ஐ.நா
மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கான ஆதரவு அணியை பலப்படுத்தும்
நோக்கில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, கசகிஸ்தானுக்கு பயணம்
மேற்கொள்ளவுள்ளார். இரண்டு நாள் பயணமாக இன்று சிறப்பு விமானத்தில் அவர் கசகிஸ்தான் தலைநகர் அஸ்ரானா செல்கிறார்.
இந்தப் பயணத்தின் போது சுற்றுலா உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இருதரப்பு ஒத்துழைப்பு உடன்பாடு கையெழுத்திடப்படவுள்ளது.
கடந்த திங்களன்று நியுயோர்க்கில் ஐ.நா பொதுச்சபையில் நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பில், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கான உறுப்பு நாடாக கசகிஸ்தான் தெரிவு செய்யப்பட்டது.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் வரும் மார்ச் மாதம் மேற்குநாடுகளால் சிறிலங்காவுக்கு கடும் நெருக்கடி கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அதனை முறியடிக்கும் நகர்வுகளை சிறிலங்கா முன்கூட்டியே ஆரம்பித்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்துக்குப் பின்னர், ஆபிரிக்க நாடுகள், கிழக்கு ஐரோப்பிய நாடுகள், லத்தீன் அமெரிக்க நாடுகளுடன் சிறிலங்கா இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தி வருகிறது.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் மற்றொரு நாடான உகண்டாவின் அதிபர், கடந்தவாரம் கொழும்பு வந்திருந்தபோது, சிறிலங்கா அரசாங்கம் 1.5 மில்லியன் டொலர் நன்கொடையை உகண்டாவுக்கு வழங்க முன்வந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment