அடுத்த
வருடம் 60 ஆயிரம் குடிசைக் கைத்தொழில்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றை
அபிவிருத்தி செய்வதற்கான பாரிய திட்டமொன்றை செயற்படுத்த நிதி
ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு
கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் கூறுகின்றார். இதேபோன்றுதான்
கடந்த ஆண்டிலும் அறிவித்தார்.
ஆனால் அவ்வாறு கடந்த வருடம்
அறிவிக்கப்பட்ட திட்டங்களை அவர் நடைமுறைப்படுத்தி உள்ளாரா? இவ்வாறு தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்
நேற்று நாடாளுமன்றில் கேள்வி எழுப்பினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:
இன்று அபிவிருத்தி தொடர்பாக ஊடகங்களில்
ஜனரஞ்சகமாகவும், ஜனாதிபதியைத் திருப்தியடையச் செய்வதற்காகவும் மாத்திரமே
செய்திகள் வெளிவருகின்றன. ஆனால் அவற்றில் வெளியிடப்படும் அறிவிப்புகள்
நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என்பதுதான் மக்கள் முன் எழுந்துள்ள கேள்வி.
பரந்தன் தொழிற்சாலை நமது நாட்டுக்குத் தேவையான இரசாயனப் பொருள்களில் பெரும்
பகுதியை உற்பத்தி செய்தது.
எனினும் கடந்த பல வருட காலமாக இந்தத்
தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது. பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீண்டும்
இயக்ங்கச்செய்ய மூன்று பில்லியன் செலவிலான உடன்படிக்கை ஒன்று
செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இந்தத் தொழிற்சாலையை மீண்டும்
இயங்கச் செய்வதன் மூலம் நமக்குத் தேவையான குளோரின் மற்றும் சலவைச் சோடா
ஆகியவற்றை உற்பத்தி செய்யமுடியும்.
இவ்வாறு நமக்குத் தேவையான சகல வளங்களும்
இங்கே இருக்கும்போது சலவை சோடாவைக்கூட நாம் இறக்குமதி செய்கின்றோம். எனவே,
உங்களுடைய செயற்றிட்டங்களை செய்தியாக மட்டும் வெளியிடாமல், செயலிலும்
காட்டுங்கள். இதன் மூலம் தொழில்வாய்ப்புகளை மட்டுமன்றி, அந்நியச்
செலவாணியையும் மீதப்படுத்த முடியும். அதேபோன்று காங்கேசன்துறை சிமெந்து
தொழிற்சாலையை மீண்டும் செயற்படுத்தவும், உற்பத்திகளை ஆரம்பிக்கவும் ஐக்கிய
அரபு நாட்டைச் சேர்ந்த “ரஸல் கைமா’ என்ற நிறுவனம் முன்வந்துள்ளது. அங்கு
முறைசார் சாத்தியவள கூற்றறிக்கை ஆய்வுசெய்யப்பட்டு 35 வருடகால ஒப்பந்தம்
ஒன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்தத் திட்டத்தையும்
செயற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடுகளைப் பரிசீலனை
செய்யும்போது பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு கைத்தொழில்
அபிவிருத்தி அமைச்சுக்குக் கடந்த ஆண்டைவிட மிகவும் குறைவாகவே நிதி
ஒதுக்கப்பட்டுள்ளது. குறைந்தளவான நிதியை வைத்துக்கொண்டு அமைச்சர் என்ன
அபிவிருத்தியை செய்யப்போகின்றார் என்று தெரியவில்லை என்றார்.
No comments:
Post a Comment