Sunday, December 02, 2012

தமிழின ஒழிப்பைத் துரிதப்படுத்தும் பட்ஜெட்; அரசின் அராஜகம் குறித்து சுரேஷ் குமுறல்

TNAஇலங்கை அரசு சமர்ப்பிக்கும் வரவு செலவுத் திட்டங்கள் தமிழின ஒழிப்பை வேகப்படுத்தும் வகையிலேயே அமைந்துள்ளன என்று நேற்றுமுன்தினம் சபையில் சுட்டிக்காட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பொறுப்புக்கூறும் கடப்பாட்டை வெளிப்படுத்த இலங்கை அரசு மறுகின்றது என்றும் கூறியது.
அத்துடன், சம்பூர் என்ற கிராமம் இலங்கை வரைபடத்திலிருந்து அழிக்கப்பட்டுவிட்டது என்றும் கூட்டமைப்பு குறிப்பிட்டது. மீள்குடியேற்ற அமைச்சுக்கான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
அரசு தான் செய்யவேண்டிய கடமையைப் புறந்தள்ளிவிட்டு, தனது இராணுவ முன்னெடுப்புகளால் உயிருக்கு அஞ்சி நாட்டைவிட்டு வெளியேறி அங்கு அகதிகளாக வாழும் தமிழ் மக்களிடம் உள்நாட்டில் அகதிகளாக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவவேண்டும் என்று எதிர்பார்ப்பது வெட்கக்கேடான விடயம்.
ஆயினும் தங்களது கடின உழைப்பில் ஈட்டிய சொற்ப வருமானத்தில் தங்களது செலவுகளைக் குறைத்துக்கொண்டு எமது மக்களுக்கு அவர்கள் செய்திருக்கும் உதவிகள் அளப்பரியவை.
மீள்குடியேற்றத்துக்கென்று இந்த வரவுசெலவுத் திட்டத்தில் மூலதனச் செலவாக 26 கோடி 32லட்சத்து ரூபா 30ஆயிரம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகையில் தமிழ் மக்களின் அழிக்கப்பட்ட வீடுகளைக் கட்டுவதற்கும் வாழ்வாதாரங்களுக்கும் எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை அரசு இச்சபைக்குத் தெரிவிக்க வேண்டும்.
யாழ்.மாவட்டம் வலிகாமம் வடக்கில் மட்டும் 24 கிராமசேவையாளர் பிரிவுகளுக்குட்பட்ட கிராமங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மீள்குடியமர்த்தப்படவேண்டியுள்ளனர். இவர்கள் இடம்பெயர்க்கப்பட்டு இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாகிவிட்டன.
இவர்களது வீடுகள் அனைத்தும் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன. யாழ். மாவட்டத்தின் 11 முகாம்களிலும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடனும் இவர்களில் பல்லாயிரம் பேர் வாழ்கின்றனர்.

படையினர் மிரட்டல்
மாதகலில் உள்ள மக்களின் காணிகளைப் பலவந்தமாகப் பிடித்து வைத்திருக்கும் கடற்படையினர் காணிகளைத் தமக்கு எழுதிக்கொடுக்குமாறு மக்களை மிரட்டுகின்றனர்.
திருகோணமலை சம்பூர் பிரதேசத்தில் 1,500 இற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 7,000 இற்கும் மேற்பட்ட மக்கள் மீள்குடியேற்றப்படவேண்டியுள்ளனர். இன்று சம்பூர் என்ற கிராமமே இலங்கையின் வரைபடத்திலிருந்து அழிக்கப்பட்டிருக்கின்றது.

காணிகளுக்குந் செல்ல அனுமதி மறுப்பு
முல்லைத்தீவு கேப்பாபுலவில் 110 குடும்பங்கள் தங்களது காணிகளுக்குச் செல்ல விடாமல் தடுக்கப்பட்டிருக்கின்றன. மன்னார் முள்ளிக்குளத்தைச் சேர்ந்த 400 குடும்பத்தினர் தங்களது காணிகளுக்குச் செல்லவிடாமல் தடுக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி நகரத்தின் மையத்தில் பரவிப்பாஞ்சான் என்று அழைக்கப்படும் ஒரு கிராமம் முழுமையாக இராணுவத்தின் ஆக்கிரமிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
ஐ.நா.சபையின் கணக்குப்படி வன்னியில் மட்டும் இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாகவோ பகுதியாகவோ அழிக்கப்பட்டுள்ளன. அவை கட்டிக்கொடுக்கப்பட வேண்டும். மீள்குடியமர்வுக்கு வடக்குகிழக்கில் பெரியளவில் தேவை இருக்கும்போது ஓர் அற்ப தொகையே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மீள்குடியமர்வு தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளக இடம்பெயர்ந்தோர் உரிமைகள் தொடர்பான வழிகாட்டு நெறிகளுக்கு முரணாகவும் ஜெனிவா தீர்மானத்துக்கு முரணாகவும் மீள்குடியமர்வு என்ற பெயரால் அரங்கேற்றப்படும் சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிலைநாட்டும் வேலைத் திட்டங்களே நடைபெறுகின்றன.
போருக்குப் பின்னரான அனைத்து வரவுசெலவுத் திட்டங்களும் இன்றுவரை தமிழின ஒழிப்பை வேகப்படுத்துவதற்கான வரவுசெலவுத் திட்டங்களாகவே பார்க்க முடிகின்றது.
சர்வதேச நிறுவனங்களையோ, சர்வதேச சமூகத்தையோ எமது மக்களுக்கு உதவ விடாமல் இந்த அரசு தடுக்கின்றது. அவற்றுக்கும் மேலாக செய்யப்படும் உதவிகளையும் தட்டிப்பறிக்கின்றது. என்றார்.

No comments:

Post a Comment