Monday, December 03, 2012

வொசிங்டனில் சிறிலங்கா அதிபருடனான இராப்போசன விருந்தில் பங்கேற்ற நிருபமா ராவ்

mr-nuru1அமெரிக்காவுக்கான இந்தியத் தூதுவர் நிருபமா ராவ் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் இராப்போசன விருந்தில் பங்கேற்றதாக வொசிங்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கசகஸ்தான் பயணத்தை முடித்துக் கொண்டு தனிப்பட்ட பயணமாக அமெரிக்கா சென்றிருந்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வொசிங்டனுக்கு வெளியேயுள்ள மேரிலன்ட், பால்ரிமோரில் ஜோன் ஹொப்கின்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறிலங்கா பிரதமர் டி.எம். ஜெயரட்ணவை சந்தித்து நலம் விசாரித்தார்.
அதன் பின்னர், வொசிங்டனில் கடந்த 24ம் நாள் இரவு சிறிலங்கா தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய அளித்த இராப்போசன விருந்தில் பங்கேற்றார்.  வொசிங்டனில் இருந்து நியுயோர்க் புறப்படுவதற்கு முன்னர் அவர் பங்கேற்ற ஒரே நிகழ்வு இதுவாகும். சோறு, கறியுடனான அந்த இராப்போசன விருந்தில், சிறிலங்கா தூதரக அதிகாரிகளுடன் சுமார் 60 விருந்தினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் அனைவருமே வொசிங்டன் பெரும்பாக பிரதேசத்தில் வசிக்கும் சிறிலங்கர்கள். விதிவிலக்காக, அந்த விருந்தில் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதுவர் நிருபமா ராவும் பங்கேற்றார். சிறிலங்காவுக்கான இந்தியத் தூவராக இருந்தபோதும், பின்னர் இந்திய வெளிவிவகாரச் செயலராக இருந்தபோதும், சிறிலங்கா அதிபருடன் நிருபமா ராவ் நெருக்கமானவராக இருந்தார்.
வெளிவிவகாரச் செயலர் பதவியில் இருந்த விலகியபோது, இராஜீய நெறிமுறைகளுக்கு முரணாக, சிறிலங்கா அதிபரின் தனிப்பட்ட விருந்தில் பங்கேற்க, தனது கணவர் சுதாகர் ராவுடன் கொழும்பு சென்றிருந்தார். இந்தநிலையில், சிறிலங்கா அதிபர் பங்கேற்ற இராப்போசன விருந்தில் நிருபமாராவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதன் பின்னர், கடந்த ஞாயிற்றுக்கிழமை பால்ரிமோரில் இருந்து நியுயோர்க்கிற்கு சிறிலங்கா அதிபர் தொடரூந்து மூலம் சென்றார். இரகசிய சேவை முகவர்கள் அவருக்கு பாதுகாப்பு அளித்தனர். நியுயோர்க்கில் துறைமுக அதிகாரசபை முனையத்தில், சிறிலங்கா அதிபரை பாலித கொஹன்னவும், மேஜர் ஜெனரல் சவீந்தர சில்வாவும் வரவேற்றனர்.
அங்கிருந்து வாகன அணியாக, மகிந்த ராஜபக்ச வோல்டொப் அஸ்ரோரியா விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். திங்கட்கிழமை காலையில், எமிரேட்ஸ் விமானம் மூலம் நியுயோர்க்கில் இருந்து புறப்பட்ட மகிந்த ராஜபக்ச, டுபாயில் சிறிது நேரம் ஓய்வுக்குப் பின்னர், மற்றொரு எமிரேட்ஸ் விமானம் மூலம் செவ்வாய்க்கிழமை மாலை கொழும்பு திரும்பினார்.

No comments:

Post a Comment