரவு விருந்துடன் கூடிய தமிழ் மக்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அதிலும் பேராளர்கள் அனைவரும் கலந்துகொண்டு விரிவாகப் பேசினர். 8 ஆம் தேதி நடந்த மக்கள் சந்திப்பில் இங்கிலாந்தில் வாழும் ஈழத் தமிழ் மக்கள் தொடுத்த வினாக்களுக்கு அனைத்து பிரதிநிதிகளும் பதிலளித்தனர்.
இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட சுதந்திரமான பன்னாட்டு விசாரணைக்கான தீர்மானத்திற்கு, உலக நாடுகளின் ஆதரவைத் திரட்டுவது என்று ஏகமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் இருப்பது போன்று, இந்தியாவிலும் தமிழருக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை ஏற்படுத்தி, அதன் மூலம் சுதந்திரமான பன்னாட்டு விசாரணைக்கு ஆதரவு சேர்க்கும் பணியை மேற்கொள்ளவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
உலக தமிழர்களின் இத்தகைய தொடர் முயற்சிகள் மற்றும் போராட்டங்களுக்கான பலனாக இலங்கை இறுதிப்போரில் தனது பொறுப்பை நிறைவேற்ற தவறியதை ஐ.நா.வே தற்போது ஒப்புக்கொண்டு, உலக நாடுகளின் பார்வையும் இலங்கையை நோக்கி மீண்டும் திரும்பி உள்ள நிலையில். ஈழத்தமிழர்களின் வாழ்வில் ஒரு விடியல் தோன்றுவதற்கான ஒரு சிறிய நம்பிக்கை கீற்று தென்படுகிறது.

No comments:

Post a Comment