Monday, November 19, 2012

ஐ.நாவின் தோல்வியே மக்களை கொல்வதற்கு சிறிலங்காவை ஊக்குவித்தது! – த ஹிந்து குற்றச்சாட்டு!!

imageஇலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போதான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகள் குறித்து ஐ.நாவின் மூத்த அதிகாரி சார்ள்ஸ் பெற்றி குழு வெளியிட்டுள்ள உள்ளக அறிக்கை குழப்பகரமான கேள்விகளுக்கு வழிசமைப்பதாக சென்னையில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளேடான ‘த ஹிந்து’ அதன் நேற்றைய (17.11.2012) ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் ஆபத்தான கட்டங்களில் ஐ.நா பின்பற்றிய சமயோசித நடவடிக்கைகள் மற்றும் அதன் செயற்பாடுகள் ஆகியவை குறித்தே இந்த கேள்விகள் எழுவதாக இவ்வூடகம் சுட்டிக்காட்டியுள்ளது. ‘அவசியமான வைத்தியம்’ என்ற தலைப்பில் வெளியான இந்த ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
‘இப்போரின் போது பெருமளவான பொதுமக்களின் உயிரிழப்புக்களைத் தடுத்து நிறுத்துவதற்கு உலக அமைப்பான ஐ.நா தவறிவிட்டது என்பதையே சார்ள்ஸ் பெற்றியின் உள்ளக அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. இது ஐ.நாவின் பிறிதொரு தோல்வியை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.
இப்போரின் போது சிறிலங்கா அரசாங்கம் வெல்ல முடியாத தந்திரோபாயத்தைக் கடைப்பிடித்துள்ளது. அது தனது இராணுவ நோக்கங்களைச் சூழ தந்திரோபாயமான வேலிகளையும் இட்டிருந்தது. இந்த நோக்கில் செயற்பட்ட சிறிலங்கா அரசாங்கத்தின் வைராக்கியத்துக்கு ஐ.நாவின் தோல்வி உத்தரவாதமளித்துள்ளது.
இப்போரின் போது முன்னேறிக் கொண்டிருந்த சிறிலங்கா படைத்தரப்புக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே சிக்குண்ட மக்கள் மீது சமபலமில்லாத அழுத்தத்தைப் பிரயோகிப்பதற்கு ஐ.நாவின் தோல்வியே சிறிலங்கா அரசாங்கத்தை ஊக்குவித்துள்ளது. பயங்கரவாதத்தைப் பூண்டோடு அழிப்பதற்கான அவசிய நடவடிக்கை என்ற போர்வையில் இந்த அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி சிறிலங்கா அரசாங்கம் இதய சுத்தியுடன் எதனையும் நாடவில்லை. சர்வதேச மதிநுட்பமான சோதனையைத் தவிர்ப்பதற்கும், ஐ.நாவை வெட்கம் கெட்ட நிலையில் வேட்டையாடுவதற்கும் சிறிலங்கா அரசாங்கம் செயல்பட்ட விதத்தை முன்னுக்குப் பின் முரண்பாடில்லாத சாட்சியம் துல்லியமாக எடுத்துக் காட்டுகின்றது.
போர் மண்டலத்துக்கு வெளியிலேயே உதவி நிறுவனங்கள் செயல்பட்டுள்ளன. ஆதலால் சந்தேகத்துக்கு இடமில்லாத இழப்புகளை நேரடியாகப் பார்வையிட வேறு எவரும் இருக்க வில்லை. ஐ.நாவின் உள்ளக அறிக்கை அதன் பலவீனமான முறைமையையே துலாம்பரமாக எடுத்துக்காட்டுகிறது.
மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவே ஐ.நாவிற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. எனினும், அவற்றைப் பாதுகாப்பதற்கு நிமிர்த்து நிற்பதற்கான முதுகெலும்பு ஐ.நா.விடம்  கிடையாது.
போரின் போது வன்னியில் சிக்குண்ட மக்களை சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டே வெகு அற்பமாக கணிப்பீடு செய்துள்ளது. இதன்போது பாதுகாப்பு வலயங்கள், மருத்துவமனைகள் ஆகியவை இலக்கு வைக்கப்பட்டுள்ள போதிலும், போலியான மறுப்புகளை சிறிலங்கா அரசாங்கம் கட்டவிழ்த்து விட்டுள்ளது.
ஐ.நா அதிகாரிகள், தடுத்து வைக்கப்பட்ட அதன் பணியாளர்கள் ஆகியோருக்கு எதிராக அச்சுறுத்தல், பழிபோடுதல் ஆகிய கைங்கரியங்களை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வந்துள்ளது.
சிக்குண்ட மக்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச்சென்ற வாகன அணிகள் மீது ஷெல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. படுமோசமான போர் சூழ்நிலைச் சம்பவங்கள் தொடர்பாக பொருத்தமான பதில்கள் அளிப்பதிலும் இந்த அறிக்கை ஒரு நிதானப் போக்கைக் கடைப்பிடிக்க வேண்டும்.
2008ஆம் ஆண்டு பிற்பகுதிக்கும் 2009ஆம் ஆண்டு மே  மாதத்துக்கும் இடைப்பட்ட கடினமான மாதங்களை எவர் ஒருவராலும் அவ்வளவு சுலபமாக மறந்துவிட இயலாது. செப்டெம்பர் 11ஆம் திகதி (அமெரிக்க மீதான தீவிரவாதிகளின் தாக்குதல்) சம்பவத்துக்குப் பின்னர் சர்வதேச சமூகம் இருதலைக் கொள்ளி நிலைப்பாட்டுக்கு முகம்கொடுக்க நேரிட்டது. இந்த இருதலைக் கொள்ளி அச்ச நிலைப்பாடு எவ்வளவு காலம் நீடிக்கும்?
பயங்கரவாதத்துக்கு எதிராக எப்போது ஐனநாயகம் போராடும்? என்ற எதிர்பார்ப்புகள் எழுந்தன. இந்த உலகளாவிய அச்சத்தை ஐ.நா நீக்கிவிடுமா என்ற எதிர்பார்ப்பும்  நிலவியது.
பயங்கரவாதத்தை வேரோடு களைவதற்கான நோக்கங்களுக்கு அநேக மனிதாபிமான அம்சங்கள் உறுதுணையாகவுள்ளன. இந்நிலையில் ஐ.நா பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் குறைந்தபட்சம் இரு நிரந்தர உறுப்பு நாடுகளுகளான சீனாவும், ரஷ்யாவும் மற்றும் இவ்விரு நாடுகளுடன் இணைந்து இந்தியாவும் சிறிலங்கா முகாமின் பளுவுக்கு வலுச்சேர்ந்துள்ளன. அத்துடன் ஐ.நா செயளர் நாயகம் பான் கீ மூனுக்கு எதிராக வழக்கத்துக்கு மாறான இராஜதந்திரப் பணிகளை குவித்துள்ளன.
இந்நிலைப்பாட்டில் ஐ.நா அதன் தவறுகளில் இருந்து பாடம் படிக்கும் நடவடிக்கைகளைப் பலப்படுத்தும் என பான் கீ மூன் வாக்குறுதி அளித்துள்ளார். கடந்த காலத்தில் தீய செயல்களுக்கு அளிக்கப்பட்ட சுதந்திரம் மறக்கப்பட்டாலும், இந்த உலக அமைப்பால் நீதி, பொறுப்புக்கூறல் ஆகியவை தொடர்பாக ஒரு நல்லப்பிராயத்தை ஏற்படுத்தி விட முடியாது.
பொஸ்னியா, ருவாண்டா ஆகிய நாடுகளில் இடம்பெற்ற இனப்படுகொலைகளைத் தடுப்பதில் தோல்விகளையே ஐ.நா தழுவியுள்ளது. சிரியாவிலும் இதே  நிலைப்பாடுதான். ஐ.நா அதனை ஆட்டிப்படைக்கும் சக்திகளின் இராஜதந்திர வலையிலிருந்து தன்னை சுதாகரித்துக் கொள்ள வேண்டும். இதற்கான வழியை அது பார்க்க வேண்டும். இலங்கை மீதான ஐ.நாவின் தற்போதைய உள்ளக அறிக்கை கடந்த காலத்திலிருந்து தான் விடுபட்டுள்ளது என்பதை எடுத்துக் காட்டுகிறது’ என்று  ‘த ஹிந்து’ அதன் நேற்றைய (17.11.2012) ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment