யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையின் விநியோகப் பணியாளர் நா. பிரதீபன் அவர்கள் பத்திரிகை விநியோகப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டு காயப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர் எடுத்துச் சென்ற பத்திரிகைளும் அவரது மோட்டார் சைக்கிளும் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளது.
மற்றுமொரு விநியோகஸ்தரை அச்சுறுத்தும் வகையில் இனந்தெரியாத நபர்கள் பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.
எனினும் அவர்களது நடவடிக்கையை முன்கூட்டியே அவதானித்தமையினால் அவர் அதிஸ்டவசமாக தாக்குதல்களில் இருந்து தப்பித்துக் கொண்டார்.
காட்டுமிராண்டித்தனமானதும், மிலேச்சத்தனமானதுமான இத்தாக்குதல் சம்பவத்தினை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது.
தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்க முற்படும் தமிழ்த் தேசத்தின் பல்வேறு துறைசார்ந்தவர்கள் மீது தொடர்;ச்சியான அச்சுறுத்தல்களும் கைதுகளும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.
இதில் ஊடகத்துறை சார்ந்தவர்கள், மதத்தலைவர்கள், மருத்துவத் துறை சார்ந்தவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர், அரசியல் பிரமுகர்கள், முன்னாள் போராளிகள் மற்றும் அவர்களது குடும்ப அங்கத்தவர்கள், பொது மக்கள் போன்ற தரப்பினர் அண்மைக்காலத்தில் இவ்வாறான அச்சுறுத்தல்களுக்கும் விசாரணைகள் மற்றும் கைதுகளுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளமை அனைவரும் அறிந்ததே.
ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்காத, கருத்துக்களை கருத்துக்களால் வெல்லத் திராணியற்று வன்முறைக் காலாசாரத்திலும் கொலைக் கலாசாரத்திலும் நம்பிக்கை கொண்டுள்ள ஜனநாயக விரோத சக்திகளே இத்தாக்குதலை நடாத்தியுள்ளனர்.
தமிழ்த் தேசத்தின் இருப்பை அழிப்பதற்காக திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் இன அழிப்புச் செயற்பாடுகள் வெளிவராமல் தடுக்கும் வகையில் தமிழ் மக்களை மரண பயத்தில் தொடர்ந்து வைத்திருக்கும் நோக்கிலேயே இத்தாக்குதல் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இத் தாக்குதலானது கருத்துச் சுதந்திரத்திற்கும், ஊடக சுதந்திரத்திற்கும் விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகும். குறிப்பாக எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் மீளவும் இலங்கை தொடர்பான விவகாரம் எடுத்துக் கொள்ளப்படும்போது தமிழர் தாயகத்தில் இருந்து, எமது பிரச்சினைகள் தொடர்பான வெளிப்படுத்தல்கள் எதுவும் சர்வதேச சமூகத்தினை சென்றடையக் கூடாது என்பதற்காகவே இவ்வாறான அச்சுறுத்தல்களும் கைதுகளும் தொடர்சியாக மேற்கொள்ளப்படுகின்றது.
இராணுவத்தினரதும், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரதும் கைது வேட்டைகள் மிகத்தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில் மேற்படி தாக்குதல் சம்பவமானது ஸ்ரீலங்கா அரசுக்குத் தெரியாமல் ஒருபோதும் நடைபெற்றிருக்க வாய்ப்பு இல்லை.
இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் எனவும் கோருகின்றோம்.
செ.கஜேந்திரன்
பொதுச் செயலாளர்
தமிழத் தேசிய மக்கள் முன்னணி
No comments:
Post a Comment