Sunday, December 02, 2012

பயங்கரவாதச் சட்டத்தின் கீழேயே 4 பல்கலை. மாணவர்களும் கைது; உடன் விடுவிக்குமாறு தலைவர்கள் வலியுறுத்து

areபொலிஸாரால் விசாரணைக்கு என்று அழைத்துச் செல்லப்பட்ட யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயகொடி தெரிவித்தார்.
கட்சி அலுவலகம் ஒன்றின் மீது பெற்றோல் குண்டு வீசித் தாக்கியமை மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவான சுவரொட்டிகளை ஒட்டியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஏற்கெனவே மூன்று மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் உரும்பிராயைச் சேர்ந்த மருத்துவபீட மாணவரான கணேசமூர்த்தி சுதர்சனும் (வயது 22) நேற்று அதிகாலையில் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் பரமலிங்கம் தர்சானந்த் (வயது 24 கந்தர்மடம்), கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவரான கனகசுந்தரசுவாமி ஜெனமேஜெயன் (வயது 24 புதுக்குடியிருப்பு), விஞ்ஞானபீட மாணவர் ஒன்றியத்தைச் சேர்ந்த சண்முகம் சொலமன் (வயது 24 யாழ்ப்பாணம்) ஆகிய மாணவர்கள் முன்னதாகக் கைது செய்யப்பட்டிருந்தனர்.
நேற்றுக் காலையில் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர்கள் பின்னர் கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட உள்ளார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. கொழும்பு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்துவார்கள் என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
மாணவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை அரசின் மிக மோசமான அடக்குமுறை என்று அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள், சிவில் தலைவர்கள் கண்டித்துள்ளனர். மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கட்சி அலுவலகம் தாக்கப்பட்டமை குறித்து தாம் விசாரணைக்கு உட்படுத்தப் போவதாகத் தெரிவித்து 10 மாணவர்களின் பெயர் பட்டியல் பொலிஸாரால் யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டிருந்தது.
அதில் ஜெனமேஜெயன் மற்றும் சொலமன் ஆகிய இருவரும் பதில் துணைவேந்தர் வேல்நம்பியுடன் நேற்றுமுன்தினம் மாலை கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்குச் சென்றிருந்த சமயத்தில் தடுத்து வைக்கப்பட்டனர். தர்சானந்த் நேற்று அதிகாலையில் பொலிஸாரால் வீட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.
கடந்த புதன் கிழமை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய அமைதியான போராட்டம் மீது பொலிஸாரும் படையினரும் கடும் தாக்குதல்களை நடத்தியிருந்த நிலையில், இந்த நான்கு மாணவர்களும் கைது செய்யப்பட்டுள்ளமை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக சமூகத்தின் மத்தியில் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பை வன்முறையாக்காமல் மாணவர்கள் அமைதியான வழிமுறைகளில் தமது எதிர்ப்பைக் காட்ட முற்படவேண்டும் என்று மதத் தலைவர்களும் சிவில் தலைவர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

No comments:

Post a Comment