Sunday, December 02, 2012

எங்கு அடக்குமுறை பிரயோகிக்கப்படுகின்றதோ, அங்கு விடுதலைக்கான போராட்டம் ஆரம்பமாகும்!- சந்திரநேரு சந்திரகாந்தன்

imageஒரு இனத்துக்காக போராடி மடிந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதுக்கு கூட ஜனநாயக இலங்கை என்று கூறும் இந்நாட்டில் இடமில்லை. அண்மையில் யாழ் பல்கலைக் கழகத்தில் மாவீரர் தினம் அனுஷ்டித்ததற்காக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் உட்பட 4 மாணவர்கள் நேற்று அதிகாலை வேளையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யுத்தத்திலும், போராட்டத்திலும் வீரசாவு அடைந்தவர்களை நினைவுகூரும் உரிமை கூட தமிழ் மக்களுக்கு மறுக்கப்பட்டு, இத்தகைய கைதுகளும், வன்முறைகளும் மக்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளதுடன், இன்னுமொரு போராட்டத்துக்கு தமிழர்களை சிங்களம் வலிந்து அழைக்கின்றது என்பதே இதன் மூலம் உணர முடிகின்றது.
ஆனால் இம்முறை மாணவர்களால் ஏற்பட்டிருக்கின்ற போராட்டத்தினை சாதாரணமாக எடை போட வேண்டாம், இது அணையாது காட்டு தீ போல் பரவும்.

தென்னிலங்கையில் அரசாங்கத்துக்கு எதிராக போராடிய மக்கள் விடுதலை முன்னணியினரின் வீரர்கள் தினம் அனுஷ்டிக்க அனுமதியளித்துள்ள அரசாங்கம், ஏன் தமிழர்களுக்காக போராடிய வீரர்களுக்கு மாவீர தினத்தினை அனுஷ்டிக்க, அனுஷ்டிப்பதினை அனுமதிக்க, பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
எங்கு அடக்குமுறை பிரயோகிக்கப்படுகின்றதோ, அங்கு விடுதலைக்காக போராட்டம் ஆரம்பமாகும்.
கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கு அழைப்பு:
கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் ருகுணு பல்கலைக்கழக மாணவர்கள் வீதிக்கு வந்து போராடியும் ஏன் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் இன்னும் தாமதிக்கிறீர்கள்?
அரசியல் அறிக்கைகள் வேண்டாம்:
யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம், ஆனால் அதனை அரசியலாக்கி லாபம் நன்மை பெற முயற்சிக்க வேண்டாம்.
இது மாணவர்களின், தமிழர்களின் உணர்வு பிரச்சினை, மாணவர்களின் நியாயமான போரட்டத்தின் மூலம் அனைத்தையும் பெறுவர்.
என்று அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்தார்

No comments:

Post a Comment