தமிழ்கூறும் நல்உலகம் தலைசிறந்த
தமிழ் அறிஞர், தனித்தமிழ் ஆர்வலர், இலக்கியச்செம்மல் திருக்குறள்மணி
புலவர் இறைக்குருவனார் அவர்களை இழந்துவிட்டது. புலவர் இறைக்குவனார்
மறைந்தார் என்ற செய்தி கேட்டு மாளாத் துயரில் மூழ்கியுள்ளோம். அவரது மறைவு
தமிழ்மொழிக்கும் தமிழ் இனத்துக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.
தனித்தமிழ் அறிஞரும் மிகச்சிறந்த
புலமையாளருமான திருக்குறள்மணி புலவர் இறைக்குருவனார் அவர்கள்
பட்டுக்கோட்டையில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு சென்னை திரும்பும்பொழுது
தஞ்சையில் இயற்கை எய்தினார். புலவர்மணி அவர்கள் தமிழறிஞர்
பெருஞ்சித்திரனார் அவர்களின் மருமகன் ஆவார். அய்யா பெருஞ்சித்திரனார்
அவர்களின் மறைவுக்குப் பின்னர் அவர் விட்டுச் சென்ற தமிழ்ப் பணியை
முன்னெடுத்துச் சென்றவர். தென்மொழி வெளியீட்டிலும் அய்யா
பெருஞ்சித்திரனார் அவர்களது பிற நூல்கள் வெளிவருவதிலும் தொடர்ந்து
பாடுபட்டவர்.
புலவர் இறைக்குருவனார் அவர்கள் திருவாரூர்
மாவட்டம் நன்னிலம் வட்டம் கீவாமங்கலம் என்னும் ஊரில் 1942 இல் பிறந்தவர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டம் பெற்றவர். இந்தி எதிர்ப்புப்
போரில் கலந்துகொண்டவர். செந்தமிழ்ச் சொற்பிறப்பியில் அகரமுதலியின்
பதிப்பாசிரியராகப் பணியாற்றியவர். தொல்காப்பிய ஆய்வுகளில்
ஈடுபட்டிருந்தவர். தமிழகத்தின் மிகச்சிறந்த புலவர்கள் வரிசையில்
இடம்பெறத்தக்க நுண்மாண்நுழைபுலம் படைத்தவர். மக்கள் தொலைக்காட்சியில்
தமிழக ஊர்ப்பெயர்கள் குறித்துத் தொடர்ந்து சொற்பொழிவாற்றியவர்.
தமிழிலக்கணம், வேர்ச்சொல் அகரமுதலி, பண்டைத்தமிழர் தொடராண்டுமுறை,
வல்லினம் மிகுதலும் மிகாமையும் உள்ளிட்ட அய்ம்பதுக்கும் அதிகமான நூல்களை
எழுதியவர். இவர் எழுதிய வயிரமூக்குத்தி நூல் இவரின் தமிழ்ப்புலமைக்குக்
கட்டியம் கூறும் படைப்பாகும்.
தமிழ்முறைத் திருமணங்களை திருக்குறள் மந்திரம் ஓதிச் செய்து வைத்தவர். புலவர் இறைக்குருவனார் ‘விடுலைப் புலிகள் தமிழ் வளர்ச்சிக் கழகம்’ தூய தமிழழை தமிழீழத்தில் நடைமுறைக்கு கொண்டுவர உறுதுணையாக இருந்தவர்.2006 ஆம் ஆண்டு தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் சிறப்பு அழைப்பின்பேரில் தமிழீழம் சென்று அவரது இல்லத்திலேயே இரண்டு கிழமை விருந்தினராக இருந்தவர். வன்னியில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் விடுதலைப்புலிகளால் அமைக்கப்பட்டு வந்த தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் கட்டிட வரைவைப் புலவர் இறைக்குருவனாருக்குக் காட்டி அவருடைய கருத்துக்களை பெற்றுக் கொண்டார்.
புலவர் இறைக்குருவனார் அவர்களது அடிகளைப் பின்பற்றி தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் தூய தமிழ்ப் பெயர்களுக்கு ஆண்டு தோறும் பரிசுகள் அளித்தும் தமிழ்முறைத் திருமணங்களை நடாத்தியும் தமிழ்ப் பணி ஆற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
அவரது இழப்பால் துயருறும் துணைவியார் பொற்கொடி, பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருக்கும் தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
தமிழுக்கு தொண்டு செய்வோர் சாவதில்லை. தமிழ்க் கவிஞன் பாரதிதான் செத்ததுண்டோ?
தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்
கனடா
No comments:
Post a Comment