இறுதிப்போரில்
தமிழர்களைக் காப்பாற்றாமல் தாம் தவறிழைத்து விட்டதாக ஐ.நா. செயலாளர்
நாயகம் பான் கீ மூன் ஒப்புக்கொண்டிருக்கும் நிலையில், அவருக்கு எதிராக
சர்வதேச நீதிமன்றில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக
தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தின் மூத்த உணர்வாளரும், ம.தி.மு.க. பொதுச்செயலாளருமான வைகோ இதற்கான நடவடிக்கைகளில் இறங்கவுள்ளார் எனத் தெரியவருகின்றது.
இலங்கையின் இறுதி யுத்தத்தில் ஐ.நாவின்
செயற்பாடுகள் குறித்த உள்ளக விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கு
அமைய, ஈழத் தமிழர் படுகொலையைத் தடுக்க ஐ.நா தவறிவிட்டதாக பான் கீ மூன்
தெரிவித்திருந்தார். இதையடுத்தே வைகோ மேற்படி நடவடிக்கையில் ஈடுபடவுள்ளார்.
ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு
எதிரான தமது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ
நேற்றிரவு இலங்கையில் உள்ள தமிழ் ஊடகவியலாளர்களிடம் தொடர்பு கொண்டு
கருத்துத் தெரிவித்தார்.
இதன்போது அவர் தெரிவித்தவை வருமாறு:
இலங்கையின் இறுதி யுத்தத்தில் ஈழத்
தமிழர்களைப் படுகொலை புரிந்த சிங்கள அரசுக்கு ஆதரவளித்த, ஐ.நா. செயலாளர்
நாயகம் பான் கீ – மூன் உள்ளிட்ட ஐ.நா. அதிகாரிகள் மற்றும் இந்தியக்
காங்கிரஸ் கட்சியினர் ஆகிய அனைவரும் குற்றவாளிகள்தான்.
திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த
இனப்படுகொலையைத் தடுக்கத் தவறிய இவர்களை நான், என் வாழ்நாளில் ஒருபோதும்
மன்னிக்கமாட்டேன். சிங்களப் பேரினவாத அரசு நடத்திய இனப்படுகொலையை மறைக்க
ஐ.நா. செயற்பட்ட விதம் அதன் உள்ளக ஆய்வறிக்கையினூடாக அம்பலமாகியுள்ளது.
எனவே, இனிமேலும் இது விடயத்தில் நாம்
பொறுமைகொள்ளாது அடுத்த நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளவேண்டும். அதற்கு
உலகவாழ் தமிழ் மக்கள் அனைவரும் தமது ஆதரவையும் அழுத்தத்தையும் வழங்க
வேண்டும்.
ஈழத் தமிழர் படுகொலைக் குற்றவாளிகளான
ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ – மூன் உள்ளிட்ட ஐ.நா அதிகாரிகளை சர்வதேசக்
குற்றவாளிக் கூண்டில் நிறுத்தவேண்டும். ஐ.நா. வரலாற்றில் இவ்வாறானதொரு தவறு
ஒருபோதும் நடந்ததில்லை. தாம் விட்ட தவறை பான் கீ – மூனே
ஒப்புக்கொண்டுள்ளார். எனவே, அவருக்கு எதிராக எமது அதிருப்தியைத் தெரிவித்து
கடிதம் அனுப்புவதில் எவ்வித பயனும் இல்லை. அவர் தமது கடமைகளை நியாயமான
முறையில் நிறைவேற்றத் தவறிவிட்டார். இதற்கு அவர் பொறுப்புக்கூறியே
ஆகவேண்டும்.
அத்துடன், ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ –
மூனின் அந்தரங்க ஆலோசகராகப் பணியாற்றிய விஜய் நம்பியார் தொடர்பான எந்தத்
தகலும் ஐ.நாவின் உள்ளக விசாரணை அறிக்கையில் வெளியிடப்படவில்லை.
விஜய் நம்பியாரின் சகோதரர் சதீஸ்
நம்பியார், இந்திய இராணுவ ஆலோசகராவார். அதனால்தான் விஜய் நம்பியார் குறித்த
எந்தத் தகவலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பிடவில்லை என தெரிவித்தார்
வைகோ.
No comments:
Post a Comment