வவுனியா
– ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு சுடர் ஏற்றுவதற்காக இன்று
மாலை சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா நகரசபை பிரதித்
தலைவரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணித் தலைவருமான எம்.எம். ரதன் ஆயுததாரிகளினால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,
இன்று மாலை நானும், நண்பர் ஒருவரும்
மோட்டார் சைக்கிளில் வவுனியா மாவட்டத்தில் உள்ள ஒரேயொரு மாவீரர் துயிலும்
இல்லமான ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு சுடர் ஏற்றுவதற்காக
மோட்டார் சைக்கிளில் பயணித்தோம்.
இவ்வேளையில் மாவீரர் துயிலும்
இல்லத்திற்கு அருகில் உள்ள ஈச்சங்குளம் பாடசாலைக்கு முன்னால் சிவில்
உடையில் நின்ற ஆயுததாரிகள் இருவர் எம்மை மறித்தார்கள்.
எங்கே போகின்றீர்கள் என்று கொச்சைத்
தமிழில் கேட்டு எம்மை மிரட்டினார்கள். அத்துடன் நாம் துயிலும் இல்லத்தில்
விளக்கேற்றுவதற்காக கொண்டு சென்ற சிட்டிகளையும் ஆயுததாரிகள் பறித்தார்கள்.
உடனே அவ்விடத்திலிருந்து வெளியேறுமாறு எம்மைக் கடும் தொனியில் எச்சரித்தார்கள். நாம் அவ்விடத்திலிருந்து திரும்பி வந்தோம்.
எமது விடுதலைக்காகப் போராடி உயிர்களைத்
தியாகம் செய்த மாவீரர்களை – எமது உறவுகளை நினைவுகூர இலங்கையில் உரிமை
இல்லையா? உலகத்தில் வேறெந்த நாட்டிலும் இல்லாத ஒரு நிலைமை எமது நாட்டில்
இருப்பதைக் கண்டு மிகவும் வருத்தமடைகின்றோம்.
எனினும், எமது மாவீரர் தெய்வங்களை நாம்
மனதில் வைத்து, வீட்டில் விளக்கேற்றி நினைவுகூருகின்றோம். மாவீரர்களின்
தியாகங்கள் வீண்போகாது. நிச்சயம் தமிழருக்கு விடுதலை கிடைக்கும்.
இவ்வாறு ரதன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment