ஐ.நா.
உள்ளக அறிக்கைக்கு அரசு வழங்கியுள்ள பதிலினூடாக நாட்டுக்குப் பிரச்சினைகள்
நெருக்கடிகள் ஏற்படக்கூடும் என்று தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சி,
நாடாளுமன்றக் குழுநிலை விவாதத்தின்போது இவ்விடயத்தைச் சுட்டிக்காட்டவும்
தாம் தயாராக உள்ளது என்றும் தெரிவித்தது.இலங்கையின் இறுதிக்கட்டப் போரின்போது ஐக்கிய நாடுகள் சபை செயற்பட்ட விதம் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட சார்ள்ஸ் பெற்றி குழு, ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் சமர்ப்பித்த உள்ளக அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவையும், பக்கச்சார்பான ஊகங்களைக் கொண்டவையாகவும் உள்ளன என அரசு தெரிவித்திருந்தது.
மேலும் இந்த அறிக்கை வெளியிடப்பட்டமை தொடர்பில் ஐ.நாவுக்கு இலங்கை தமது எதிர்ப்பை வெளியிட்டிருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு, ஐ.நா. உள்ளக அறிக்கைக்கு விடுத்துள்ள பதில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஐ.நா. உள்ளக அறிக்கைக்கு அரசு அளித்துள்ள பதில் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் கண்ணோட்டம் என்ன என ஊடகவியலாளரொருவரால் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்தக் கேள்விக்கு ஐ.தே.க. பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க பதிலளிக்கையில், ஐ.நா. உள்ளக அறிக்கை வெளியிடப்பட்ட நேரத்தில் பதிலளிக்காத அரசு, நாம் கூறிய பின்னர் அந்தக் கடமையைச் செய்தது.
எனினும், இது ஐ.நாவின் உள்ளக அறிக்கை. ஆதலால் நாம் பதிலளிக்கத் தேவையில்லை என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக தெரிவித்தார்.
அதன் பின்னர் இப்போது வெளிவிவகார அமைச்சரால் ஐ.நா. உள்ளக அறிக்கைக்குப் பதிலளிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸால் அளிக்கப்பட்டுள்ள இந்தப் பதிலால் நாட்டுக்குப் பிரச்சினைகளும் நெருக்கடிகளும் ஏற்படக்கூடும்.
வெளிவிவகார அமைச்சின் முன்னுக்குப் பின் முரணான கருத்தால் இது விடயம் தொடர்பில் அந்த அமைச்சின் கொள்கையில் வேறுபாடு உள்ளமையை அறியமுடிகின்றது.
எனவே, நாட்டுக்குப் பல நெருக்கடிகளைத் தோற்றுவிக்கக்கூடிய இவ்விடயம் தொடர்பில் வரவு செலவுத்திட்ட வெளிவிவகார அமைச்சு தொடர்பான குழுநிலை விவாதத்தில் சுட்டிக்காட்ட உள்ளோம் என்றார் திஸ்ஸ அத்தநாயக்க.
No comments:
Post a Comment